பகதூர் ஷா ஜஃபர் பிறந்த நாள்
முகலாயப் பேரரசின் கடைசி
மன்னர் பகதூர் ஷா ஜஃபர் (1775-1862).
1857ல் நடைபெற்ற முதல்
இந்திய விடுதலைப் போர் என்று அழைக்கப்படுகின்ற போரை முன்னின்று தீவிரமாக நடத்தியவர்.
இந்த விடுதலைப் போர், "ஆங்கிலேய ஆதிக்க ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பொங்கியெழுந்த பெருங் கோபத்தின் வெளிப்பாடுதான்” என்று வரலாறு பதிவு செய்துள்ளது.
இவர், 1775 அக்டோபர் 24-ஆம் நாள் தில்லியில் பிறந்தார்.
தந்தை 14ஆம் முகலாயப் பேரரசர் இரண்டாம் அக்பர் ஷா, தாய் லால் பாய்.
பகதூர்ஷா ஆன்மீக அறிவையும் உலக அறிவையும் போர்க்கலைகளில் முறையான பயிற்சியும் பெற்று மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்.
1857-இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிரான புரட்சியில் இந்திய வீரர்கள் ஈடுபடத் தொடங்கி, முதலில் பாரக்பூரிலும், மீரட்டிலும் கிளர்ச்சி பரவியது. அதைத் தொடர்ந்து கிளர்ச்சிப் படைகள் முன்னேறி 1857 மே 1-ஆம் தேதி தில்லி செங்கோட்டையை அடைந்து, அரண்மனையைக் கைப்பற்றியது.
ஆங்கிலேயர் தில்லியை இழந்தனர். பகதூர் ஷா மீண்டும் தமது அரசாட்சியை மே 12-ஆம் நாள் தொடங்கி பிரிட்டிஷாருக்கு எதிரான போரையும் அறிவித்தார்.
பின்னர், “பெரு நிர்வாக விவகாரங்கள் கவுன்சில்” என்ற அமைப்பினை உருவாக்கி சமயப் பாகுபாடின்றி தகுதியும் விசுவாசமுள்ள மக்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப பல பொறுப்புகளை வழங்கி, இந்து முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தாமல் புரட்சி வழிமுறைகளை திறன்பட
வகுத்தார். ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று படையினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஆங்கிலேயர் படையினர் போரில் பின்வாங்கிய பிறகு தில்லிக்கு வெளியிலிருந்து எவரெல்லாம் ஆங்கிலப் படைக்கு எதிராக புரட்சி செய்தார்களோ அந்த வீரர்களை பகதூர்ஷா அழைத்தார்.
இந்திய வீரர்கள் தில்லியை இழக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தனர். இந்நிலையில் தில்லியைக் கைப்பற்றப் பிரிட்டிஷார் தொடர்ந்து வஞ்சகச் சூழ்ச்சியில் ஈடுபட்டனர்.
இச்சூழலில், 1857, செப்டம்பர் 14-ஆம் நாள் வரை, இந்திய வீரர்களுக்கும் பிரிட்டிஷாரின் படைகளுக்கும் இடையே 72 முறை கடும் சண்டை நடந்தது. இறுதியில் ஆங்கிலேயக் கூட்டுப்படைகள் 1857, செப்டம்பர் 19-ஆம் நாள் செங்கோட்டையில் நுழைந்ததால் தில்லி ஆங்கிலேயர் வசமானது.
கடைசிவரை போராடிய பகதூர் ஷா தம் குடும்ப உறுப்பினர்களுடன் கோட்டையை விட்டு வெளியேறி ஹுமாயூன் கல்லறையில் அடைக்கலம் புகுந்தார். அங்கு தேடிவந்த பிரிட்டிஷ் படைகள் அவரை குற்றவாளி என அறிவித்து 1857 செப்டம்பர் 21-ஆம் தேதி கைது செய்தது.
மனைவி பேகம் ஜீனத் மஹல் மற்றும் இரண்டு மகன்களுடன் அவர்களை 1858 டிசம்பர் 8-ஆம் தேதி இரங்கூனுக்கு நாடு கடத்தியது. அடிமைக் கைதியாக வெஞ்சிறையில் 4 ஆண்டுகாலம் வாடினர்.
முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் பகதூர் ஷா ஜஃபர் நோய்வாய்ப்பட்டு, "நீ நேசித்த உனது தாய்நாட்டில் உனது கல்லறைக்கு ஆறடி நிலம்கூட
இல்லாது போனதே” என்று நொந்தபடி மனம் புழுங்கி 1862 நவம்பர் 7-ஆம் நாள் உயிரிழந்தார்.
(ஆங்கில மூலம் நன்றி: சைய்யது நசீர் அஹ்மது எழுதிய The Immortals)