தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை
மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினத்தில் (நவ.11) கொண்டாடப்படும் தேசியக் கல்வி தினத்தை தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாட தமிழக முதல்வருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!
மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினத்தில் (நவ.11) கொண்டாடப்படும் தேசியக் கல்வி தினத்தை தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாட தமிழக முதல்வருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை.
இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான டாக்டர் மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினத்தில் (நவ.11) கொண்டாடப்படும் தேசியக் கல்வி தினத்தை, தமிழக அரசு சிறப்பாக அனைத்து கல்வி நிலையங்களிலும் கொண்டாட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கும், தமிழக உயர் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;
இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான டாக்டர் மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினமான நவ.11 தேசியக் கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது. சாதி, மத, இனப் பாகுபாடின்றி அனைவரும் தரமான கல்வி பெற வேண்டும், 14 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள், இலவசக் கட்டாய கல்விக்குக் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஆரம்பக் கல்வி தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
இந்தியாவின் கல்விமுறையை புதுமையை நோக்கி முதன்முதலில் நகர்த்திய பெருமைக்குரிய மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவுகூரும் வகையில், நவ.11ம் தேதி கொண்டாடப்படும் தேசிய கல்வி தினத்தை தமிழக அரசு சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்துக் கல்வி நிலையங்களிலும் அதுதொடர்பான நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களை அன்புடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
அரசின் அறிக்கைகள், பள்ளி, கல்லூரிகளில் கருத்தரங்கு நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், கல்வி விழிப்புணர்வு மற்றும் போட்டி நிகழ்ச்சிகள், கல்வியில் சிறந்தவர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் மூலமாக மெளலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவுகூர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் தேசத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்திட்ட தலைவர்களின் பெருமைகளை அவர்களின் வரலாறுகளை மாணவர்களிடத்தில் கொண்டு சேர்த்திட வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளார்.