மரணம் தரும் பாடம்
நீதி மன்றம் உனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கி விட்டது... நாளை பொழுது விடிந்ததும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுவிடும்!'' என்று ஒரு குற்றவாளியிடம் சொல்லப்பட்டது.
தூக்கு தண்டனை மறுநாள் வழங்கப்பட இருந்த போதும் இன்றே அது வழங்கப் பட்டுவிட்டது போன்றதோர் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது.
அவனுக்கு வாழ்க்கை மதிப்பற்றுப் போனது; அவனது சிரிப்பும் பேச்சும் முடிவுற்றுப் போயின. பிறருக்கு எதிராக எழுந்த அவனது கைகள் யாருக்கு எதிராகவும் எழுவதற்குத் தகுதியற்றுப் போயின. எங்கும் ஓடிச்செல்வதற்குச் சுதந்திரமாக இருந்த அவனது கால்களில் இப்போது, தப்பி ஓட முயல்வதற்குக் கூட வலுவில்லாமல் போனது.
ஒவ்வொருவரு மனிதனுடைய பிரச்சனையும் இதுதான் என்பதை மரணம் நமக்குக் காட்டுகிறது.
இன்று உயிரோடு இருக்கும் ஒவ்வொரு மனிதனும் நாளை 'தூக்கு மேடை'யில் தொங்கியாக வேண்டும். ஆனால் ஒவ்வொரு மனிதனும் அலட்சியமாக இருக்கிறான்.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய 'இன்றில்' மூழ்கிக் கிடக்கி்றான். தன்னுடைய 'நாளை 'யைப் பற்றிய உணர்வு யாருக்கும் இல்லை.
இங்கே ஒவ்வொரு மனிதனும் 'குற்றவாளி'தான். ஆனால், தான் குற்றவாளியாக இருப்பதை அறிந்திருப்பவர்கள் மிகக்குறைவே!
மனிதன் பூமியில் அலைந்து திரிகிறான். பார்க்கிறான், கேட்கிறான். அவன் தன் செல்வதிற்கும் நட்புகளுக்கும் இடையில் இருக்கிறான்.
பிறகு எதிர்பார்த்திராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அவனது அனுமதியின்றியே மரணம் திடீரென அவனிடம் வந்து விடுகிறது.
நடந்து கொண்டிருந்த அவனது கால்கள் நின்று விடுகின்றன; அவனது கண்கள் ஒளியிழந்து விடுகின்றன; அவன் தன்னுடைய ஒவ்வொரு பொருளிலிருந்தும் விடுபட்டுச் சவக்குழியின் தனிமைக்குச் சென்றுவிடுகிறான்.
மரணத்தின் இச்சம்பவம் மனிதனின் உண்மை நிலையை உணர்த்துகிறது.
இது மனிதன், அதிகாரத்திலிருந்து அதிகாரமின்மையின்பால் செல்வதையும், வெளிச்சத்திலிருந்து இருளின்பால் செல்வதையும், 'எல்லாம்' என்பதிலிருந்து, ‘ஏதுமில்லை’ என்பதின்பால் செல்வதையும் காட்டுகிறது.
மரணத்திற்கு முன்பு தம் எண்ணங்களுக்குத் தம்மையே அதிபதியாகக் காணும் ஓர் உலகில் இருந்த மனிதன், மரணத்திற்குப் பிறகு வேறொருவனின் நிர்ப்பந்தத்தின் கீழ் இருந்தாக வேண்டிய ஓர் உலகிற்குச் சென்றுவிடுகிறான்.
மனிதன் இந்த உண்மையை நினைவில் வைத்து கொண்டால் அவனது வாழ்க்கை மாறிவிடும்.
ஒருவனைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து துன்புறுத்துவதென்பது அவனுக்கு நகைப்புக்குரிய ஒன்றாகத் தெரியும். ஏனென்றால் நாளை வேறொருவனின் காட்டுப்பாட்டின் கீழ் செல்லவிருக்கும் ஒரு மனிதன் பிறரைத் துன்புறுத்தி எதை அடையப்போகிறான்?
தன்னைப் 'பெரியவன்' என எண்ணுவதற்கு அவன் வெட்கப்படுவான்.
ஏனென்றால் இறுதியில் பறிபோகவிருக்கும் 'பெருமை' என்ன பெருமை?
மவ்லானா வஹீதுத்தீன் கான்
(நூல்: அல்லாஹு அக்பர், பக். 221)
தமிழில்: ஃபைஸ் காதிரி