Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

ஞாபக மறதிக் குறை
Nov 04 2022 வாழ்வியல்

ஞாபக மறதிக் குறை

ஞாபக மறதி

ஞாபக மறதி என்பது ஒரு விதத்தில் கொடை தான் என்றாலும்,அது அனைத்துக்கும் பொருந்தி வருவது இல்லை. பலரையும் பாதிப்பது இந்த ஞாபக மறதி. சரியான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கிறார் உளவியல் நிபுணர்கள். மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று நேரத்தை திட்டமிடாமை. காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் அவசரமாகவும், படபடப்புடன் செய்வதால் மனம் நிம்மதியற்றுப் போகிறது. இந்தச் சூழலில் சாதாரண நிகழ்வுகள் கூட எளிதில் மறந்து விடுகிறது. நேரத்தை திட்டம் இடுவதன் மூலம் படபடப்பில் இருந்து விடுபட முடியும். மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமானதைத்  திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக மாற்றலாம். அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்குக் கொண்டு வர முடியும். மறதிக்கு இன்னொரு முக்கியக் காரணம் கவனச் சிதறல் தான் இதனால்      முக்கியவற்றை  நினைவில் பதியாமல் போய் விடுகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்வது மற்றும் எண்ணத்தை வேறு பக்கம் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாகக் கை விட வேண்டும். இவர்கள் ஒரே நேரத்தில் ஒரே ஒரு வேலையில் முழுக் கவனம் செலுத்தினால்  மறதியைத் தடுக்க முடியும். ஞாபக மறதி ஏற்படாமல் தடுக்க மனப்பயிற்சியே அவசியமாகிறது. மனதை ஒரு நிலைப்படுத்திப் பழகும் பொழுது பயிற்சி காரணமாக மனம் எந்த செயலைச் செய்கிறோமோ அதில் நிலைத்து இருக்கும் ஆற்றலைப் பெற்று விடுகிறது. மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகப் படுத்துவதன் மூலமும் மறதியை விரட்டி விடலாம். அதிகாலையில் எழுந்து நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் உடற்பயிற்சி செய்யும் பொழுது மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இரத்தம் மூளைக்கு அதிகமாகப் பாயும் பொழுது, அதிலுள்ள ஆக்ஸிஜனை மூளை அதிகமாகப் பெற்றுக் கொள்கிறது. இதுவே இயற்கை மின்சக்தியாகும். எனவே அதிகாலையில் எழுவது,உடற்பயிற்சிகள் செய்வது,மூச்சுப் பயிற்சி போன்ற பழக்கங்களை தவறாமல் செய்ய  வேண்டும். அவ்வாறாயின் அவர்கள் இயல்பாகவே நினைவாற்றல் உடையவர்களாக மாறி விடுவார்கள். மேலும் முதுமையிலும் மறதி என்பது அவர்களுக்கு ஏற்படாது. மிகப் பெரிய அறிவியலாளர்கள் கூட ஞாபக மறதியால் மிகவும் அவதிப்பட்டு இருக்கிறார்கள். 

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் ஒரு மறதிக்காரர். ஒரு முறை அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார். டிக்கெட் பரிசோதகர் வந்து பயணிகளின் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட  ஐன்ஸ்டின் தன்னுடைய டிக்கெட்டை எடுக்க பைக்குள் கையை விட்டார். அங்கு டிக்கெட் இல்லாமல் போகவே அதிர்ச்சி அடைந்தார். தன் கைப்பையை  முழுவதுமாகப் புரட்டிப் போட்டுப் பார்த்தார் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகரும் ஐன்ஸ்டினிடம் வந்து டிக்கெட்டைக் கேட்டார். அவரோ செய்வது அறியாமல் மலங்க மலங்க விழித்தார். டிக்கெட் பரிசோதகருக்கு அவரின் நிலைமை புரிந்து விட்டது. எனவே அவர் ''நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி என்பது எனக்கு மட்டுமல்ல, இந்த இரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் தெரியும். எனவே நீங்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க மாட்டீர்கள் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். எனவே நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. நிம்மதியாகப் பயணத்தைத் தொடருங்கள்", என்றார். அப்பொழுது ஐன்ஸ்டின் என்ன சொன்னார் தெரியுமா? "அதுவல்ல என் பிரச்சினை. டிக்கெட் வேண்டும் என்றால் என்னால் இன்னொன்று கூட  வாங்கிக் கொள்ள முடியும்.ஆனால், நான் எந்த ஊருக்குப் போய்க் கொண்டு இருக்கிறேன் என்பதை அந்த டிக்கெட்டைப் பார்த்தால் தானே எனக்குத் தெரியும்! இப்பொழுது டிக்கெட் பரிசோதகர் திருதிருவென விழித்தார்.

ஆம் நண்பர்களே..

நினைவாற்றலை அதிகரிக்கப் பயிற்சி அளிக்கலாம். புதிர் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடலாம்.

எப்போதும் பரபரப்பாக இருப்பதை விடுத்து மனதை அமைதியாக வைத்திருப்பது அவசியம்..

நேரத்தையும், வேலையையும் திட்டமிடுவதன் மூலம் மறதிக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

முக்கியமாக, மறதிக்காக கவலைப்படக் கூடாது. இதனாலும் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.