Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

நம்மில் ஒருவர்
Oct 30 2022 நாடும் நடப்பும்

நம்மில் ஒருவர்

நம்மில் ஒருவர்

இவர் பெயர் முஹம்மத் ரஃபி. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியில் வசிக்கிறார். கை கொடுக்கும் கை என்ற தொண்டு நிறுவன அமைப்பாளர். இந்த அமைப்பின் மூலமாகப் பலருக்கு குருதிக்கொடை பெற்றுத் தந்துள்ளார். பல குருதிக்கொடை முகாம்களை நடத்தியுள்ளார்.இவர், தன் அமைப்பின் மூலம், புவனகிரி பேரூராட்சியில் சிலருக்கு ஊனமுற்றோருக்கான மூன்று சக்கர வண்டி உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத் தந்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழக அரசு சமூகநலத்துறையின் மூலம் பல நலத்திட்ட உதவிகளை ஏழை, எளியோர்க்குப் பெற்றுத் தந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, புவனகிரி பேரூராட்சியின் பல தேவைகளுக்காக முதலமைச்சர் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை கடிதங்கள், நினைவூட்டல் கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டு நிறைவேற்ற முயற்சித்துள்ளார்.

முதல் சேவை:

புவனகிரியில் வெள்ளாற்றின் குறுக்கே உள்ள பாலம் பழுதடைந்தது. அப்போது தமிழக முதல்வராக ஜெயலலிதா அம்மையார் இருந்தார். அவருக்கு நேரடியாக இவர் கடிதம் எழுதினார். அவர் முதல்வராக இருந்தபோது பழைய பாலத்துக்கு அருகே புதிய பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டு, ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் முதல்வராக இருந்தபோது பணிகள் முடிக்கப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது திறப்புவிழா நடைபெற்றது.

இரண்டாவது சேவை:

முன்பு, சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்ல வேண்டுமெனில் புவனகிரி வழியாகப் பேருந்துகள் செல்லும். பத்தாண்டுகளுக்கு முன் புவனகிரிக்கு கிழக்கே 7 கிமீ தொலைவில், பி. முட்லூர் கிராமத்தில், வெள்ளாற்றின் குறுக்கே புதுப்பாலம் கட்டித் திறக்கப்பட்டது. அந்த வழியாக, சிதம்பரத்திலிருந்து புவனகிரி வராமல் கடலூர் செல்ல முடியும். அதனால் 5 கிமீ பயண தூரம் குறையும். அதனால் சிதம்பரத்திலிருந்து பேருந்துகள் புவனகிரி வராமல் கடலூருக்குச் செல்ல ஆரம்பித்தன. குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டும் புவனகிரி வழியாகச் செல்ல ஆரம்பித்தன. இத்தனைக்கும் அரசுப் பேருந்துகள் உள்பட அத்தனைப் பேருந்துகளும் புவனகிரி வழியாகச் செல்லவே பர்மிட் பெற்றிருந்தன. இதனால் புவனகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அடிக்கடி கடலூருக்குப் பேருந்து கிடைக்காத நிலை ஏற்பட்டது. குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் கிடைத்ததால், பேருந்துகளில் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி கடலூர் பேருந்து நிலையத்தில், சிதம்பரம் செல்லும் பேருந்துகளின் நடத்துநர்கள், "பஸ் புவனகிரி போகாது; முட்லூர் வழியாகப் போகும்" எனச் சொல்லும் அவலநிலை ஏற்பட்டது. புவனகிரி அல்லது அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த யாரோ ஒருவர் சென்னைக்குச் சென்று திரும்பிவந்தால், சென்னையிலேயே பேருந்து நடத்துநர் புவனகிரி போகாது என்பார். சரி கடலூர் சென்று மாறிக் கொள்ளலாம் என்று இரவு 10 மணிக்கு கடலூரில் இறங்கினால், கடலூரில் சிதம்பரம் செல்லும் பேருந்து நடத்துநரும் பேருந்து புவனகிரி போகாது என்பார். இதைக் குறித்து ரஃபி அவர்கள், தன்னுடைய தொண்டு நிறுவனம் போலுள்ள மற்றத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டமும் நடத்தினார். அதுமட்டுமின்றி, தமிழக முதல்வருக்குக் கடிதமும் எழுதினார். அப்போது பொறுப்பு தமிழக தலைமைச் செயலாளராக, போக்குவரத்து முதன்மைச் செயலாளராக இருந்த டேவிதார் அவர்கள், கடலூர் மற்றும் சிதம்பரம் அரசு போக்குவரத்துக்கழகப் பணிமனை மேலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அது, "புவனகிரி வழியாகத்தான் அனைத்துப் பேருந்துகளும் செல்ல வேண்டும்" என்ற உத்தரவுக் கடிதம். அதன் ஒரு நகலை டேவிதார் அவர்கள் ரஃபி அவர்களுக்கு அனுப்பியிருந்தார். அந்த உத்தரவு நகலை, புவனகிரி - கடலூர் சாலையில், புவனகிரி பேருந்துநிலைய முகப்பில், பிளக்ஸ் தட்டியாகச் செய்து வைத்தார் ரஃபி.

