யாருமறியா ரகசியம்!
என் அனுபவம்!
2003 என்று நினைக்கிறேன். சென்னை நங்கைநல்லூரில் பேக்கரி பணியில் இருந்தேன். காலை 6 மணிக்கு பணி தொடங்கினால், மதியம் இரண்டு மணிக்கு முடிந்து விடும்.
பிறகு உணவு, மதியம் உறக்கம், குளியலென நான்கு மணி வரை நடக்கும். நான்கு மணிக்கு மேல் இரவு 10 மணி வரை எந்தவொரு வேலையும் இல்லை, ஓய்வு தான்.
இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்ற வேண்டுமென 'ஹிந்தி படிக்கலாம்' என முடிவு செய்தேன்.
இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம், இதுதான்: நான் மும்பையில் 1995 முதல் 2000 வரை ஐந்தாண்டுகள் வசித்தேன். அந்நேரம் நானே சுயமாக இந்தி வாசிக்க கற்றுக் கொண்டேன்.
எப்படி தமிழ்நாட்டில் இருக்கையில், டீக்கடை பெஞ்ச், சலூன் கடையென நாளிதழ் வாசிப்பிற்கு பயன்படுத்திக் கொண்டேனோ, அது போலவே ஹிந்தி கற்றுக்கொள்ளவும் ஆர்வமுடன் இவ்விடங்களை மும்பை பகுதியில் பயன்படுத்திக் கொண்டேன். சற்று, கற்றும் தேர்ந்தேன்.
இரண்டாயிரத்துக்கு பின், சென்னை, கோவையென மாறி மாறிப் படையெடுத்தேன் (பயணித்தேன்). திரைத்துறையில் எதையாவது சாதித்து நம் பெயரை டைட்டில் கார்டில் பதித்து விட வேண்டுமென ஆர்வம் அப்போது மேலோங்கியது. மேலும் இங்கு,இந்தி படித்தால் அதன் பயன் நமக்கு ஏதோ ஒரு வகையில் திரைத்துறையில் பயன்படுமென தியாகராயநகரில் 'இந்தி பிரச்சார சபா' சென்று விசாரித்து, பணம் கட்டி விண்ணப்பித்தேன்.
அடிப்படை ஹிந்தி (பிராத்மிக்) ஆறு மாத கால பயிற்சி, தினசரி மாலை 5 முதல் 7 மணி வரை.வகுப்பில் என்னோடு ஏழு வயது முதல் 70 வயது பாட்டி, தாத்தாவென பலரும் இருந்தனர்.
அதிலொருவர் வித்தியாசமாய் 65 வயது மதிக்கத்தக்க மனிதர் என் பார்வையில் தென்பட்டார்.
அவர் ஜோல்னா பை, உடுத்தியிருக்கும் ஆடை சற்று வித்தியாசமாய்த் தோன்றினார். வருவார்,போவார்.
சில நேரங்களில் வகுப்பு முடித்துவிட்டு நேராக பிளாட்ஃபாமில் நடந்து அப்படியே நந்தனம் ஏரியாவை நோக்கி செல்வார். சில நேரங்களில் தனது ஃபியட் காரில் வருவதும் வழக்கம்.
ஆறு மாத கால வகுப்பின், நான்கு மாதங்கள் கடந்த நிலையில் பிறகுதான் அந்த பெரியவருடன் பேசக்கூடிய சந்தர்ப்பம் வந்தது.
அப்படி இந்த இரண்டு மாத காலம் மிகவும் நெருங்கி விட்டார், அந்த டிப் டாப் ஜோல்னாப்பை பெரியவர்.
எனக்கோ வயது முப்பதுதான். ஆனால் பெரியவர் நல்ல மரியாதையாக, பணிவாய்ப் பேசுவதில் எனக்கு ஆச்சரியம். நான் ஒருமுறை அவரிடம் நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்டுவிட்டேன்.
"எதற்காக இந்தி படிக்கிறீர்கள் இந்த வயதில்?"
"சும்மா டைம் பாஸ்தான். நான் திருநெல்வேலி மாவட்ட ரிட்டயர்ட் கலெக்டர்" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.
என்னைப்பற்றி அவர் விசாரித்தார். எனது லட்சியம், தற்சமயம் நான் செய்யும் வேலை ஆகிய தகவல்களைக் கொடுத்தேன்.
"திரைத்துறையில் என்னவாக முயற்சிக்கிறீர்கள்" என்றவரிடம், என் பதில்: "பாடலாசிரியராக முயல்கிறேன்" என்றேன்.
