சென்னை பிப்ரவரி 27
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA வெளியிட்டுள்ள அறிக்கையில்
மெளலானா ஆசாத் கல்விச் சங்கத்தைக் (Moulana Azad Educational Foundation) கலைப்பதென ஒன்றிய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
சிறுபான்மை வெறுப்பு மனப்பான்மையின் காரணமாக ஒன்றிய பாஜக அரசு எடுத்துள்ள இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை மாணவர்களின் உரிமைகளுக்கு எதிரானதாகும். முஸ்லிம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இது கடுமையான பாதிப்பாக அமையும். சிறுபான்மை முஸ்லிம்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படும்.
மத்திய வக்ஃப் கவுன்சிலின் (CWC) உத்தரவின் பேரில் கூறப்படும் இந்த நடவடிக்கை, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பாதிக்கும் ஓர் அப்பட்டமான செயலாகும், இது "சப் கா சாத், சப் கா விகாஸ்" (அனைவருடனும் அனைவருக்குமான வளர்ச்சி) என்ற பிரதமர் மோடியின் உறுதிமொழிக்கு முற்றிலும் முரணானது.
1989 இல் நிறுவப்பட்ட மவ்லானா ஆசாத் கல்விச் சங்கம் ஒன்றிய அரசின் சிறுபான்மை விவகார அமைச்சரவையின் கீழ் கல்வியில் பின்தங்கிய சமூகப் பிரிவினருக்கு, குறிப்பாக நிதி சவால்களை எதிர்கொள்ளும் "முஸ்லிம் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக" இருந்து வருகிறது.
கடந்த காலங்களில், இந்தச் சங்கம் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் முழு நிதியுதவியுடன், சிறுபான்மை மாணவர்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. "காஜா கரீப் நவாஸ் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம்" மற்றும் "பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித்தொகைத் திட்டம்" போன்றவற்றின் முன்முயற்சிகள், சிறுபான்மை இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்துதல், மதச் சிறுபான்மையினரைச் சேர்ந்த திறமையான பெண்களுக்கு, தேவையான உதவித்தொகைகளை வழங்குவதற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளது.
அறக்கட்டளையின் கணிசமான நிதி இருந்தபோதிலும், நவம்பர் 30, 2023 நிலவரப்படி (1073.26 கோடி ரூபாய் வைப்பு) , அதன் உபரி நிதியை இந்திய ஒருங்கிணைந்த நிதிக்கு (Consolidated Fund of India ) விற்கு மாற்றச் சிறுபான்மை விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது அப்பட்டமான சூழ்ச்சி ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் இச்சங்கம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களால் பயனடையும் சிறுபான்மை மாணவர்களின் உரிமைகளுக்குப் பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.
மாபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மவ்லானா ஆசாத்தின் பெயரிடப்பட்ட இந்தச் சங்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதனைக் கலைக்கும் இந்த நடவடிக்கை தேசத்தை நிர்மாணித்த ஆளுமைகளின் கனவையும் புறக்கணிப்பது மட்டுமல்லாமல், அரசியல் சட்டச் சாசனம் வழங்கியிருக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ளடங்கிய சமநீதி, சமவாய்ப்புக் கொள்கைகளுக்கு எதிரானது.
நிர்வாக முடிவுகள் - சீர்திருத்தங்கள் என்ற பெயரில் சிறுபான்மை மாணவர்களின் உரிமைகள் நசுக்கப்படக் கூடாது. நமது நாட்டின் பன்முகத்தன்மையின் கூறுகளை நிலைநிறுத்த வேண்டும். எந்தச் சமூகத்திற்கும் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் உறுதி செய்ய வேண்டும்.
மவ்லானா ஆசாத் கல்வி சங்கத்தைக் கலைப்பது என்ற முடிவைக் கைவிட வேண்டும் என்று தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.