கோவையின் குட்டிப் பெருமை!
டர்ட் பைக் பந்தயத்தில், மண் மற்றும் மேடுகளில் அச்சமின்றி சீறிப்பாயும் குட்டிப்புலி வோல்டோ, ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற இலக்கோடு பயணித்து வருகிறார்.
கோவை குட்டிப் பையனின் சாகசம்:
Dirt (டர்ட்) பைக் பந்தயத்தில் பதக்கங்களை குவிக்கும் சிறுவன். கோவை போத்தனூரில் வசிக்கும் கேசவன், இவருடைய ஏழு வயது மகன் வோல்டோ. அப்பகுதியிலுள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயது முதலே பைக் மீதுள்ள ஆர்வத்தால் ஐந்து வயது முதல் தொடங்கி முறையாக தந்தையின் உதவியும், பயிற்சியாளர் ஆனந்த் ஆகியோருடைய தொடர் பயிற்றுவிப்பால், பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். டர்ட் என்பது மண் மேடு பள்ளத்தில் இருசக்கர வாகனத்தை ஒட்டி சாகசம் செய்வதாகும். மாநில அளவிலான சிறுவர்களுக்கான டர்ட் பைக் பந்தயத்தில் பல்வேறு பதக்கங்களையும் கோப்பைகளையும் குவித்து சாதித்த வோல்டோ, எம்ஆர்எப் நிறுவனம் நடத்திய சிறுவர்களுக்கான டர்ட் பைக் பந்தயத்திலும் கலந்து கொண்டிருக்கிறார். மண் மற்றும் மேடுகளில் அச்சமின்றி சீறீப்பாயும் வோல்டோ, தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்றும் சிறந்த பந்தய வீரராகவும் திகழ வேண்டும் என இலக்கை நிர்ணயித்துப் பயணித்து வருகிறார்.