ஜெய்ப்பூர் ஏப்ரல் 06
‘பத்து ஆண்டு பாஜக ஆட்சி என்பது உணவுக்கு முன்பு வழங்கப்படும் ‘சூப்’ போன்றது. இனிதான் பிரம்மாண்ட விருந்து காத்திருக்கிறது’’ என்று ராஜஸ்தான் மாநிலம் சுரு நகரில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
பெரிய உணவகங்களுக்கு சென்றால் முதலில் பசியை தூண்ட சிலவகை உணவுகளை பரிமாறுகிறார்கள். அப்படித்தான் கடந்த 10 ஆண்டுகளாக மோடி உங்களுக்கு சாப்பாட்டுக்கு முன்பு அருந்தும் சூப் தந்திருக்கிறேன். இனிமேல்தான் பிரம்மாண்ட விருந்து உங்களுக்கு காத்திருக்கிறது.
இனிதான் நாட்டை நாம் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நான் சுரு நகருக்கு வந்த போது பாலகோட் விமான தாக்குதலில் இந்திய விமான படை ஈடுபட்டிருந்தது. அப்போது பயங்கரவாதிகளுக்கு நாம் வலுவான பாடம் கற்பித்தோம். பாரத மாதா தலைகுனிய நான் ஒருபோதும் விடமாட்டேன் என்று அப்போது சூளுரைத்தேன்.
அதன்படியே நாம் செய்து காட்டியதால் நமது எதிரிகளுக்குக் கூட இப்போது தெரியும், பிறந்திருப்பது புதிய இந்தியா என்பது.
ஆகையால் அவர்களது எல்லைக்குள் புகுந்துதாக்கக் கூட நாம் தயங்கமாட்டோம் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.
நமது விமான படை வீரர்கள் அன்று தாக்குதலில் இறங்கிய போது, காங்கிரஸும் அதன் ஆணவம் பிடித்த கூட்டணியினரும் அந்த தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டனர்.
தேசத்தை பிளவுபடுத்தி நமது ராணுவத்தை அவமதிப்பது தான் காங்கிரஸ் கட்சியின் அடையாளம். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி தலைவர்கள் மக்களவை தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. தங்களது ஊழல் அம்பலமாகிவிட்டதே என்ற பதைபதைப்பில் கூடிய கூட்டம் அது.
காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் சுயநலத்துக்காகக் கூடிய கூட்டமே அன்றி ஏழை, பட்டியலின, நலிவடைந்த மக்களின் நலனுக்கான கூட்டணி அல்ல.
‘மோடி கி கியாரண்டி’ நிறைவேற்றப்பட்டதற்கு ராஜஸ்தான் சரியான உதாரணம். உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் கேஸ் சிலிண்டர்களின் விலை குறைக்கப்படும் என்று நான் அளித்த உத்தரவாதத்தைக் காப்பாற்றினேன்.
காங்கிரஸின் தேர்வு முறைகேட்டை எதிர்த்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று இளைஞர்களுக்கு நான் அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
ராமர் கோயில் விவகாரத்தில் வாய் திறவாமல் அமைதிகாக்கும் படி காங்கிரஸ் தனது கட்சியினருக்கு அறிவுறுத்திவிட்டது. ஏனெனில் ராமரின் பெயரை உச்சரித்தாலே அழிந்துவிடுவோம் என்று காங்கிரஸ் அஞ்சுகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.