தொலைந்துபோன ஒட்டகம்!
வறண்ட பாலைவனத்தில் ஒட்டகப் பயணம் மேற்கொண்டான் ஒரு மனிதன். நீண்ட பயணத்திற்குப் பிறகு வழியில் ஒரு மரத்தைக் கண்டதும் அதன் நிழலில் இளைப்பாறுவதற்காக இறங்கினான்.
பயணச் சோர்வு... ஆழ்ந்த நித்திரைக்கு ஆளானான் அவன்.
கண்விழித்துப் பார்த்தபோது அவன் மட்டுமே அங்கு இருந்ததைக் கண்டு திடுக்குற்றான்... ஆம், ஒட்டகத்தைக் காணவில்லை! ..
எழுந்தான்... ஓடினான்... தேடினான்... பலனில்லை..
.
பதறிப்போய்விட்டான்;. அதன் மீதல்லவா அவனது உணவும் தேவைகளும்?
என்ன செய்வது? எதுவும் அவனுக்குப் புலப்படவில்லை.
இனி நமக்கு வாழ்வேது! மரணமாக வேண்டியதுதான். தாகத்திற்குத் தண்ணீரோ உண்பதற்கு உணவோ எதுவுமில்லை! எல்லாம் அந்தப் பாழாய்ப்போன ஒட்டகத்தில்! அதுதான் தொலைந்துவிட்டதே! எங்கே போய்த் தேடுவது? எங்கே கிடைக்கப் போகிறது? - இவ்வாறு நிராசையின் உச்சகட்டத்தை அடைந்திருந்தான்.
அப்படியே அலைந்து திரிந்து களைத்து- மனம்நொந்து கடைசியில் ஒருமரத்தடிக்கு வந்து அதன் நிழலில் படுத்துச்சிறிது கண்ணயர்ந்து விடுகிறான்!
ஏதோ அரவம் கேட்டு கண்விழித்தான். என்ன ஆச்சரியம்! அவனது ஒட்டகம் அங்கே நின்றுகொண்டிருந்தது! அவன் படுத்திருந்த மரத்தடியில் அதன் கடிவாளம் சிக்கிவிட்டிருந்தது!
திடீரென தன்முன்னால் அந்த ஒட்டகத்தைக் கண்டதும் திக்குமுக் காடிப் போனான் அவன்! அளவிலா ஆனந்தம் அவனுக்கு! அதன் யதார்த்த நிலையை எவராலும் கற்பனை செய்ய முடியாது!
மரணத்திற்குப் பிறகு வாழ்வு கிடைத்தது போன்ற மட்டில்லாத மகிழ்ச்சி அது! அப்படியொரு சூழ்நிலை யாருக்கு ஏற்பட்டதோ அவர்தான் அதை முழுமையாக உணர முடியும்.
உடனே ஒட்டகத்தின் கடிவாளத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்தவாறு சொன்னான்: இறைவா! நீதான் என் அடிமை., நான் உன் எஜமானன்,.-ஒட்டகம் கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லத்தான் நா உயர்த்தினான். இறைவா நீதான் நல்லுதவி செய்த எஜமானன் என்று புகழத்தான் நாடினான். ஆனால் மகிழ்ச்சிப் பெருக்கின் காரணத்தால் நா தடுமாறியது., வார்த்தை தவறியது!
பாவம் செய்த மனிதன் பின்னர் மனம் திருந்தி நல்வழிக்குத் திரும்புவது குறித்து நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனின் அன்பு உள்ளம் அந்தளவுக்கு மகிழ்ச்சி அடைகிறது என்பதைப் பின்வரும் நபிமொழி நமக்குக் கூறுகிறது:
"தன்னுடைய அடியான் பாவமீட்சி தேடி தன் பக்கம் மீளும்பொழுது அதுகுறித்து அல்லாஹ் அதிக மகிழ்ச்சி உடையவனாக இருக்கிறான்., ஒரு பொட்டல் பூமியில் தனது ஒட்டகத்தைத் தவறவிட்டிருந்த உங்களில் ஒருவர், திடீரென அது கிடைக்கப் பெற்றதும் அடையும் மகிழ்சியை விட அதிகமாக!"
இதை அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ரியாலுஸ்ஸாலிஹீன்)