கேரளாவில் நடைபெற்ற குங்ஃபூ அண்ட் கராத்தே அகில இந்திய இன்டர்ஸ்கூல் டோர்னமெண்ட்
கேரள மாநிலம் திருச்சூரில் கிரேட் மார்ஷியல் அகடாமியின் 35வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சூர் உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்ட குங்ஃபூ அண்ட் கராத்தே டோர்னமெண்ட் நிகழ்ச்சி நடந்தது.
20.11.22 ஞாயிறு காலை 10 மணிக்கு தொடங்கிய இவ்விளையாட்டு நிகழ்ச்சி மாலை வரை நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலிருந்து கலந்துகொண்டனர். 7 வயது முதல் 15 வயது வரையிலான சிறுவர்கள், சிறுமிகள் கலந்து கொண்டு வீர சாகசங்கள் செய்து, பரிசுச் சான்றிதழுடன் கோப்பைகளும் வென்றனர். இப்போட்டியில் பலரும் தனது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் கேரளக் காவல்துறை டிஐஜி புட்டால் விமலாதித்யா ஐபிஎஸ் அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளைக் கொடுத்து அனைவரையும் கௌரவித்தார்.
மேலும் திருச்சூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கிரேட் மார்ஷல் ஆர்ட்ஸ் அகடாமியின் பொறுப்பாளர்கள் தலைவர் ஏசி தாமஸ், செயலாளர் ராஜு, உறுப்பினர்கள் கிரீசன் கே.ஆர்., செபி P.L, குங்ஃபூ மாஸ்டர் நரேஷ் கிருஷ்ணா, ஹன்சி ராஜகுரு ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை மாமல்லபுரத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 'இன்டர்நேஷனல் மன்சூரியா குங்ஃபூ' அமைப்பின் நிர்வாகிகள் தலைவர் மல்லை சத்யா சிஃபு (மதிமுக தலைமைக்குழு உறுப்பினர்), அசோக்குமார் சிஃபு ஆகிய குழுவினரின் மேற்பார்வையில் அமைந்த தீர்ப்பின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கராத்தே கட்டா போட்டிகளில் தமிழகத்திலிருந்து பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டு பங்கேற்ற நிலையில், குங்ஃபூவில் கேரளாவைச் சார்ந்தவர்களே அதிகமானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் குங்ஃபூவில் ஒரே ஒரு சிறுவன் மட்டும் கோவையிலிருந்து கலந்துகொண்டார். 25 கிலோ எடை பிரிவில் நபீல் அஹ்மத் என்ற 10 வயதுச் சிறுவன் தமிழ், உருது, இங்கிலீஷ், மலையாளம் எனப் பலமொழி பேசி, அங்குமிங்குமாய் ஓடியாடி துரு துருவெனத் திரிந்து, சாகசம் செய்வதைக் கண்ட பொதுமக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
குங்ஃபூ போட்டியில் கலந்து கொண்ட இச்சிறுவன் 25 கிலோ எடைப் பிரிவில் தனது திறமையை வெளிக்காட்டி இரண்டாவது பரிசை தட்டிச் சென்றார்.
இச்சிறுவனுக்கு கொடுத்த குறிப்பிட்ட நிமிடத்திற்குள் தனது திறமையைச் சரியாக வெளிப்படுத்தினார்.
இச்சிறுவன் கோவை போத்தனூரைச் சேர்ந்த நம் சுட்டுவிரல் நிருபர் தாஜுதீன் - 'போத்தனூர் தாஜ்' அவர்களின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.