உலகக்கோப்பை கால்பந்து வீரருக்கு முகம், தாடை எலும்புகள் முறிந்தன! மேல்சிகிச்சைக்காக ஜெர்மனி பயணம்!
கத்தார் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா நாட்டுக்கு எதிரான போட்டியில் கலந்துகொண்ட சௌதி வீரர் ஒருவருக்குத் தாடை மற்றும் முக எலும்புகளில் முறிவு ஏற்பட்டது.
நவம்பர் 22 செவ்வாயன்று கத்தார் நாட்டில் சி குரூப்பில் இடம்பெற்ற சௌதி மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கிடையே லீக் சுற்றுப்போட்டி நடைபெற்றது. அதில் யாரும் எதிர்பாராத விதத்தில் அர்ஜென்டினாவை சௌதி அணி தோற்கடித்தது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பல தடவை ஃபைனல் வரை சென்ற, சில தடவை வென்றிருக்கிற; கால்பந்து ஜாம்பவான் டீகோ மரடோனா இடம்பெற்று வெற்றிகளைக் குவித்த அர்ஜென்டினா அணி சௌதி அணியிடம் தோற்றது கால்பந்து உலகில் பரபரப்புச் செய்தியானது. இச்செய்தியைக் கேள்விப்பட்ட உடன், சௌதி மன்னர் சௌதியில் வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக ஒருநாள் பொது விடுமுறையும் அறிவித்தார்.
வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒருபுறமிருக்க அப்போட்டியில் ஒரு விபத்து நிகழ்ந்த சோகமும் நடைபெற்றது. சௌதி நாட்டின் வீரர் அதே நாட்டு வீரர் முகத்தில் மோதிய விபத்துச் சம்பவம்தான் அந்தச் சோகம். விபத்துக்குள்ளான சௌதி அணி வீரரின் பெயர் யாஸர் அல்-ஷஹ்ரானி. அப்போட்டியின்போது, அவர் மீது சக நாட்டு வீரரான முஹம்மத் அல்-உவைஸ் மோதினார். அதனால் யாஸருக்கு முகம் மற்றும் தாடையில் காயம் ஏற்பட்டு, மைதானத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக ஸ்டிரெச்சரில் கத்தார் நாட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை முடிந்தவுடன், அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்பரிசோதனையில், அவருக்கு முகம் மற்றும் தாடை எலும்புகளில் முறிவுகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. ரசிகர்கள் செய்த பிரார்த்தனையால், அவர் தற்போது பேசுகின்றார். தன் ரசிகர்களுக்கு அனுப்பிய செய்தியில் தான் நலமாக இருப்பதாகக் கூறினார். எல்லா புகழும் இறைவனுக்கே!
ஆனால், முகம் மற்றும் தாடை எலும்புகளில் ஏற்பட்ட முறிவுகளைச் சரிசெய்ய வேண்டியது அவசியமென மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அதனால், அவரை மேல் சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு அனுப்புவதென சௌதி அரசு முடிவு செய்தது. இன்று அவர் விமானம் மூலம் ஜெர்மனி புறப்படுகிறார். அடுத்து வரும் லீக் சுற்று ஆட்டங்களில் அவர் கலந்துகொள்ளமாட்டார் எனத் தெரிகிறது.