சிற்றறிவின் பார்வையில்
மனிதர்கள் ஒவ்வொரு வரும் வெவ்வேறுவிதமான அறிவாற்றல்கள் பெற்றவர்கள். ஒருவருக்குள் ஏற்படும் சிந்தனை மற்றொருவருக்குள் அதே மாதிரியாக தோன்றும். அல்லது, தோன்றாமலும் போகலாம். அவ்வகையில், இறைவனின் மாபெரும் வல்லமையை குறிக்கும் 'குர்ஆன் ' வாசிக்கும் பொழுது எனக்குள் பலவிதமான கேள்வி கற்பனை, ஞானம் ஏற்படுவதை உணரமுடிகிறது.
அப்படி, இன்று காலை 'குர்ஆன் ' வாசிக்கும் பொழுது 6:103: அல் அன்ஆம் (கால்நடை) என்னும் அத்தியாயத்தில், ஒரு வசனத்தால் ஏற்பட்ட சிந்தனை!
பார்வைகள் அவனை அடைய முடியாது. ஆனால் அவனோ எல்லா பார்வைகளையும் அடைவான், அவன் நுட்பமானவன், அனைத்தையும் நன்கறிந்தவன்."
சாதாரணமாக இதுபோல் வாசித்துவிட்டு கடந்து விடுவதுண்டு, சிலர் அதைப்பற்றி மேலோட்டமாய் அல்லது ஆழமாய் சிந்திப்பதுமுண்டு.
அவ்வகையில், என் சிற்றறிவிற்குத் தோன்றியது இதுதான், 'பார்வை அவனை அடைய முடியாது' என்கிறான். ஏன்?
பிரபஞ்சம் என்பது சாதாரண கட்டமைப்பல்ல. இந்தப் பால்வீதி (galaxy)ல் பரவி கிடக்கும் ஒவ்வொன்றும் ஒரு மாபெரும் பிரமிப்பு. செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் ஒரு குறிப்பிட்ட எல்லையை தொடுவதற்கே ஐந்து ஆண்டுகள் ஆகிறது என்றால், இதன் நீளம், அகலம், அளவுகோள் என்னவென்று சொல்வது?
இப்படிப்பட்ட ஒரு மாபெரும் ஆற்றல்மிக்க ஒரு சக்தி (இறைவன்) தன் இருப்பிடத்தை எப்படி உயர்வாய், ஆழமாய், பரந்து விரிந்த ஒரு சாம்ராஜ்யமாய் அமைத்து இருப்பான் என்பதை எண்ணினால் நம் கற்பனைக்கு விடையில்லை.
அவன் கூறுவதைப்போல் அவனுடைய பார்வைதான் நம்மீது தவிர, நம் பார்வை அவன் மீதல்ல. இப்படிப்பட்ட ஒருவருக்குதான் அறியாமையில் இருக்கும்,
ஆதமின் பிள்ளைகள் சிலர், ஒரு குறிப்பிட்ட உருவத்தில், வடிவத்தில் அவனையமைத்து பெருமைப்படுத்தி, அவன் அனுமதிக்காத நிலையில் தங்களுடைய அறியாமையால் வழிப்பட்டு வருகின்றனர் என்பது பரிதாபமே.
சூரிய ஒளியே நம் கண்களால் (இறைவனின் பார்வையில் இதுவொரு சாதாரண படைப்பே) தொடர்ந்து பார்க்க இயலாத நிலையென்றால், இறைவனின் அந்த மாபெரும் 'பிரமாண்ட ஒளி'யை எப்படிக் காண இயலும்?
அப்படிக் காண விரும்புபவர்கள், அவன் வரையறுத்த "குர்ஆனின்" அடிப்படையில் நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்வைப் பேணி காத்தாலின்றி அடைய முடியாது. என்பதே உண்மை.
இறைவனை நேரில் காண சந்தர்ப்பம் கிடைத்தும், மூஸா நபிக்குத் தன் கண்களால் காண இயலவில்லை. (மயங்கிவிழுந்தார்) என்று குர்ஆனில், 'அல்லாஹ்' குறிப்பிடுவதை அறிவீர்கள்.
நம் பார்வைக் கொண்டு அவனைக் காண மறுமை வரை காத்திருப்பது மட்டுமின்றி, அதற்குரிய தகுதியை நாம் குர்ஆனிய, ஹதீஸ் முறையில் நம் வாழ்வில் அமைத்துக்கொள்ள முயல்வோம், இன்ஷாஅல்லாஹ்.