Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

கோவையின் பன்முகத் திறனாளி
Nov 29 2022 கலை இலக்கியம்

கோவையின் பன்முகத் திறனாளி

கோவையில் ஜொலிக்கும் ஒரு பன்முகத் திறனாளி:

 

அறிமுகம்:

கல்வி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரை, எழுத்தாற்றல், பேச்சாற்றல், எழுத்தோவியக் கலை (caligraphy), ஆசிரியர் பணி, ஆன்மீகம், மொழிபெயர்ப்பு என இளையசமுதாயத்தை ஈர்க்கும் விதமாகச் சிறந்த உதாரணமாய்த் திகழும் இவர் ஒரு பன்முகத்திறனாளி, முன்மாதிரி ஆளுமை. அவர் சையத் ஃபைஸ் அஹமத் காதிரி.

கோவையைப் பூர்வீகமாகக் கொண்டு, என்.ஹெச். சாலை பகுதியில்தான் பிறந்து வளர்ந்தார். (நவாப் ஹக்கீம் சாலை). அங்கு மில் சாலையில் அமைந்துள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியில்தான் தமிழ்வழிக் கல்வி பயின்றுள்ளார்.

உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவர். இவருடைய தாத்தா - உருது, பாரசீக ஆசிரியர். தந்தை உருதுமொழிக் கவிஞர். அந்த வகையில் சிறு வயது முதலே உருதுமொழியில் ஈர்ப்பதிகம். தந்தையிடமிருந்து அடிப்படை உருது கற்று, தம் மொழியில் எதையாவது சாதிக்க வேண்டுமென்கின்ற வேட்கை நாளடைவில் ஏற்பட, அதில் முதுகலைப் பட்டம் வாங்கும் அளவிற்கு அவரைக் கொண்டு சென்றது. இப்போது தமிழ் மொழி மீதுள்ள காதலும் அதிகரித்தது. தமிழிலுள்ள இலக்கணம், இலக்கியம், சங்க இலக்கியம், நம் மொழியின் தொன்மை இவையனைத்தும் கண்டு, அதன் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதற்குப் பாலமாய் ஒரு பள்ளித் தமிழாசிரியர் ஐயா இரணியன் அவர்களின் உதவியை நாடினார். அதன் பலனாக ஒரு சிறந்த அடிப்படைக் கற்றல் முறையை ஏற்படுத்திக் கொண்டு, தமிழ் மொழியறிவும் கொள்ளலானார்.

தமிழ், உருது என இரு மொழிகளையும், எப்போதுமே இவர் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. இதற்குச் சிறந்த உதாரணம், இலக்கிய ஆளுமைகள் மத்தியில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளில் காண முடியும்.

 

எழுத்தாற்றல்:

தமிழில் தனக்கென ஓரிடத்தைப் பெற வேண்டுமென்றெண்ணி ஒரு நூலை எழுத முன்வந்தபோது யாரைப் பற்றி? எதைப் பற்றி? எழுதவேண்டும் என இவர் சிந்தித்த நொடி, இந்திய கீதமான 'சாரே ஜஹான்சே அச்சா' எழுதிய அல்லாமா இக்பால் அவர்களைப் பற்றி ஒரு நூலை எழுதவேண்டுமென முன் வந்தார். 'இவர்தான் மகாகவி அல்லாமா இக்பால்' என்ற அந்நூலை மொழிபெயர்த்து, தமிழ் உலகிற்கு அறிமுகமானதன் மூலம், அந்த முதல் நூலில் அவருடைய கவிதைகள் சிலவற்றையும் சேர்த்து வெளியிட்டார். அடுத்ததாக உருது இலக்கியம் ஒரு அறிமுகம்' என்ற நூலும், 'கவிக்கோ ஒரு ஜீவநதி' ஆகிய நூல்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில தமிழ்ச் சிறுகதைகளை உருதுவில் மொழிபெயர்த்த நூலும் உள்ளன. உருதுவிலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த 'இறைவா' என்கின்ற நாவலும் உண்டு.

நாடறிந்த மார்க்கஅறிஞரான மௌலானா வஹீதுத்தீன்கான் அவர்கள் எழுதிய 'பொது சிவில் சட்டம்', 'அழைப்பு பணி', 'இறுதிப் பயணம்' ஆகிய நூல்களோடு குர்ஆன் தமிழாக்கமும் சேர்த்துத் தன் பணியைச் செம்மையாக முடித்துள்ளார். 

