ஊடகவியலாளர்களுக்கு - பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையின்மையை முடிவுகட்டும் நாள்
இது ஐநாவால் அங்கீகரிக்கப்பட்டு ஆண்டுதோறும் நவம்பர் 2 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குற்றங்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது, அனைவருக்குமான கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது ஆகியவை இந்நாளின் முக்கிய நோக்கங்களாகும்.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனையிலிருந்து விலக்குப் பெறுவது என்பது அனைத்துக் குடிமக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல்களை அணுகுவதற்கான முக்கியமான பிரச்சினையாகும். 2006ஆம் ஆண்டு மற்றும் 2020ஆம் ஆண்டுக்கிடையில் உண்மைச் செய்திகளை அளித்ததற்காகவும், பொதுமக்களுக்குத் தகவல்களைக் கொண்டு வந்ததற்காகவும் 1,200க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொலை வழக்குகளில் பத்தில் ஒன்பது வழக்குகளில் சம்பந்தப்பட்டக் கொலையாளிகள் தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்படுகிறார்கள் என்று யுனெஸ்கோ கண்காணிப்பு அமைப்பும், ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பும் தெரிவிக்கின்றன. இவ்வாறு சமூக விரோதிகள் தண்டனையின்றி விடுவிக்கப்பட்டால், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலைகளை அதிகரிக்க வழிவகுக்கிறது. இவ்வாறு நிகழ்வது சட்டம் மற்றும் நீதித்துறையின் சிதைவுக்கு வழிவகுப்பதோடு, சமூக ஒழுங்கு மோசமடைவதற்கும் காரணமாகிறது.
இந்த நாள் உருவான வரலாறு:
கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் சிவில் சமூக அமைப்புகளின் உலகளாவிய அமைப்பான பன்னாட்டுக் கருத்துச் சுதந்திரப் பரிமாற்றம் IFEX எனும் அமைப்பு 2011ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியை ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்குத் தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டுவரும் பன்னாட்டு நாளாக அறிவித்தது. ஏனெனில், 2009ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்றுதான், ஆப்ரிக்காவில் அம்பட்டுவான் அல்லது மகின்டனாவோ - Ampatuan or Maguindanao படுகொலை நிகழ்ந்தது. இப்படுகொலையில் 32 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர். இது ஊடகவியல் வரலாற்றில் மிகக் கொடிய தாக்குதலாகும்.
டிசம்பர் 2013ல் IFEX உறுப்பினர்கள் மற்றும் பிற சிவில் சமூக கருத்துச் சுதந்திரப் பாதுகாவலர்களின் தொடர் பரப்புரைக்குப் பிறகு, ஐநா பொதுச் சபையின் 70வது முழுமையான கூட்டத்தில் 68/163 என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்தீர்மானத்தில் நவம்பர் 2ஆம் தேதியை பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையைக் குறைக்கும் நாளாகக் கடைபிடிப்பதென அறிவிக்கப்பட்டது. ஏனெனில் 2013ஆம் ஆண்டு, நவம்பர் 2 அன்று ஆப்ரிக்காவின் மாலி நாட்டில் இரண்டு ஃபிரெஞ்ச் ஊடகவியலாளர்களான கிஸ்லைன் டுபான் Ghislaine Dupont மற்றும் கிலாட் வெர்லோன் Claude Verlon ஆகியோர் சமூக விரோதிகளால் கொல்லப்பட்டனர்.
IFEX அமைப்பு தற்போது 'நோ இம்யூனிட்டி' - 'தண்டனையின்மை இல்லை' என்ற பரப்புரையை ஒருங்கிணைக்கிறது. இந்தப் பரப்புரை மூலம் ஊடகவியலாளர்கள் ஒரு செய்தியை சுதந்திரமாக வெளியிடுவதற்கும், அவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டால் சமூக விரோதிகளால் குறிவைக்கப்பட்டு, பாதிப்பு ஏற்படலாம் என்பதால் அவர்களின் கருத்துச் சுதந்திர உரிமைக்காகவும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.