Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

கோவையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஆலோசனை
Nov 28 2022 அண்மைச் செய்திகள்

கோவையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஆலோசனை

*கோவைப் பெருநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் ராபித்தத்துல் உலமா JIH மார்க்க அறிஞர் பேரவையின் மாநிலக்குழு கோவை அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்திப்பு*

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை மாநகரில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தைத் தொடர்ந்து அமைதி குலைந்ததுடன் முஸ்லிம் சமுதாயத்தின் கண்ணியமும் கேள்விக்குறியானது. இன்னொரு பக்கம் காவல் துறையின் பல்வேறு நடவடிக்கைகள், சோதனைகள், சோதனைகளின் போது சில அத்துமீறல்கள் என்று கோவை மாநகரத்தில் தொடர் பரபரப்பு நிலவியது. 

இந்த நிலையில் கோவைப்பெருநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பல்வேறு வகையான அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, சூழலை அமைதியான நிலையில் தொடர்ந்து வைத்துக் கொண்டி ருப்பதற்கும் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமலிருப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் நோக்கிலும் தமிழக ஜமாஅத்தே இஸ்லாமியின் அறிஞர் பேரவையான ராபித்தத்துல் உலமாவின் மாநிலப் பிரதிநிதிகள் வருகை தந்து, கோவையில் செயல்பட்டு வருகின்ற அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து உரையாடுவதற்கான ஏற்பாட்டினை செய்தது.

அதன்படி கடந்த *22, 23 – 11 – 2022* செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்களில், கோவைப்பெருநகர தலைவர் தலைமையில், ஜமாஅத் நிர்வாகிகளுடன் கோவையின் அனைத்து அமைப்பினரின் நிர்வாகிகள் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

முன்னதாக, கோவைப்பெருநகர அலுவலகத்தில் *பெருநகரத்தலைவர் P.S. உமர் ஃபாரூக்* அவர்களின் தலைமையில் ஜமாஅத் பொறுப்பாளர்களுடன் அறிஞர் குழு சந்திப்பு நடைபெற்றது. அதில் கோவையில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வு குறித்தும் அதற்குப்பிறகு நிலவிய / நிலவி வருகின்ற சூழல்களைக் குறித்தும், தற்போது அமைப்புகளை சந்திப்பதன் தேவை மற்றும் அதன் வழிமுறைகள் குறித்தும் விரிவான முறையில் எடுத்துரைக்கப்பட்டது.   

அடுத்து *கோவை காவல்துறை ஆணையாளர் திரு, வெ. பாலகிருஷ்ணன்* அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோவையின் நிலைமைகள் குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவை காவல் ஆணையாளர் மிகுந்த ஈடுபாட்டுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ராபித்தா அறிஞர்கள் முன்னெடுத்துள்ள அமைதிப்பணிகளை வெகுவாகப் பாராட்டினார். 

 

அவரைத்தொடந்து *உளவுத்துறை அதிகாரி பிரபாகரன்* அவர்களை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. உரையாடலின் போது முஸ்லிம்களின் வீடுகள் தொடர் சோதனைகளுக்கு உள்ளக்கப்படுவது குறித்து முறையிட்டதுடன் அதனைக் கட்டுக்குள் கொண்டு வருமாறு வலியுறுத்தப்பட்டது.

அதன் பின்னர் அன்று மாலை முதலாவதாக, *தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (T.M.M.K.) மனிதநேய ஜனநாயகக்கட்சி (M.J.K), சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (S.D.P.I.)* ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், மாவட்ட, மாநகரப் பொறுப்பாளர்களை அந்தந்த அலுவலகங்களில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

மறுநாள் காலை கோவை மாநகர *ஜமாஅத்துல் உலமா சபை* நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடல் மேற் கொள்ளப்பட்டது. அன்று மதியம் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (T.N.T.J)* மாலை *இந்தியத் தவ்ஹீத் ஜமாஅத் (I.N.T.J), வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் (W.I.H), ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (J.AQ.H)* ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள், மாவட்ட, மாநகரப் பொறுப்பாளர்களை அந்தந்த அலுவலகங்களில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

மொத்தம் எட்டு அமைப்பினர் சந்திக்கப்பட்டனர். இந்த சந்திப்புகள் அனைத்திலும் அனைத்து அமைப்பினரும் இதுபோன்ற சந்திப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் இது போன்ற முன்னெடுப்புகளை வரவேற்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் கீழ்காணும் விஷயங்கள் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட்டன :        

அனைத்து அமைப்பினரும் அவரவர் தளத்தில் பல்வேறு சமுதாய சீர்திருத்த மேம்பாட்டுப்பணிகளை மேற் கொண்டு வந்தாலும் அந்தப் பணிகளையெல்லாம் முடக்கி விடும் விதத்திலும் முஸ்லிம்களின் கண்ணியத் தையும் மரியாதயையும் குலைத்து விடும் வகையிலும் சமுதாயத்தில் சில முஸ்லிம்கள் அவ்வப்போது தெரிந்தோ தெரியாமலோ சில விரும்பத்தகாத செயல்களை செய்து விடும்போது முஸ்லிம்களும் முஸ்லிம் அமைப்புகள் இயக்கங்களும் அவற்றின் தலைமைகளும் மௌனமாக இருந்து விடக் கூடாது.

