தமிழக உள்ளாட்சிகள் நாளான இன்று, கடலூர் மாவட்டம் *பரங்கிப்பேட்டை தேர்வுநிலை பேரூராட்சி* வார்டு 1ல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க நகர்ப்புற உள்ளாட்சிக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அந்த வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும், அந்த வார்டு உறுப்பினருமான தேன்மொழி சங்கர் அவர்களும், பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் ஹாஜி Dr. Ln M.S. முஹம்மது யூனுஸ் அவர்களும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத்தின் மற்ற வார்டு உறுப்பினர்களும், பரங்கிப்பேட்டை வாழ் சமூக ஆர்வலர்களும், மற்றும் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்துத் தங்கள் கோரிக்கைகளைக் கூறினர். பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக செய்து தரப்படும் எனப் பேரூராட்சிமன்றத் தலைவர் உறுதியளித்தார். இக்கூட்டத்தின் இறுதியில் பேரூராட்சிமன்றத் துணைத் தலைவர் நன்றிகூற, கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.