தஞ்சாவூர் மார்ச் 22
வரும் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19-ஆம்தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலத்தில் 40 தொகுதிகளிலும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர்.
அதன்படி, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருச்சி சிறுகனூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் திருச்சி, பெரம்பலூர் தொகுதி திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
பின்னர், பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வருகிறார். தஞ்சையில் அவருக்கு தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதையடுத்து நாளை சனிக்கிழமை மாலை 6 மணிக்குத் திருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரியில் நடக்கும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தஞ்சை தொகுதி தி.மு.க வேட்பாளர் முரசொலி, நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோரை அறிமுகம் செய்து ஆதரித்துத் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.