தற்சமயம், மௌலானா வஹீதுத்தின்கான் அவர்களுடைய 200க்கும் மேற்பட்ட நூல்களை உருதுவிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மௌலானா வஹீதுத்தின்கான் அவர்களுடைய மிகச் சிறந்த மாணவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கவிக்கோ அவர்களின் சாகித்திய அகடாமி விருது பெற்ற கவிதைத் தொகுப்பான 'ஆலாபனை ' என்ற நூலையும் உருதுவில் மொழி பெயர்த்துள்ளார். அந்நூல், தற்சமயம் அச்சேறத் தயார் நிலையிலுள்ளது. ஏற்கனவே வெளிவந்த கவிக்கோவின் 'பித்தன்' என்ற கவிதை நூலும் இவருடைய மேற்பார்வையில், இவருடைய பேராசிரியர் 'முஸஃபர் ஸாமிரி' அவர்கள் மூலம் உருதுவில் வெளியிட்டுள்ளார்.

 

கலை, ஓவியம்:

கலை பற்றிய இவரது பணியைக் கூறுவதென்றால், இவர் அரபு எழுத்தோவியக் கலை வல்லுநர். மார்க்கக் கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தனியாக ஒரு அரபு மொழிக் கையெழுத்துப் பயிற்சியைக் கொண்டுவர, எந்தவொரு கல்வி நிறுவனமும் இதுவரை முயற்சித்ததில்லை. இவர், அதை ஒரு பெரும் குறையாக நீண்ட நாட்களாகக் கூறி வருகிறார். அதை உணர்ந்த சில கல்வி நிறுவனங்கள், தற்போது கோவையில் இவரைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அவ்வகையில் கோவையில் சில கல்விக்கூடங்களுக்குச் சென்று, அங்கிருக்கும் ஆசிரியர்களுக்கு அரபு கையெழுத்துப் பயிற்சியைப் பயிற்றுவிக்கிறார். இதில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயின்று வருகின்றனர். இவ்வகுப்பில் பயிலும் ஆசிரியர்கள், தங்கள் குறைகளை இந்த வகுப்பின் மூலம் அறிய நேர்ந்ததால், கையெழுத்துக் கலையின் அவசியத்தை உணர்ந்ததோடு மட்டுமல்லாமல், இவ்வளவு காலம் அதன் முக்கியத்துவத்தை உணராமல் விட்டதாகக் கவலை கொள்கிறார்கள். இதை வெளிப்படையாகவே கூறியுள்ளனர். நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இக்கலை வல்லுநர்களைக் கணக்கெடுத்தால், அதிகபட்சம் 10 பேர் தேறமாட்டார்கள். அந்த வகையில் நம் மாநிலத்தில் இவர் மட்டுமே இக்கலை அறிந்தவர் என்பது கூடுதல் சிறப்பு. இக்கலை கொண்டு, தன் கைவண்ணத்தில் பல படைப்புகளை உருவாக்கி கோவை, ஈரோடு போன்ற நகரங்களில் காட்சிப்படுத்தியுள்ளார். சில மாணவர்கள் இவரிடத்தில் முறையாகக் கற்றுள்ளனர். இவரிடம் இக்கலையை, கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்பில், பல மாணவ - மாணவிகள் பயின்றுள்ளனர். 

 

இலக்கியம்:

இலக்கிய உலகைப் பொறுத்தவரை இந்தியாவிலுள்ள பல மேடைகளை அலங்கரித்துள்ளார். வடநாட்டில், உருது கவியரங்கக் கூட்டங்களில், தன் கஸல் கவிதைகள் மூலம், உருது இலக்கியத்தின் பல ஆளுமைகளிடம் அறியப்படுபவர் இவர். தமிழ் இலக்கியங்களில் பெரிய ஆளுமையாய்த் திகழும் கவிக்கோவின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர் இவர். முதல்முறையாக கவிக்கோவை சந்திக்கும்பொழுது, தன்னை அறிமுகப்படுத்தியபோது, "நான் உருதுவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளேன்" என்றதும், கவிக்கோ தன் பார்வையை உயர்த்தி, இவரை ஆச்சரியமாய் ஒரு பார்வை பார்த்தார். காரணம்: இக்காலத்தில் உருதுவைத் தாய்மொழியாக கொண்டவர்கள் யாரும் தமிழகத்தில் படிப்பதில்லை, முதுகலைப்பட்டம் வரை செல்வதில்லை. கவிக்கோவின் தாய் மொழியும் உருதுவாக இருப்பதால் பேரின்ப ஆச்சரியத்தில் அவர் இவரைப் பார்த்தார். அதனால், தனது அன்பாளுமைக்குள் ஒரு செல்லப் பிள்ளையாக இவரை அவர் அடக்கிக் கொண்டார். அதனால் தமிழ் மொழியியல் சார்ந்த பல சந்தேகங்கள், ஆன்மீகம் என்று பலவற்றை அவர் வீட்டில் நாட்கணக்கில் தங்கி, முறையாக அறிந்து, உணர்ந்து, கற்றுக் கொண்டார். கவிக்கோ அவர்களுடைய நட்பு வட்டத்தில் இருந்த பல இலக்கிய ஆளுமைகள், கவிஞர்கள் - புவியரசு, சிற்பி பாலசுப்ரமணியம், மு.மேத்தா, திரைப்பட பாடலாசிரியர்கள், திரைப்பட இயக்குனர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள்என்று பலருடைய அறிமுகம் இவருக்குக் கிடைத்தது.