"பாடல்கள் எழுத தெரியுமா?" என்றவரிடம் கையோடு எப்போதும் நான் வைத்திருக்கின்ற டைரியை அவரிடம் கொடுத்தேன்.
"சாரி தம்பி! எனக்கு கொஞ்சம் பார்வை மங்கலா இருக்கு. நீங்களே படிச்சு சொல்லுங்களேன்.." என்றார்.
"படிக்கிறதில்ல.. பாடிக்காட்டுறேன்..பாடலாகவே" என்று நான் பாடினேன். ஆள் நடமாட்டமில்லாத சாலையோர பிளாட்ஃபாமில் நின்றவாறு. பின்னர் இரண்டு மூன்று பாடல்கள் எடுத்து விட்டேன் பல்லவி, சரணமென்று.
"அருமை..அருமை.. தம்பி! ரொம்ப நல்லா இருக்கு. ரொம்பப் பிரமாதமா வருவீங்க.. பெரிய ஆளா வரணும்னு நான் பிரார்த்திக்கிறேன்" என்று முடித்தார். இந்த இரண்டு மாதத்தில் நான்கு முறை தனது ஃபியட் காரில் தி.நகர் பேருந்து நிலையம் வரை என்னை அவர் காரில் ட்ராப் செய்துள்ளார்.
சில நேரம் இருவரும் பிளாட்பார்மில் நடந்த வாரே உரையாடி செல்வோம். மொத்தம் ஆறு மாத காலம் முடிந்தது. தேர்வும் நல்ல முறையில் எழுதி முடித்தோம்.
தேர்வு அறையிலும் அவரை சந்தித்து உரையாடினேன். பிறகு அடுத்த வகுப்புக்கு ஒன்றரை இரண்டு மாதம் இடைவெளி இருப்பதால் அவரிடம் இருந்து விடைபெற்றேன்.
அந்த இரண்டு மாத காலத்தில்தான் மாயாஜாலமாய் நிகழ்ந்ததுபின்வரும் சம்பவங்கள்.
இரண்டு மாதத்திற்கு பின், அடுத்த கட்ட வகுப்பு தொடங்கியது 'மத்யமா' வகுப்பு. அனைவரும் இருந்தனர். அதே மாணவர் குழு, நான்கு ஐந்து பேரைத் தவிர. இவர்களோடு அந்த ஜோல்னாப்பை பெரியவரையும் காணவில்லை.
'ஒருவேளை ஃபெயிலாகி இருப்பாரோ' என் மனவோட்டம்.
நமக்கு வகுப்பெடுக்கும் காந்தி சார் - பாண்டிச்சேரிக்காரர் வந்தார், மென்மையான குணமுடையோர்.
வகுப்பை, தொடங்கினார், "எல்லாரும் எப்படி இருக்கீங்க?"..
நலம் விசாரித்த படி, "ம்.. சொல்ல மறந்துட்டேன்.. போன கிளாஸ்ல ஒரு பெரியவர் வந்து பின்னாடி உட்கார்ந்து படிச்சுட்டுருந்தாருல்ல"
"ஆமாம் "
அனைவரும் தலையாட்டினார். "அவர் யாரு தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க.."
என் மனதில், 'ஏன் என்னாச்சு.. ஏதாவது அசம்பாவிதம் நடந்துருச்சா.. யாரு.. அவரு?'
காந்தி சாரைக் கவனித்தேன்.
"போன வாரம் மூன்று பேர் ஆபீசுக்கு வந்தாங்க.. அந்தப் பெரியவரோட சான்றிதழ் வேண்டும்னு கேட்டாங்க ஆபீஸ்ல. அதெல்லாம் கொடுக்க முடியாது, அவர்தான் வரணும்னு சொன்னோம்.. அதுக்கு அவங்க அவரால வர முடியாது. அவர் யாருன்னு தெரியுமா?" என்று அந்த மூன்றுபேர் அலுவலகத்தில் அவர் வகிக்கும் பதவி என்னவென்று தெரியப்படுத்திவிட்டு, அச்சான்றிதழைப் பெற்றுச் சென்றனர். என்னால் நம்ப முடியவில்லை. எவ்வளவு அமைதியா வந்து உட்கார்ந்துட்டு படிச்சிட்டுப் போயிருக்காரு. நமக்கும் ஒரு பெருமைதான். இல்லையா..நம்மகிட்ட வந்து இங்கே படிச்சுட்டு போயிருக்காருன்னா.." பூரிப்போடு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் காந்தி சார். என் பங்குக்கு நானும் அவரைப் பற்றி நல்லவிதமா எடுத்துரைத்தேன். ஆச்சரியமாக இருந்தது எனக்கும். 'இவர் கூடவா இவ்வளவு நாள் நான் காரில் எல்லாம் பயணித்தேன்?'