மூன்றாவது சேவை:

புவனகிரியிலிருந்து 15 கிமீ தொலைவில் பரங்கிப்பேட்டை. அது கடற்கரையில் அமைந்துள்ள பேரூராட்சி. புவனகிரி வழியாகச் செல்கிற வெள்ளாறு அங்குதான் கடலில் கலக்கிறது. புவனகிரியில் ஏறக்குறைய எல்லோரும் ஆழ்துளைக் குடிநீர் மோட்டார் அமைத்துள்ளனர். அதனால், புவிக்கடியில் உள்ள நிலத்தடிநீர் அதிகமாக உறிஞ்சப்பட்டு, வங்காள விரிகுடாக் கடல்நீர் உள்ளே புகுந்துவிட்டது. பரங்கிப்பேட்டையில் வெள்ளாற்றில் ஏறும் ஓதம் (கடல்நீர் உள்ளே புகுதல்) புவனகிரி வரை பாதிக்கிறது. புவனகிரியில் யாருடைய வீட்டில் நீர் வாங்கிக் குடித்தாலும் லேசாக உப்புக் கரிக்கும். புவனகிரியில் யாருடைய வீட்டு நீரையும் நீங்கள் வாங்கிக் கொதிக்க வைக்க வேண்டியதில்லை: சூரிய ஒளியில் வைக்க வேண்டிய அவசியமுமில்லை; ஒரு பாத்திரத்தில் வைத்து, கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் பாத்திரங்களின் ஓரங்களில் வெள்ளையாக உப்புப் படிந்திருக்கும். இதைக் குறித்து, ரஃபி தமிழக அரசின் பல துறைகளுக்கு கடிதம் எழுதினார். தற்போது கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, குடிநீர்த் தேவைக்கு மட்டுமின்றி மற்ற தேவைகளுக்கும் நிலத்தடிநீர் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதற்காகவும் தமிழக முதலமைச்சர் முதல் அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதங்கள் எழுதினார். இதற்கொரு தீர்வு காணும் வகையில், வெள்ளாற்றில் புவனகிரி வரை ஏறும் கடல் ஓதத்தைத் தடுக்கும் வகையில் புவனகிரிக்கு கிழக்கே தம்பிக்குநல்லான் பட்டினம் கிராமத்தில் ஒரு தடுப்பணை கட்டும் அறிவிப்பு, ஜெயலலிதா அம்மையார் முதல்வராக இருந்தபோதே அறிவிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டு, ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

தற்போது துவங்கியுள்ள சேவைகள்:

இப்போது தனது அடுத்த பணிகளைத் துவக்கிவிட்டார் ரஃபி. புவனகிரி ஒரு பேரூராட்சியாக, ஊராட்சி ஒன்றியத் தலைநகராக (மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம்) மற்றும் புவனகிரி என்ற பெயரில் சட்டமன்றத் தொகுதி ஆகியவை இருந்தன. சிதம்பரம் வருவாய் வட்டத்தை - தாலுகாவை இரண்டாகப் பிரித்து, புவனகிரியைத் தலைநகராகக் கொண்ட ஒரு வருவாய் வட்டம் - தாலுகா, ஜெயலலிதா அம்மையார் முதல்வராக இருந்தபோது உருவாக்கப்பட்டது.

அதனால் புவனகிரி அரசு மருத்துவமனை - ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தது, நேரடியாகத் தாலுகா மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டது. அந்தத் தரம் உயர்வு வெறும் பெயர் மட்டுமே மாற்றப்பட்ட பெயரளவு தாலுகா மருத்துவமனையாக மாறியது. ஒரு தாலுகா மருத்துவமனையில் இருக்கவேண்டிய அளவு மருத்துவர்களின் எண்ணிக்கையோ, மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையோ, மருத்துவ வசதிகளோ புவனகிரி தாலுகா மருத்துவமனையில் இல்லை. எனவே, தரம் உயர்த்தப்பட்ட அளவுக்கு மருத்துவர்களின் எண்ணிக்கையையும், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையையும் உயர்த்துவதோடு, மருத்துவ வசதிகளையும் அதிகரிக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதங்கள், நினைவூட்டல் கடிதங்கள் எழுதத் துவங்கியுள்ளார்.

அதேபோன்று புவனகிரி காவல்நிலையமும் ஜெயலலிதா அம்மையார் காலத்தில் தாலுகா காவல்நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டு, பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு ரூ 1 கோடி செலவில் புதுக் கட்டிடமும் கட்டப்பட்டது. ஆனால், புவனகிரி தாலுகா காவல்நிலையத்தில் காவலர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. புவனகிரி தாலுகா காவல்நிலையம் காவலர்களின் எண்ணிக்கையை உயர்த்தச் சொல்லி காவல்துறையின் உயரதிகாரியான டிஜிபி முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்.

ரஃபி அவர்களது தந்தையும் புவனகிரி மற்றும் சிதம்பரம் பகுதியில் பிரபலமானவர். அவர் காலஞ்சென்ற,தமிழ்ப் புலவர் - புலவர் மஹபூப் கான் அவர்கள். தங்குதடையின்றித் தமிழில் உரையாற்றும் ஆற்றல் பெற்றவர் என்பதால் அவரது நண்பர்கள், மாணவர்கள் மற்றும் தமிழார்வலர்களால் 'தமிழ்க் கொண்டல்' என அன்போடு அழைக்கப்பட்டார். 'கொண்டல்' என்றால் மழை மேகம் எனப் பொருள். புலவர் அவர்கள், புவனகிரி மதார்பாடா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமைதோறும் சீறாப் புராணம் குறித்து உரையாற்றி இருக்கிறார். மாற்று மத அன்பர்களும் அவரை நேசித்தனர்.

Related News