சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னால் சென்னையின் central Government பணியில் tax assistant ஆக பணி நியமனம் பெற்ற மேலப்பாளையத்தைச் சார்ந்த அலி பாதுஷா அவர்களிடம் ஒரு நேர்காணல்.
அஸ்ஸலாமு அலைக்கும். வாழ்த்துக்கள் சார், நீங்கள் இந்த சிறிய வயதில் central Government பணியில் TA வாக சமீபத்தில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறீர்கள். நமது ஊரே உங்களை பாராட்டுகிறது. உங்கள் பணி பற்றிய முழு விபரம் சொல்லுங்களேன்.
வ அலைக்கும் அஸ்ஸலாம். வாழ்த்துக்கு நன்றி, நான் Central Government Department -ல் இதை Central Board Of Direct Taxes என்று சொல்வார்கள், அதில் Income Tax Department ல் tax assistant post -ல் நான் தேர்வாகியிருக்கிறேன்.
மாநில அரசு தேர்வாணையம்( TNPSC) இருப்பதைப் போல மத்திய அரசு தேர்வாணையம் என்றும் இருக்கிறது. Staff Selection Commission- ல் இருந்து நிறைய Exam நடத்துவார்கள் . அதில் combined Graduate Level –ல் ஏதாவது ஒரு degree முடித்தவர்களுக்கு எக்ஸாம் நடத்துவார்கள். அதில் நான் Tax assistant ஆக இருக்கிறேன்.
சென்ட்ரல் எக்ஸாம் பற்றி நிறைய சொல்றீங்க இந்த வேலையில் சேர்வதற்கு நீங்கள் செய்த முயற்சி என்னவென்று சொல்ல முடியுமா? கண்டிப்பா சொல்றேன்.
நான் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு 2017 இல் மெக்கானிக்கல் முடித்தேன். ஒரு வருடமாக வேலை தேடினேன், அப்பொழுது கவர்மெண்ட் எக்ஸாம் பற்றிய நிறைய ஃப்ரீ கிளாஸ் நான் அட்டென்ட் பண்ணேன் . 2019 கடைசியில் தான் படிக்க ஆரம்பித்தேன். இடையில் டைப்ரைட்டிங் இல் ஹையர் முடித்தேன். இது சம்பந்தமாக ஏகப்பட்ட எக்ஸாம் இருக்கு. 12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு, பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கென்று தனித் தனியாக நிறைய தேர்வுகள் இருக்கிறது.
100 கேள்விகள் கேட்பார்கள் என்றால் 25 கேள்விகள் maths, 25 % IQ ,25% இங்கிலீஷ் ,GK ஒரு 25% இப்படி இருக்கும். நான் என்ன செய்தேன் என்றால் சமீபத்தில் சுமார் ஒரு மூன்று நான்கு வருடத்தினுடைய கேள்வித்தாள்களை வைத்து அதில் படித்தேன். இதுபோன்று தேர்வில் யாரெல்லாம் வென்றிருக்கிறார்களோ அவர்களிடம் நிறைய ஐடியாக்கள் கேட்டேன். அதன்படி செயல்பட்டேன். இப்படி செய்தபோது தான் எப்படி படிக்க வேண்டும் என்று ஒரு ஐடியா கிடைத்தது.
நான் செய்த மிக முக்கியமான ஒரு முயற்சி அதிகமாக கேள்வித் தாள்களை வைத்து அதன் பதில்களை எழுதிப் பார்த்ததுதான். இது மிக அவசியம், ஏனென்றால் மாநில அரசு தேர்வை விட மத்திய அரசு தேர்வு என்பது மிகவும் வேகமாக எழுதி முடிப்பதை போன்று இருக்கும். ஒரு மணி நேரம் இருக்கிறது என்றால் அதில் கணக்கும் இருக்கும் அதை வேகமாக செய்ய வேண்டும். எழுதிப் பழகும் போது தான் அதை செய்ய முடியும். பார்ப்பதினால் மட்டும் அதை எழுத முடியாது.