தங்களின் உணர்வுகளுக்கும் சில குழுவினர்களின் உணர்வுகளுக்கும் தீனி போடுவதற்காக சில தனி மனிதர் கள் பேசுகின்ற பேச்சுக்களும் எடுக்கின்ற நடவடிக்கைகளும் ஒட்டு மொத்த இஸ்லாத்தினுடைய கருத்தாக வும் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் கருத்தாகவும் ஆகி விடாது. அப்படி ஆகி விட அனுமதிக்கவும் கூடாது.

முஸ்லிம் சமுதாயத்தில் சிலர் செய்கின்ற செயல்களை, ‘அதனை முஸ்லிம்கள் செய்கிறார்கள்; முஸ்லிம் கள் செய்வதெல்லாம் சரியாகத்தான் இருக்கும்’ என்று அந்தத் தீமைகளுக்கு எதிராக எதிர்க்குரலை எழுப்பாமல் மெளனமாக இருந்து, அவர்களுக்கும் அவர்களது செயல்களுக்கும் ஒரு தார்மீக அங்கீகாரத்தை கொடுத்து விடக்கூடாது.

இப்படிப்பட்ட விரும்பத் தகாத சம்பவங்களுக்குப் பின்னனணியில் யார் இருந்தாலும் பாதிக்கப்படுவது முழுக்க முழுக்க முஸ்லிம் இளைஞர்களும் முஸ்லிம் சமுதாயமும்தான் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. எனவே, இதுபோன்ற நிகழ்வுகளை யார் முன்னெடுத்து நடத்தினாலும் அதனை வன்மையாக கண்டிப்பதுடன் முஸ்லிம் இளைஞர்கள் இது போன்ற சூழ்சிகளுக்கு பலியாவதையும் அனுமதிக்கக் கூடாது. அவற்றிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். 

இவ்வாறு தனிநபர்கள் எவரேனும் தனிப்பட்ட செயல்பாடுகளால் தனிமையாக இருந்தால் அவர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய கவுன்ஸிலின் கொடுத்து சீர்திருத்துவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

அவர்தம் பெற்றோரிடமும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். 

ஜிஹாத், ஷஹாதத், ஷஹீத் போன்ற இஸ்லாத்தின் கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள மையை உடைத்து அதன் உண்மையான கருத்துக்களையும் அவற்றின் தனிச் சிறப்பு அம்சங்களுடன் மக்களுக்கு விளக்குவதற்காக தொடர்ந்து ஜுமுஆ உரைகள் நிகழ்த்தப்பட வேண்டும். 

அவை பற்றிய விழிப்புணர்வு மடக்கோலைகள் வெளியிடப்பட வேண்டும். 

இவைபோன்ற அமைதி மற்றும் நல்லிணக்கப்பணிகளுக்காக அனைத்து அமைப்பினரும் ஒருவருக் கொருவர் இணைந்து பணியாற்ற வேண்டும் 

ஆகிய கருத்துக்கள் ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் ராபித்தத்துல் உலாமாவின் மூலம் முன்மொழியப்பட்டன.

நடைபெற்ற அனைத்து கலந்துரையாடல் நிகழ்வுகளிலும் *அனைத்து அமைப்பின் நிர்வாகிகளும் முழுமையான ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும்* பங்கு பெற்றதுடன் அனைத்து முன்னெடுப்புகளும் மிக மிக அவசியமானவை, திட்டவட்டமாக நடமுறைப்படுத்தப்பட வேண்டியவை என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். இந்த வகை யில் ஜமாஅத் மற்றும் ராபித்தா மேற்கொள்ளும் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கு வதாகவும் உறுதியளித்தனர். 

இந்த சந்திப்புகளில் *ராபித்தத்துல் உலமாவின் மாநிலத் தலைவர் மௌலவி.M.M.முஹம்மத் இஸ்மாயில் இம்தாதி, மாநிலப் பிரதிநிதிகள் மௌலவி. முஹ்யித்தீன் குட்டி உமரி, மௌலவி. நூஹ் மஹ்லரி, மௌலவி. ஜாஃபர் ஸாதிக் மன்பஈ*, ஆகியோருடன் கோவைப் *பெருநகரத்தலைவர், P.S. உமர் ஃபாரூக், செயலாளர், M.S. சபீர் அலி, மக்கள் தொடர்பு செயலாளர் A. அப்துல் ஹக்கீம், கோவை தெற்கு மண்டல அமீரே முகாமி, M. செய்யது அபுத்தாஹிர், ஊழியர்கள், அப்துல் மாலிக், M.A.H. ஹனீபா*, ஆகியோரும், சில அமைப்பினரை சந்திக்கும்போது உறுப்பினர்களில் *கிழக்கு மண்டல அமீரே முகாமி A. அப்துல் ஜலீல், மற்றும் மாநகர ஆலோசனைக்குழு உறுப்பினர், K.A. செய்யத் இப்ராஹீம், கோவைப்பெருநகர விரிவாகச் செயலளார், பீர் முஹம்மத் (ஃபிஷ்)* ஆகியோரும் கலந்து கொண்டனர்.  

இறையருளால் அனைத்து நிகழ்வுகளும் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றன. அனைத்து புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. 

இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவும், அவற்றின் மூலம் சமுதாயத்தில் இணக்கமும், அமைதி மற்றும் சுமுகமான சூழ்நிலைகள் நிலவவும் கருணை மிகு அல்லாஹ் அருள் புரிவானாக!

மேலும், இந்த நிகழ்வுகள் சந்திப்புகளை சாலிஹான அமலாக ஏற்றுக்கொண்டு உரிய பிரதிபலன்களை இம்மையிலும் மறுமையிலும் நிறைவாகத் தந்தருள்வானாக!! ஆமீன், ஆமீன், யாரப்பல் ஆலமீன்!

Related News