பள்ளிவாசல் கட்டிடத்தை தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்
மதுரை மாநகரம் மஹபூப்பாளையம் பகுதியில் புதிய பள்ளிவாசலை நேற்று (நவம்பர் மூன்றாம் தேதி) தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் திறந்துவைத்தார்.
இவ்விழாவில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் முனைவர் ஜவாஹிருல்லா அவர்களும், எஸ் டி பி ஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் அவர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் அவர்களும், மதுரை மேயர் இந்திராணி அவர்களும், மதுரை துணை மேயர் நாகராஜன் அவர்களும், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அல்ஹாஜ் P.A. காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இவ்விழாவில் கலந்து கொண்ட பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களிடம் மஹபூப்பாளையம் பகுதி மக்கள் சார்பாக ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது, அவர்களுக்கு ஆங்கிலேயர் காலத்தில் அடக்க ஸ்தலத்திற்காக கொடுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன; எனவே, அந்த இடத்தை மீட்டுத் தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.
நெல்லை முபாரக் அவர்கள் பேசும் பொழுது, "இங்கே சிறுபான்மையினத் தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது நமது பிடிஆர் அவர்கள் இப்பள்ளியைத் திறந்து வைப்பது, அம்மக்களுக்கும் அவர்களுக்கும் மதத்தைக் கடந்து இருக்கும் ஒரு அன்னியோன்யத்தைக் குறிக்கின்றது", என்று குறிப்பிட்டார்.
பிறகு அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கி இவ்விழா இனிதே நிறைவு பெற்றது.