அவர் படித்துக் கொண்டிருந்த நேரம், அவரைப் பற்றிய எந்த ஒரு தகவலும் யாருக்கும் தெரியாது. அவரிடம் யாரும் பேசவும் முன் வந்ததில்லை நான் மட்டுமே அந்த இறுதி இரண்டு மாதம் அதிகபட்சமாக அவரிடம் நட்புடன் இருந்தேன்.
ஆனால், அவர் சார்ந்த கட்சியோ அவருக்கு, 2004 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். இது அவருக்கும், அக்கட்சித் தலைமைக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
அதனால் அவருக்கு டெல்லி போகவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கைக்காக இந்தி கற்க வந்துள்ளார் என்பதுதான் உண்மை.
நான் பேசியவரை நிச்சயமாக எனக்கும் தெரியாது. என்னிடம் அவர் நிறைய சந்தேகங்கள் ஹிந்தியில் கேட்டிருக்கிறார். ஹிந்தியில் எப்படி சொல்வது எப்படி பேசுவதென நான் அவருக்கு கூறியுள்ளேன். அவரும் ஆர்வத்துடன் கேட்டு அறிந்துள்ளார் என்னிடம். அதனால் ஒரு அடிப்படை தெரிந்துக்கொள்ள ஆர்வத்தோடு வந்து கற்றுக் கொண்டார். அதே நேரத்தில் அவருடைய நம்பிக்கை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
காரணம், வெறும் வேட்பாளராக அறிவிப்பு மட்டும் செய்திருக்கும் நிலையில், வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் அமர்வோம், ஹிந்தி தேவைப்படுமென்று எப்படி தோன்றிற்று. என்ன நம்பிக்கை? அதுவும் 65 வயதில்! இது பெரிய அதிசயம், ஆச்சரியம்.
கட்சி சார்பில் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆனால் செய்தித்தாள்களில் எதுவும் இவர் பதவியேற்கும் முன் வரை யாரும் அறியாத ரகசியம் இது.
இந்தித் தேர்வு முடிந்த நிலையில் தேர்தல் அறிவிப்பு, பின் முடிவுகள் எல்லாம் வந்து அவர் சட்டென்று ஒன்றிய அமைச்சராகிவிட்டார். ஒன்றிய ரயில்வேதுறை இணையமைச்சர். ஆச்சரியம்! நம் அனைவருக்கும். அவரைப் பற்றி தகவல் காந்தி சார் சொன்னதுமே என்னால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை நம்முடன் அழகிய முறை நட்புடன் பயணித்து, இங்கு சந்தேகங்களை நம்மிடம் கேட்டுப் படித்து அறிந்து சென்றுள்ளார், என்பது என்னால் இந்த நிமிஷம் வரை நம்ப முடியாத ஒரு நிகழ்வாக தோன்றுகிறது.
தொலைக்காட்சி சேனல்கள், நியூஸ் பேப்பர் (நாளிதழ்கள்) ஒவ்வொன்றும் புரட்டிப் பார்த்தேன். அவரைப் பற்றிய தகவல் அறிய வேண்டும் என்பதற்காக.
உண்மைதான், அவர் பெயர் பார்க்க நேர்ந்தது, நான் இதழ்களில் வாசிக்க நேர்ந்ததும்.ஆச்சரியம், எனக்கு மலை போல் மகிழ்ச்சி.
அவர் வேறு யாருமில்லை ரயில்வே மத்திய இணையமைச்சர் ஆர்.வேலு.அவர்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தவர். அரக்கோணம் தொகுதியில் வென்று இரு முறை ஒன்றிய அமைச்சர் பதவியை அலங்கரித்துள்ளார். இவருடைய காலகட்டத்தில் தான் லாலுபிரசாத் யாதவ் அவர்கள் மத்திய ரயில்வேதுறை அமைச்சராக பொறுப்பேற்று நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வேதுறையை அழகான முறையில் லாபத்தில்இருவரும் சேர்ந்து மீட்டனர். என்றால் அது மிகையாகாது.
லாபத்தை மீட்டதோடு மட்டுமல்லாமல் வருடத்துக்கு ஒரு முறை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் டிக்கெட் கட்டணத்தை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குறைத்து, அதில் நல்ல முறையில் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகச் செய்தனர்.
பெரும் பெரும் சலுகைகள் அந்நேரம் ரயில்வே துறையால் செய்ய முடிந்தது யாரும் மறுக்க முடியாத உண்மை. என்பது குறிப்பிடத்தக்கது.