மனிதகுல அடிப்படை தேவைகளில் முக்கியமானது உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் இவை மூன்று விஷயங்கள் தான்.
இவற்றுள் தமக்கான சொந்த நிலம், வீடு என்பது பெரும்பாலானோரின் கனவு. அப்படி தன் கனவை நிறைவேற்ற சிறுக சிறுக சேமித்து தான் வாங்குகின்ற வீட்டடி மனைகள் எவ்வாறு இருக்க வேண்டும், எந்த வில்லங்கமும் இல்லாமல் இன்றி பார்த்து வாங்குதல் வேண்டும் என்பது மிக அவசியம்.
அதேப்போல முன்பு போல் இல்லாமல் கடந்த 2016 ஆண்டிற்கு பிறகு நாம் வாங்கும் வீட்டடி மனைகள் அங்கிகாரம் உள்ள மனைகளா என்பதை சரிபார்த்தல் மிக அவசியம்.
அவை 2 சென்ட் அளவுகளிலிருந்து அதற்கு மேல் வரை கூட இருக்கலாம்.
அப்போதுதான் அவற்றில் கட்டடம் கட்டுவதற்கோ அல்லது விற்பதற்கோ (மறு பத்திரப்பதிவு) செய்ய முடியும்.
அதே சமயம் நீங்கள் வாங்கிய மனைகள் அங்கீகாரமற்ற மனைகளாக இருப்பின் குறைந்தது 25 சென்ட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களால் விற்கவோ, மறு பத்திரப்பதிவு செய்யவோ இயலும்.
எனவே வீட்டடி நிலம் வாங்குபவர்கள் இதனை கருத்தில் கொண்டு வாங்கினால் மட்டுமே வருங்காலத்தில் வாங்கிய நிலத்திற்கான பலனை அடையமுடியும்.
தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை
✓வீட்டடி அங்கிகாரம் உள்ள மனைக்கான வரைமுறைகள் மற்றும் அங்கிகாரம் அற்ற மனைக்கான வரைமுறைகள் என்ன?
✓வீட்டடி மனைக்கான அங்கிகாரம் பெறுவது எவ்வாறு?
✓எந்த எந்த பகுதியில் போடப்படுகின்ற மனைகள் செல்லாதவை?
என பல்வேறு ஒழுங்குமுறைகளை வகைப்படுத்தியுள்ளது.
அதனை இனி காண்போம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்யவும், அங்கிகாரம் இல்லாத மனைகளை பத்திரப்பதிவு செய்யவும், சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அங்கீகாரம் அற்ற வீட்டு மனைகளை வரைமுறைப் படுத்துவது, புதிதாக வீட்டு மனைகளை உருவாக்குவது தொடர்பாகவும் தமிழக அரசு 2 அரசாணைகளை பிறப்பித்து அதனை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
அதன்படி,
தமிழ்நாடு நகரமைப்புத் திட்டமிடல் சட்டம் 1971-ன் கீழ், தமிழ்நாடு அங்கீகார மற்ற வீட்டுமனைகள் ஒழுங்குமுறை விதி-2017-ல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளின்படி
1.மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அந்தந்த ஆணையர்களும், பேரூராட்சியில் செயல் அதிகாரியும், கிராமப் பஞ்சாயத்துகளில் வட்டார வளர்ச்சி அதிகாரியும் அங்கீகாரமற்ற மனைகளை வரையறை செய்ய தகுதியானவர்களாவர்.
அதுபோல சென்னை மாநகரைப் பொறுத்தவரை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலரும், உள்ளூர் திட்டக்குழுமம், மண்டல திட்டக் குழுமம், புதிய நகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உட்பட்ட இடங்களுக்கு அந்த குழுமத்தின் துணை இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோரும் தகுதியான அதிகாரிகளாக இருப்பார்கள்.
2 அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை உருவாக்கிய ரியல் எஸ்டேட் அதிபர்களும், நிலத்தை வாங்கிய உரிமையாளர்களும் தகுதியான இந்த அதிகாரிகளிடம் முறையாக விண்ணப்பித்து நிலத்தை வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால், இந்த நிலங்கள் கடந்த 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன் உருவாக்கப்பட்ட வீட்டு மனைகளாக இருக்க வேண்டும்.
இந்த நிலங்களை வரை முறைப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.100 வீதமும், நகராட்சிப் பகுதிகளில் ரூ.60 வீதமும், பேரூராட்சி மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் ரூ.30 வீதமும் அரசுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதுதவிர அங்கீகாரமற்ற வீட்டு மனை களை மேம்படுத்த வளர்ச்சிக் கட்டணமாக ஒரு சதுர மீட்டருக்கு மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.600-ம், சிறப்பு மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் ரூ.350-ம், முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிப் பகுதி களில் ரூ.250-ம், பேரூராட்சி பகுதிகளில் ரூ.150-ம், கிராம பஞ்சாயத்துகளில் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
3.வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மாநகராட்சிப் பகுதி என்றால் குறைந்தது 4.8 மீட்டர் அகலத்துக்கு சாலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். நகராட்சி மற்றும் கிராமப் பஞ்சாயத்து பகுதிகளில் குறைந்தது 3.6 மீட்டர் அகலத்தில் சாலைகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
3.வீட்டு மனைகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் திறந்தவெளி பொது நிலம் விடவேண்டும் (OSR land). இவ்வாறு திறந்தவெளி இல்லாமல் வீட்டு மனைகள் அமைக்கப்பட்டிருந்தால் அந்த ஒட்டுமொத்த வீட்டு மனையின் சந்தை மதிப்பில் 10 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும். வீட்டுமனைகளை வரையறை செய்வதற்கான ஆய்வுக் கட்டணமாக ஒரு வீட்டுமனைக்கு ரூ.500 செலுத்த வேண்டும்.