முக்கியமாக, கலைஞர் அவர்களைச் சந்தித்து 'தமிழக உருது அகடாமி' கமிட்டியில் உறுப்பினராக அங்கம் வகிக்குமளவிற்கு, கலைஞரிடத்தில் கவிக்கோ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். கலைஞர் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் அப்பதவியை இவர் அலங்கரித்துள்ளர்.

 

பேச்சாற்றல்:

இவர் பேச்சாற்றலும் கொண்டவர். இவருக்கு உணர்வு பூர்வமாக மட்டுமல்லாமல், அறிவுபூர்வமாக, ஆன்மிகத் தொனியில் பேசுவது, கைவந்த கலை. அவ்வகையில் பல பள்ளிகளில் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். பொதுத்தளங்களிலும் இப்பணியை செம்மையாகச் செய்துள்ளார். மும்பை, டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் பெரும் ஆளுமைகளுக்கு மத்தியில் தமிழ், உருது ஆகிய மொழிகளில் பேசி, பாராட்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் இரண்டு மாநாடுகளை நடத்தியுள்ளார். அதில் ஒன்று 'அல்லாமா இக்பால் அகடாமி' சார்பாக நடந்தது. இன்னொன்று தேசிய கருத்தரங்க மாநாடு - National Seminar. இது, கோவை 'அஞ்சுமனே உருது' (உருது சபை) சார்பாக நடத்தப்பட்டது. இதில் தேசிய அளவிலுள்ள பெரும் ஆளுமைகள் கலந்து கொண்டனர். இவ்விரு மாநாடுகளிலும் சிறப்புப் பேச்சாளராக கவிக்கோ அவர்கள் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கல்வி, ஆசிரியர் பணி:

ஒன்றிய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழியங்கும் NCPUL - National Council for Promotion of Urdu Language, டெல்லி நிறுவனத்தால் நடத்தப்படும் உருதுமொழிப் பயிற்சியை கடந்த 13 ஆண்டுகளாய்த் தொடர்ந்து நடத்தி வருகிறார். இது, உருது அடிப்படைப் பட்டயச் சான்றிதழுக்கானப் பயிற்சியாகும். 

இப்பயிற்சியின் மூலம் கிட்டத்தட்ட 3000 முதல் 4000 பேர் வரை படித்துச் சான்றிதழும் பெற்றுப் பயனடைந்துள்ளனர். இவரின் இந்தக் கல்விச் சேவையைப் பாராட்டி, 2011ல் தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களிடமிருந்து விருது பெற்றுள்ளார். இப்பயிற்சியில் 14 வயது முதல் 70 வயது முதியோர் வரை, ஆண் - பெண் அனைவரும் பயனடைந்து உள்ளனர்.

இப்பயிற்சியில் காவல் அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், சிறு - குறு தொழில் செய்பவர்கள், தொழிலாளிகள், தொழிலதிபர்கள், கல்விநிறுவனம் நடத்தும் பெரும் ஆளுமைகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசியல் கட்சி, சமூக இயக்க, அமைப்புத் தலைவர்கள், மாற்று மத சகோதரர்கள், ஆண்கள் - பெண்கள் என இன்னும் கூடுதலாய்க் கூறுவதாக இருந்தால், வேளாண்மை உள்ளிட்ட அறிவியலாளர்கள்கூட இந்த உருதுமொழிக் கல்வியைக் கற்று, இவரிடமிருந்து பயனடைந்துள்ளனர்.

கோவை நகரத்தைச் சுற்றியுள்ள இவருடைய மாணவர்கள் அனைவருக்கும் இவ்விஷயம் தெரியும். கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில், பல பள்ளிகளுக்குச் சென்றும் இச்சேவையை இவர் செய்துள்ளார். பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம், ஈரோடு, பள்ளப்பட்டி போன்ற பகுதிகளில் இவ்வகுப்பை நடத்தியுள்ளார்.

