கரூரில் பன்னாட்டு முருங்கைக்காய் கண்காட்சித் திருவிழா!துவக்க விழாவில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், விவசாயிகள் பங்கேற்பு!
கரூர் புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து சர்வதேச முருங்கைக்காய் கண்காட்சி திருவிழா இன்று 4.11.22 காலை துவக்கப்பட்டது. இதில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியின் துவக்கவிழா நிநிகழ்ச்சியானது 4/11/2022 அன்று காலை 10 மணிக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்து, கண்காட்சியில் அமைக்கப்பட்ட அரங்குகளைப் (ஸ்டால்களைப்) பார்வையிட்டார். விழாவில் அருட்தந்தை ஜெகத் கஸ்பர், விவசாயிகள், இளம் தொழில் முனைவோர், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு, கண்காட்சியைக் கண்டு ரசித்தனர். நேற்று (வெள்ளிக்கிழமை) காலை துவங்கிய நிகழ்ச்சி வரும் ஞாயிறு (ஆறாம் தேதி) வரை நடக்கவிருக்கிறது.
கண்காட்சியில் விவசாயம் சார்ந்த பலவிதமான எந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் 50 அரங்குகளில் பல வகையான முருங்கைக்காய் காட்சிப்படுத்தப்பட்டன. முருங்கைக்காய் பொடி, முருங்கையின் குணாதிசயம், முருங்கையைச் சார்ந்த மருத்துவம், முருங்கையின் வளர்ச்சி, அதன் தன்மை, நன்மை எனப் பல ஆச்சரியமூட்டும் தகவல்களோடு குறிப்புகளை வைத்திருந்தனர். பொதுமக்கள் இவற்றைக் கண்டு ரசித்ததோடு, முருங்கைக்காயின் சில நன்மைகளையும் அறிந்து சென்றனர். உடல் நலம் சார்ந்த 27 வகையான முருங்கைப் பொருட்கள் இந்நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. பொதுமக்களுடன், சமூக ஆர்வலர்களும், உள்ளூர் - வெளியூர் விவசாயிகள் மற்றும் உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் விவசாயிகள் இக்கண்காட்சியைக் காண உள்ளனர்.
மேலும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், வேளாண்மை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோரும் வரும் நாட்களில் இக்கண்காட்சியில் கலந்துகொள்ள உள்ளதாகத் தகவல் உள்ளது.
உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் தாவரவியலாளர்கள், முருங்கை சார்ந்த தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
பிரேசில், கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, லெபனான், துபாய், இலங்கை எனப் பல வெளிநாட்டினரும் இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பாக துவக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் முருங்கை மரம், முருங்கைக்காய், முருங்கை விதை, முருங்கை எண்ணை ஆகியவற்றை நேரடியாக உற்பத்திச் செய்யும் முறை, மேம்படுத்தப்பட்ட முருங்கை உற்பத்தி மற்றும் முருங்கை உற்பத்தியாளர்களைப் பற்றிய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியில் பலவிதமான முருங்கைக்காய் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன முருங்கையின் பலதரப்பட்ட நன்மைகளைப் பற்றியும், அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும், அதன் மருத்துவகுணம் மற்றும் குணாதிசயங்கள் பற்றியும் நிகழ்ச்சியில் விளக்கிக் கூறப்பட்டது.
இன்னும் இரு தினங்கள் நடக்கவிருக்கும் இவ்விழாவில் பலரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியில் அமைந்திருந்த அரங்குகளில் உள்ள நபர்களிடத்தில் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் முருங்கைக்காய் தொடர்பான தகவல்களைப் பெரும் ஆர்வத்துடன் கேட்டும், அறிந்தும் சென்றனர்.