பெங்களூர் நவம்பர்14
தெரு நாய்களை கட்டுபடுத்துவதில் அரசு மெத்தனம் காட்டுவதும், இதுபோன்ற மனித உயிர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் தெரு நாய்களின் மூலம் நாட்டில் அவ்வப்போது ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.இந்த சம்பவம் பொதுமக்களுக்கும்,விமான பயணிகளுக்கும் மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து, விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் UK881 என்ற விமானம் கோவாவிலுள்ள டபோலிம் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது.
அங்கு வந்தடைந்த விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் தெருநாய் ஒன்று ஓடுபாதையில் நின்றுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த விமானி,பயணிகளின் பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் பெங்களூரு விமான நிலையத்துக்கே திருப்பி சென்றுவிட்டார்.
இதனையடுத்து பெங்களூரிலிருந்து அன்றைய மாலை 04:55 மணியளவில் விமானம் புறப்பட்டு, மாலை 06:15 மணியளவில் கோவாவை வந்தடைந்துள்ளது. இதுகுறித்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கோவா விமான நிலைய இயக்குநர் எஸ்.வி.டி.தனம்ஜெய ராவ் "டபோலிம் விமான நிலையத்தின் ஓடுபாதையில் தெருநாய் காணப்பட்டதால், விமானியிடம் சிறிது நேரம் தரையிறக்க தாமதிக்க கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும்.ஆனால் விமானி அவற்றை ஏற்றுகொள்ளாமல் விமானத்தை அவர் பெங்களூருக்கே திரும்பி சென்றுவிட்டார் எனவும்.விமான ஓடுபாதையில் இதுபோன்று தெருநாய் நுழையும் சம்பவங்கள் நடக்கின்றன. அங்கிருக்கும் ஊழியர்களால் இவை உடனடியாக சரிசெய்யப்பட்டுவிடும். இருப்பினும் என்னுடைய இந்த ஒன்றரை ஆண்டுக்கால பதவிக்காலத்தில் இவ்வாறு நடப்பது இதுவே முதன்முறை" என்று அவர் கூறியுள்ளார்.