நன்றி எனும் கீழ்படிதல் _________________________
நம் வாழ்வில் தினசரி எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால், அவர்களையெல்லாம் நாம் நினைவில் வைத்து கொள்கிறோமா? என்றால் உடனே இல்லை யென்ற பதில்தான் நம்மில் பெரும்பாலானவர்களின் விடையாக யிருக்கும். காரணம், இன்றைய வேகமான காலச்சக்கரத்தில் சிக்கி, சின்னா, பின்னமாய் சுழன்று திரிகிறோம் நாம் ஒவ்வொரு வரும். என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை.
அல்லது நாம் சந்திக்கும் மனிதர்களால், 'இந்த ஆளால நமக்கென்ன ஆக போகுது..' என்ற அலட்சிய மனப்போக்கு என்று கூட சொல்லலாம்.
இந்நிலையில்தான்,
கடந்த மாதம் எலெக்ட்ரிக் பில் செலுத்துவதற்காக சென்றிருந்தேன் மின்வாரிய அலுவலகத்திற்கு.
கையில் பத்து ரூபாய் சில்லறையில்லாத தால் தடுமாறிக் கொண்டிருந்தேன்.
காசாளர் புலம்பிக் கொண்டிருந்தார்.
என் தடுமாற்றத்தைக் கண்ட,அலுவலக தூய்மை பணியில் ஈடுபடும் பெண் ஒருவர் முன்வந்து பத்து ரூபாய் நீட்டினார்.
சற்று அவரை ஏறெடுத்து பார்த்த பின் தான் புரிந்தது, நான் வசிக்கும் தெருவிலிருந்து, இரண்டு தெரு தள்ளி வசிப்பவர் என்பதை உணர்ந்தேன்.
சற்று அதிர்ச்சி, ஆச்சரியம். காரணம் ஏழு ஆண்டுகளாக
அத் தெருவில் வசிக்கும் நான் அவ்வபோது அவரை பார்ப்பது உண்டு,அவரும் என்னை பார்ப்பது உண்டு,ஆனால் ஒரு பொழுதும் அவரோ அல்லது நானோ பரஸ்பர புன்னகையோ ஒரு தலையசைத்தலோ சிறு அசைவை கூட ஏற்படுத்தியது இல்லை. அப்படி இருக்கையில் எனக்கு பத்து ரூபாய் கொடுத்து 'தன் தெருவில் வசிப்பவர் ஆச்சே..'என்ற நல்லெண்ணத்தில் எனக்கு உதவினார். என் பணியும் எளிதாய் முடிந்தது என்று கிளம்பி விட்டேன் அவருக்கு நன்றி கூறியபடி.
அடுத்த நாள் அவரை தெருவில் கண்டேன் அவருக்கு வழங்க வேண்டிய 10 ரூபாய் திருப்பி வழங்கினேன் வாங்க மறுத்த அவரிடம் நான் கட்டாயப்படுத்தி திணித்தேன். இதுவரை தெருவில் பலமுறை கண்டும் அவரை காணாதபோதும் அல்லது அவர் என்னை கண்டும் காணாத போலும் இருந்த நாம் பின் அடிக்கடி தொடர்ந்து காண நேருகையில் ஒரு பரஸ்பர புன்னகை சிறு தலையசைத்தல்
இது அரங்கேறியபடியே இருந்தது.
அப்போது எனக்குள் எழுந்த சிந்தனை இதுதான்.
நம் அவசியத்திற்கு அவசரத்திற்கு ஒரு பத்து ரூபாய் அளித்த பெண்மணிக்கு நன்றி அளிக்கும்
விதமாய்தான்...
நாம் அவ்வபோது அவரை நன்றியோடு ஒரு பரஸ்பர புன்னகை ஏற்படுத்துகிறோம். என்பதை உணர்ந்தேன்.
பத்து ரூபாய் என்பது,
சிறு உதவிதான். அதற்கே இவ்வளவு பணிவாய் பவ்யமாய் நம் அழகிய நிலையை (கீழ்ப்படிதல் ) நன்றி பெருக்கை அவருக்கு எடுத்துரைக்கிறோம் அவசரத்திற்கு உதவியதால்,
ஆனால், பிரபஞ்சத்தில் உயிரினங்களுக்கு வேண்டிய அத்தனை சௌகரியங்களையும் செய்து உணவு,உடை, உறைவிடம் இன்னும் தேவை உள்ள எவ்வளவோ கொடுத்துக் கொண்டிருக்கும் அனைத்திற்கும், மூலத்தின் ஆதாரமான இறைவனை நாம் எந்த அளவிற்கு நன்றி உணர்த்தலை (கீழ்படிதலை ) தெரியப்படுத்துகிறோம் என்ற குற்ற உணர்வு மேலோங்கியது.
இதுபோன்ற சிறு சிறு நிகழ்வுகள் தான் இறைவன்,தன் இருப்பிடத்தை நமக்கு அவ்வபோது நினைவுபடுத்துகிறான் என்பதை உணர்ந்துகொண்டேன், என்பதே நிதர்சமான உண்மை.