4.அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை இந்த புதிய விதிகளின்படி கட்டணம் செலுத்தி வரையறை செய்வதால், அந்த வீட்டுமனையில் உள்ள அங்கீகாரம் இல்லாத கட்டிடங்களையும், வரை முறைப்படுத்தி விட்டதாக அர்த்தம் இல்லை. அந்த மனையில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு எல்லா உரிமையும் உள்ளது.
இனிவரும் காலங்களில் வீட்டுமனை களை அமைக்கும்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளூர் நகரமைப்புக்குழு அதிகாரிகளிடம் முறையாக விண்ணப்பித்து உரிய அனுமதியை பெற வேண்டும்.
இந்த புதிய விதிகளின்படி அங்கீகார மற்ற வீட்டு மனைகளை வரையறை செய்ய வில்லை என்றால் அந்த மனைக்கு மின்சாரம், குடிநீர், கழிவுநீர் போன்ற எந்த இணைப்பும் வழங்கப்படாது. இந்த அங்கீகாரமற்ற நிலங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது. மேலும் அந்த நிலத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு திட்ட அனுமதியும் வழங்கப்படாது.
அங்கிகாரம் அற்ற மனைகளில் எவை எவை பத்திரப்பதிவு செய்ய இயலாது என்பதையும் "தமிழ்நாடு அங்கிகாரமற்ற வீட்டுமனை ஒழுங்குமுறை விதி -2017"
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி,
1.விவசாயத்துக்கு தகுதியான நிலங்கள், ஆறு, குளங்கள், கால்வாய்கள் போன்ற பொது நீர் நிலைகள் மற்றும் அந்த நீர் நிலைகளை பாதிக்கும் விதமாக உள்ள நிலங்கள் போன்றவைகளை மனைகளாக பத்திரப்பதிவு செய்ய இயலாது.
2.அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்கள், மதம் மற்றும் அறக்கட்டளை சம்பந்தப்பட்ட இடங்களை மனைகளாக பத்திரப்பதிவு செய்ய இயலாது.
3.திறந்தவெளி பொது நிலம் (OSR land) மற்றும் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை மனைகளாக பத்திரப்பதிவு செய்ய இயலாது.
4.வரைமுறைப்படுத்த தகுதியற்ற இடங்கள், சாலை, ரயில் போக்குவரத்து போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள், ஆக்கிரமிப் பில் உள்ள இடங்கள் மற்றும் வக்பு வாரிய சொத்துகள் போன்ற நிலங்களை மனைகளாக பத்திரப்பதிவு செய்ய இயலாது.
5.உயர் மின்னழுத்த கோபுரங்களின் கீழே எக்காரணம் கொண்டும் வீட்டு மனை களை அமைக்கக் கூடாது. அந்த இடங் களில் உள்ள மனைகளை வரைமுறைப் படுத்த அனுமதி வழங்கபடாது.
6.பயன்பாட்டில் இல்லாத விவசாய உலர் நிலங்களைப் பொறுத்தமட்டில் விவசாய இணை இயக்குநரின் ஒப்புதல் பெற்ற பிறகே மாவட்ட ஆட்சியர் மற்றும் நகரமைப்பு இயக்குநரின் அனுமதி பெற வேண் டும். அதுபோல மனைப் பகுதிகளில் பாசன கால்வாய்கள் இருந்தால் அவற்றை சேதப்படுத்தக் கூடாது.
(இந்த அதிகாரிகள் அந்த நிலங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, அதன்பின்னர் உரிய விதிமுறைகளை பின்பற்றி வீட்டு மனைகளை அமைக்க அனுமதி வழங்கலாம்).
இவ்வாறு அந்த அரசாணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில்,
கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன் பதியப்பட்ட அங்கீகாரமில்லாத மனைகளை மட்டுமே மறு பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கி உள்ளது.
அதன்பிறகு பதியப்பட்ட அங்கீகாரமற்ற மனைகளை மறு பத்திரப்பதிவு செய்ய முடியாது.
இதனை கருத்தில் கொண்டு இனி நிலம் வாங்குபவர்கள் அனைத்து வழிமுறைகளையும் சரிபார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். இடைத் தரகர்களின் சுய லாபத்திற்காக பலி கேடாகாமல் நன்கு ஆவணங்களை மேற்கூறிய விஷயங்களை வைத்து சரிபார்த்து உங்களுடைய முதலீடுகளை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.