இப்போதும் தொடர்ந்து ஜூம் மற்றும் கூகுள் மீட் மூலம் ஆன்லைன் வகுப்பு நடத்தி வருகிறார். அதில், உலகின் பல மூலைகளில் இருந்தும் பலர் கற்றுப் பயனடைந்து வருகின்றனர்.

சமீபத்தில், கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுவில், உருது மொழிக்கான பொறுப்பாளராக இவரை நியமித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

கதை, கவிதை, கட்டுரை:

தமிழ்ப் பத்திரிகைகளில் இனிய உதயம், சம உரிமை ஆகியவற்றில் இவரது கவிதைகள் அரங்கேறியுள்ளன. முகநூலிலும் பலரும் பாராட்டும் விதமாகத் தொடர்ந்து தமிழ், உருதுவில் கவிதை, கட்டுரைகள் வடித்துள்ளார். கதைகளைப் பொருத்தவரை நாவல் ஒன்றை உருதுவிலிருந்து தமிழில் 'இறைவா' என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைகளை தமிழிலிருந்து உருதுவில் மொழிபெயர்த்துள்ளார். இவர் உருவாக்கியப் பல கஸல் கவிதைகள், இவரது முகநூலில் தெரியும்.

உருதுவின் மிகச்சிறந்த கவிஞர்களின் கஸல் கவிதைத் தொகுப்பொன்று தற்சமயம்  அச்சில் உள்ளது. கூடிய விரைவில் நூலாக நீங்கள் வாசிக்கலாம்.

உருதுவில் பல மேடைகளில் கஜல் கவிதையை பல கவியரங்கக் கூட்டங்களில் வாசித்துள்ளார். சென்னை, மும்பை, ராஞ்சி, டெல்லி, வாணியம்பாடி, ஆம்பூர், கேரளா, இன்னும் பல வடநாட்டு நகரங்களில் இவரது கவித் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். கூடவே 'தமிழில் கஜல்' என்று மும்பையில் நடந்தவொரு கருத்தரங்கில் சிறப்பாக உரையாற்றியுள்ளார். அக்கருத்தரங்கில் கவிக்கோ அவர்களின் சிறப்பையும், தமிழில் கவிக்கோ அவர்கள் ஆற்றிய கஜலின் பங்களிப்பையும் பதிவு செய்துள்ளார்.

 

மொழிபெயர்ப்பு,

ஆன்மிகம்:

இன்றைய இளைஞர்களுக்கு எது தேவை என்றறிந்து அதைச் சார்ந்த இறையியல், ஆன்மிகம் தொடர்பான பல சிறந்த நூல்களை உருதுவிலிருந்து தேர்ந்தெடுத்து, தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். இதுபோல் மொழிபெயர்ப்புப் பணியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பல நல்ல நூல்களை தமிழ் உலகிற்கு உருதுவிலிருந்து கொண்டு வருவதற்கான ஆயத்தப் பணியில் இறங்கியுள்ளார்.

மேலும், சில ஆண்டுகளுக்கு முன் சென்னைப் பல்கலைக்கழகம், மொழி இலக்கியப் பணிக்கான விருதை வழங்கிக் கௌரவித்துள்ளது.

இந்த ஆண்டு - 2022ல் விடுதலைநாள் விழாவில் தமிழக உருது அகடாமி சார்பாக சிறந்த மொழி இலக்கிய சேவைக்கான Award of Excellence விருது வழங்கப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் அவர்களிடமிருந்து இதை பெற்றுக்கொண்டார்.

அதுபோல் ஆழ்ந்த ஆன்மீக ஞானம் கொண்ட இவரை நேரடியாகத் தொடர்புகொண்டு, ஆன்மீகத்தின் ஆழத்தையும், அவசியத்தையும் அவரிடம் கேட்டு நீங்கள் பயன்பெறலாம். இவருடைய நண்பர்களில் சிலர் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தனர். இவரால், அவர்கள் அவற்றிலிருந்து தப்பிப் பிழைத்தனர் என்றால் மிகையாகாது.

இவ்வளவு சாதனைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழும் இவர், கோவை போத்தனூரின் முதன்மைச் சாலையில் உள்ள தன் அலுவலகத்தில், ஆரவாரமின்றி, அமைதியாகத் தன் இறையியல் பணிகளைச் செய்கிறார். மேலும் இச்சமூகத்தின் அறிவுக் கண்ணை திறந்து விட இவரின் ஞான சிந்தையும், செயலும் தொடர்ந்து நிகழ இறைவனிடம் பிரார்த்தித்தவனாக முடிக்கிறேன்.

போத்தனூர் தாஜ்