பொதுவாக தமிழக அரசு தேர்வுகள் பற்றிய பயிற்சி வீடியோ க்கள் youtube இல் இருக்கும். ஆனால் மத்திய அரசு தேர்வு பற்றிய வீடியோக்கள் அதிகம் இருக்காது. சில வீடியோ மட்டும் இருக்கும் அதுவும் ஹிந்தியில் தான் இருக்கும். இந்த நேரத்துல நாம ‘ஹிந்தி தெரியாது போடா’ என்று சொல்லி அதனை ஒதுக்க முடியாது. கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சம் அதிலிருந்தும் சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறுதான் முயற்சி செய்தேன் இறைவனின் கிருபையால் தேர்ச்சியும் பெற்றுள்ளேன் .
உங்களைப் ‘புத்தகப் புழு’ என்று அழைக்கிறார்களே..! நம்ம ஊர் நூலகத்திலேயே உங்களுக்கு பாராட்டு விழா நடத்தினார்களே,அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். நூலகத்தில் ஒரு நாளில் எவ்வளவு நேரம் செலவிடுவீர்கள்?
ஆமா! ஆமா! அது ஒரு சந்தோஷமான தருணம் தான். நூலகத்தில் தான் அதிகம் நான் படித்தேன். படிக்கக்கூடிய சூழல் அங்கு தான் இருக்கும். மத்திய மற்றும் மாநில தேர்வுகளுக்கு படிக்கக்கூடிய நண்பர்களோடு சேர்ந்துதான் படித்தேன்.
நாங்கள் ஒரு குழுவாக படித்தோம். தனியாக படிப்பதை விட குழுவாக இருந்து படிப்பது மிகவும் உபயோகமாக இருக்கும் . தொய்வோ, சோர்வோ ஏற்படாது. அவர்களும் படிக்கிறார்கள் நானும் படிக்கிறேன் எனும் பொழுது சிரமம் தெரியாது.
அதேபோல வீட்டிலிருந்தும் அதிக நேரம் படிப்பது இலகுவானதல்ல. திடீரென்று ஒரு வேலை வந்துவிடும் அந்த வேலையை செய்து முடித்துவிட்டு மீண்டும் நாம் எங்கு விட்டோமோ அங்கிருந்து படிப்பது சிரமம்.
முழு கவனத்தோடு சுமார் எட்டு மணி நேரம் படித்திருப்பேன். டைம் டேபிள் போட்டு படித்தேன். அது சிரமம் தான், ஆனால் அதுதான் சிறந்தது.டைம் டேபிள் போடாமல் ஓர் இலக்கு இல்லாமல், இந்த பாடத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கமில்லாமல் இருந்தால் விரைவாக நாம் நம்முடைய இலக்கை அடைய முடியாது. ஏனோ தானோ என்று படிப்பதாகிவிடும். எனவே டைம் டேபிள் மிகவும் முக்கியம்.
காலேஜ் படிக்க கூடியவர்களாக இருந்தால் சுமார் ஒரு மூன்று அல்லது நான்கு மணி நேரம் கண்டிப்பாக படிக்க வேண்டும். ஏனென்றால் போட்டி நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. எனவே மற்றவர்களை விட அதிக முயற்சி செய்தால் தான் நாம் தேர்வு பெற முடியும்.
மேலப்பாளையம் போன்று, உறவினர்களும் நண்பர்களும் சூழ இருக்கிற ஒரு ஊரில் எப்படி நீங்கள் உங்களுக்கான படிப்பதற்கான நேரத்தை ஏற்படுத்திக் கொண்டீர்கள் ?
நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு இருக்கக்கூடிய நிறைய நேரங்களை நாங்கள் நிச்சயமாக இழந்திருக்கிறோம். நாங்கள் முதலில் இரண்டு பேர் படிக்க ஆரம்பித்தோம், போகப் போக ஏழு, எட்டு பேர் என்று ஒரு குரூப் எங்களுக்கு அமைந்துவிட்டது. சூழலும் நன்றாக அமைந்ததால் படிப்பதற்கு தோதுவாக இருந்தது.
