திப்பு சுல்தான் (1750 - 1799)
இன்று (நவம்பர் 10) திப்புசுல்தான் பிறந்தநாள்
மைசூர்ப் புலி திப்பு சுல்தான் ஒரு தொலைநோக்குச் சிந்தனையாளர். அவர் ஆங்கிலேயரைக் குலை நடுங்கச் செய்தவர் மட்டும் அல்ல. ஒரு சீரிய மதச்சார்பற்ற ஆட்சியாளராகவும், சமூக சீர்திருத்தப் புரட்சியாளராகவும் விளங்கினார்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், தேவனஹல்லி கிராமத்தில் 1750, நவம்பர் 10ஆம் நாள் பிறந்த திப்பு பல்வேறு போர்க்கலைகளை முறையாக தனது தந்தையிடம் பயின்றார்.
திப்பு சுல்தானின் வீர தீர சாகசங்கள் அனைவரும் அறிந்ததே. 1782-இல் தந்தை ஹைதர் அலி மறைவுக்குப் பின் மைசூருக்கு மன்னராகிய திப்புவின் மதச்சார்பற்ற ஆட்சி மற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் அதிகம் அறியப்படாதவை.
திப்பு தனது ஆளுகையின் கீழ் உள்ள கோயில்களுக்குத் தாராளமாக மானியங்களை வழங்கினார்.
அதன் பட்டியல் இதோ:
# கி.பி.1786: மேலக்கோட்டை நரசிம்மசாமி
கோயிலுக்கு தங்க, வெள்ளி ஆராதனைப் பாத்திரங்கள், பாரசீக மொழிப் பட்டயம் ஆகியவற்றுடன் 12 யானைகளும் பரிசாக வழங்கினார். நாராயணசாமி கோவிலுக்கும், கந்தேஸ்வரசாமி கோவிலுக்கும் ரத்தின ஆராதனைத் தட்டுக்கள் வழங்கினார்.
# நஞ்சன் கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர்
ஆலயத்திற்கும் மரகதலிங்கம் வழங்கினார். அதன் பெயர் இன்றும் ‘‘பாதுஷாலிங்கம்” என்று வழங்கப்படுகின்றது.
# குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கும்
அக்கோவிலைச் சுற்றியுள்ள நிலவரி வசூல் செய்யும் உரிமையை தானம் வழங்கினார்.
# கி.பி.1790-ல் காஞ்சிபுரம் கோவிலுக்கும் 10,000 வராகன் நன்கொடை வழங்கினார்.
# மைசூரில் உள்ள தொன்னூரில் இராமனுஜகுளம் துார்வாரி செப்பனிட்டார் திப்பு.
பாபா புதன்கிரி என்ற தத்தாத்ரீயபீடம்
மடத்திற்கும் இருபது சிற்றூர்கள் இனாமாகவும், புஷ்பகிரி மடத்திற்கு இரண்டு கிராமங்கள் மானியமாகவும் திப்பு வழங்கினார்.
# சிருங்கேரி மடத்தில் ஹைதர் அலியின்
சனதுகள் (Grant) மூன்றும், திப்பு சுல்தானில் சனதுகள் முப்பதும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
# கி.பி. 1793-ல் சங்கராச்சாரியார் சச்சிதானந்த பாரதிக்கு திப்பு சுல்தான் எழுதிய கடிதம் இன்றும் மைசூர் நூலகத்தில் உள்ளது. இந்நூலகத்தில் ஹிந்துக் கோயில்கள் பலவற்றுக்கு திப்பு வழங்கிய மானியங்கள் பற்றிய அரசு ஆணைகள் பல உள்ளன.
சாரதாதேவி பீடம் மீட்டவர் திப்பு
கி.பி 1771-1772க்கும் இடையில் மராட்டியர்களுடன்
ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் பல போர்க்களங்களில் மோதிக் கொண்டனர். கொள்ளையர்களான மராட்டியர் சாரதா தேவி சிலையை (அன்றைய மதிப்பே 60 லட்சம் பொன்!) கொள்ளையடித்து பரசுராம் பாகுவே தலைமையில் சென்றபோது அவர்களை விரட்டியடித்து அச்சிலையைத் திரும்பக் கொணர்ந்து சிருங்கேரியில் நிறுவச் செய்த பெருமை திப்புசுல்தானையே சாரும்!
சமூகநீதி, மக்கள்தொகை அடிப்படையில் மானியம் வழங்கியவர்!
திப்பு ஆட்சி செய்த மைசூர் பகுதியில் 90 சதவீதம் ஹிந்துக்களும், 10 சதவீத முஸ்லிம்களுமே வாழ்ந்தனர். ஒரே ஆண்டுமட்டும் ஹிந்து கோயில்களுக்கும், அறநிறுவனங்களுக்கும் 1,93,959 வராகன்களும், பிராமண மடங்களுக்கு என 20,000 வராகன்களும் ஆக மொத்தம் 2,33,959 வராகன்களை திப்பு வழங்கினார்.
ஆனால் முஸ்லிம் நிறுவனங்களுக்கு 20,000 வராகன்கள் மட்டுமே வழங்கப்பட்டன. திப்புவின் கருவூலத்திலிருந்து அறநிறுவனங்களுக்கு மத ரீதியான மக்கள் தொகை விழுக்காட்டின் அடிப்படையில் சமநீதியுடன் வழங்கிய முதல் இந்திய மன்னன் திப்பு சுல்தான் மட்டுமே.
ஆதாரம் (கி.பி. 1798 MYSORE GEZETEER பக்கம் 38. VOL IV 1929)
சமூக சீர்திருத்தம்
மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி உயர் மானங்காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கினார் மாவீரன் திப்பு.
இதே போல் குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைச் சட்டம் இயற்றி தடுத்தார் திப்பு.
திப்புசுல்தான் மைசூரில் நரபலியையும், கோயில்களின் தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் இயற்றினார்.. மதுவிலக்கை முழுமையாக அமலாக்கினார்.
மத ஒற்றுமையும், மதுவிலக்கும் திப்பு சுல்தானின் இரு கண்களாக இருந்தன.
பிரமிக்கத்தக்க வகையில் அனைத்து மக்களையும் அரவணைத்து மதச்சார்பற்ற சமூக நீதி ஆட்சியை நடத்திய திப்புவை கண்டு அன்று ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள்.
இன்றோ மதச்சார்பின்மையையும், சமூக நீதியையும் எதிர்ப்பவர்கள் மதச்சார்பற்ற சமூக நீதி ஆட்சியை நடத்திய திப்புவை வெறுக்கின்றார்கள்.
(ஆதாரம்: Tipu Sultan The Great – Dr. P.Chinnaian
Vision of Tipu Sultan, Tiger of Mysore – Dr. Sheik Ali)