நவம்பர் 21: உலக தொலைக்காட்சி நாள்!
உலக தொலைக்காட்சி நாள் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1996ம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலகத் தொலைக்காட்சி கருத்தரங்கில் ஐ.நா. நவம்பர் 21ம் தேதியை உலகத் தொலைக்காட்சி நாளாக அறிவித்தது. இந்த உலக தொலைக்காட்சி நாளில் மனிதனின் வாழ்க்கையில் தொலைக்காட்சியின் பங்கு குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உலகின் எந்த மூலையில் என்ன சம்பவங்கள் நடைபெற்றாலும் நம் கண் முன்னே கொண்டு வருவதில் தொலைக்காட்சியின் பங்கு அளப்பரியது. பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவராலும் தொலைக்காட்சியில் வரும் செய்திகள் மூலம் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள முடியும்.
1920ஆம் ஆண்டு ஜான் லோகி பெயர்ட் ( John Logie Baird ) என்பவர் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தார். அன்று முதல் இன்று வரை தொலைக்காட்சி பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை அடைந்துள்ளது. தொலைக்காட்சி வந்த நாளிலிருந்து தற்போதுவரை மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த சாதனமாக தொலைக்காட்சி விளங்குகிறது.
குறிப்பாக 90s கிட்ஸ் வாழ்க்கையில் தொலைக்காட்சி முக்கியப் பங்காற்றியது. 90கள் காலங்களில் தொலைக்காட்சி என்பது அனைத்து வீடுகளிலும் இருக்காது. ஒரு கிராமத்தில் 10 பேரின் வீட்டில் இருப்பது அபூர்வமாக இருந்தது. அன்றைய காலத்தில் 90களின் குழந்தைகள், வார இறுதி நாட்களில் வெறும் தொலைக்காட்சி நிகழ்வுகளைப் பார்க்க கிராமத்தில் டிவி இருக்கும் வீடுகளில்தான் ஒன்று கூடுவர்.
கேபிள் வசதி அவ்வளவாக இல்லாத காலம் அது. எனவே டிவி இருக்கும் வீடுகளில் பெரும்பாலும் தூர்தஷன் சேனல்தான் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்தான் டிவி பார்க்க முடியும். அதிலும் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் ஒளியும், ஒலியும், சனிக்கிழமைகளில் ஜூனியர் ஜி, ஞாயிற்றுக்கிழமை காலையில் இராமாயணம், மதியம் சக்திமான் சீரியல், மாலை 4 மணிக்கு சாப்பிட வாங்க நிகழ்ச்சி, அதைத்தொடர்ந்து ஒளிப்பரப்பாகும் திரைப்படம் என இவற்றைக் காண ஒரு கூட்டமே காத்திருக்கும். இது 90s கிட்ஸ்களின் அழகான வசந்த காலமாக இருந்தது.
பின்னர், சன்டிவி சீரியல்களான மெட்டி ஒலி, சித்தி, கோலங்கள், பொதிகை டிவியில் ஒளிப்பரப்பாகும் அஞ்சு-மஞ்சு, வாழ்க்கை, எத்தனை மனிதர்கள் போன்ற சீரியல்கள் இல்லதரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள, இரவு 8 மணிக்கு செய்திகள் ஒளிபரப்பாகும்.
ஆரம்ப கால கட்டத்தில் தகவல் தொடர்புச் சாதனம்போல இருந்த தொலைக்காட்சி 90கள் காலங்களில் அறிமுகமான சன்டிவி, ராஜ்டிவி, ஜெயா டிவி போன்ற டிவி சேனல்களின் மூலம் பொழுதுபோக்குச் சாதனமாக மாறியது. குறிப்பாக வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கில் முக்கிய அங்கமாக மாறியது. திரைப்படங்கள், சீரியல்கள் போன்றவை இல்லத்தரசிகளின் விருப்பமான நிகழ்ச்சிகளாக மாறின.
1980 கால கட்டங்களில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியின் ஆதிக்கம்தான் அதிகமாக காணப்பட்டது. அதன் பிறகு 1990 காலகட்டங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கலர் டிவிகள் வந்தன. தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து கிராமங்களிலும் கலர் டிவிகளை கொண்டு சேர்த்த பெருமை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைச் சாரும். பாமர மக்களின் வீடுகளிலும் தொலைக்காட்சி என்பது அவரது காலத்தில் சாத்தியமானது.
இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொலைக்காட்சியில் பல்வேறு வகைகள் வந்துவிட்டன. முன்பு டிவியை மேசையில் வைத்து பார்ப்பது தான் வழக்கம். ஆனால் தற்போது வரும் டிவிகள் அனைத்தும் சுவரில் மாட்டுவது போன்ற அமைப்புடையதாக வந்துவிட்டன. எல்சிடி, எல்இடி, ஸ்மார்ட் டிவி என பல வகைகளில் வந்து விட்டன. அன்றைய காலங்களில் வீட்டிற்கு ஒரு டிவி இருப்பது அரிதான விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது வீடுகளில் 2 டிவி என்பது மிகச் சாதாரணமாக மாறிவிட்டது.
90s கிட்ஸ்களின் வாழ்க்கையில் தொலைக்காட்சி என்பது அவர்களின் வாழ்க்கையில் ஒன்றிணைந்த அங்கமாகத் திகழ்ந்தது. ஆனால் இன்றைய 2k கிட்ஸ்களின் வாழ்க்கையில் தொலைக்காட்சி என்பது அப்படியில்லை. அவர்கள் பெரும்பாலான பொழுதை கைப்பேசிகளில் உள்ள விளையாட்டுகளிலேயே கழிக்கின்றனர். டிவி ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும் அனைவரது கைகளிலும் உள்ள கைப்பேசிகளில்தான் கண்கள் முகாமிட்டு நிற்கின்றன.
தொலைக்காட்சி கடந்துவந்த மைல்கற்கள்
ஒளி, ஒலியை ஒன்றாக இணைத்து காட்சிப்படுத்துவது தொலைக்காட்சி. ஆன்டெனாவில் தொடங்கி, கேபிள், டிஷ்ஷில் ஒளிபரப்பாகி, இன்று இணையம் வரை தொலைக்காட்சி வளர்ந்துவிட்டது.