படிப்புக்காக மட்டுமே ஒரு குரூப்பாக நாங்கள் இருந்தோம். அது மட்டும் இல்லாமல் (group sharing session) குழு பகிர்வு அமர்வு வைத்துக் கொண்டால் நல்லது. நாம் ஒரு பகுதியை படிக்க வேண்டும், அவர்கள் ஒரு பகுதியை படிப்பார்கள், இரு குழுவும் ஒருத்தருக்கு ஒருத்தர் படித்ததை சொல்லிக் கொண்டால் படித்தவை நமக்கு மறக்காமல் இருக்கும்.
நிறைய function களை நாங்கள் தவிர்த்து இருக்கிறோம். பொதுவாகவே இது போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொருவருமே நிறைய sacrifice செய்திருப்பார்கள். நாங்களும் அப்படித்தான் செய்திருக்கிறோம். நிறைய என்னுடைய நண்பர்கள் வருடக் கணக்கில் தங்களுடைய ஊரில் நடக்கும் எந்த விழாவிற்குமே செல்லாமல் படித்து தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் இருக்கிறார்கள்.
இப்படித்தான், ஒன்று கிடைக்க வேண்டுமென்றால் ஒன்றை விட்டு தானே ஆக வேண்டும். அந்த அடிப்படையில் நாங்கள் படிக்க ஆரம்பித்தோம். இறைவனின் கிருபையால் வெற்றியும் பெற்றிருக்கிறோம்.
இப்போதுள்ள வளரும் தலைமுறைக்கு நீங்கள் சொல்லக்கூடிய அறிவுரை என்ன?
நம் சமுகத்தில் நிறைய வாலிபர்கள் வெளிநாடு செல்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள். அதை நாம் குறைத்து விட்டு படிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.12 ஆம் வகுப்பு படிப்பதற்கு முன்பாகவே நாம் எந்த பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சரியான ஆசிரியர்களை வைத்து முடிவு செய்து அந்தப் பாதையிலே பயணிக்க வேண்டும். 12 ம் வகுப்பு முடித்ததற்கு பின்னால் யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக எதையோ படித்துவிட்டு போகக்கூடாது.
இன்று படிப்பதில் கவனம் குறைந்துவிட்ட காரணத்தினால் நிறைய தவறான செயல்பாடுகள் மாணவர்களிடத்திலே வந்துவிட்டது.
எவனோ கோடி கோடியாக சம்பாதிக்கக்கூடிய நடிகர்களை பின்பற்றிக்கொண்டு அவர்கள் பின்னாடியே சுற்றிக்கொண்டு அவர்களுடைய படங்களுக்கு பின்னாடியே அலையக்கூடிய நிறைய வாலிபர்களை இன்று நாம் பார்க்கிறோம். அவர்கள் சம்பாதித்து கொண்டே போவார்கள். அவர்கள் பின்னால் சுற்றும் நீங்கள் இப்படியேதான் 5 க்கும் 10 க்கும் அல்லாடிக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் நன்றாக படித்தால் தான் உங்களுடைய வருங்காலம் சிறப்பாக இருக்கும். உங்களுக்காக உயிரையே கொடுக்கக்கூடிய பெற்றோர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்.
தவறான பாதையில் ,போதையில் செல்லக்கூடிய ஒரு பெரும் வாலிப சமூகம் இன்று இருக்கிறது. மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம். அவர்களை எல்லாம் இந்த சமூகத்தினுடைய முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து சரியான பாதையில் அவர்கள் கொண்டு வர வேண்டும்.
ரொம்ப நன்றி. உங்களுடைய பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி சிறந்த தகவல்களை கொடுத்ததற்கு நன்றி. இறைவன் உங்களுக்கு மேலும் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவானாக. உங்கள் மூலமாக நம் சமூகமும் நிறைய பயன்களை பெற்றுக் கொள்வதற்கு கிருபை செய்வானாக.