வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதிகாலையில் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைந்து இருக்கிறது.
மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயலுக்கு 'சிட்ரங்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பெயரை தாய்லாந்து நாடு வழங்கியிருக்கிறது.
காலை 8.30 மணி நிலவரப்படி சாகர் தீவில் இருந்து 380 கி.மீட்டர் தொலைவிலும் வங்காளதேசத்தின் பாரிசாலுக்கு 670 கிமீ தெற்கே தென்மேற்கிலும் புயல் நிலை கொண்டு இருந்தது. இந்த புயல் மேலும் வலுவடைந்து அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
'சிட்ரங்' புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.