2024 மே 10
பத்திரிக்கை,ஊடகம் என்பவை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படுகிறது. பொதுமக்களின் நலனுக்காகச் செயல்படும் அமைப்புகளான அரசின் அரசியல் செயல்பாடுகள், நீதித்துறை,அரசு சார்ந்த நிறுவனங்கள் என இவற்றின் மூலம் ஏற்படும் நன்மைகள்,தீமைகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் பத்திரிக்கைகள்,ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கிறது.
நாட்டின் முன்னேற்றத்துக்கு வளர்ச்சியின் பாதை நோக்கி அழைத்துச் செல்வதுடன், பல்வேறு சித்தாந்தங்கள்,சிந்தனைகள் கொண்ட மக்களிடத்தில் கருத்துப் பரிமாற்றம்,விமர்சனங்கள்,எதிர்க் கருத்துகள்,ஆரோக்கியமான விவாதம்,என ஒரு செய்தியை மற்றவர்களுக்குப் பத்திரிக்கைகள் கொண்டுசேர்க்கின்றன.
உலகின் பல நாடுகளில் இருந்த அடக்கு முறை அடிமை தனத்திலிருந்து சுதந்திரம் பெறப் பத்திரிக்கைகள் முக்கிய பங்காற்றியதுடன். இவற்றை ஊக்குவிக்கும் வகையில் எழுத்தாளர்கள் சுதந்திர உணர்வை அந்த மக்களிடத்தில் உருவாக்கினார்கள்.
செய்திகளை முதன்மையாகச் சுமந்து சென்ற பத்திரிக்கைகள் பின்பு விஞ்ஞான வளர்ச்சியில் பல மாற்றங்களோடு செய்திகளையும், கருத்து பரிமாற்றங்களையும் கொண்டு செல்லக்கூடிய வகையில் வளர்ச்சி பெற்றுள்ளன.
காகிதத்தில் தொடங்கிய இவை வானொலி, தொலைக்காட்சி,ஃபேஸ்புக்,யூடிப்,
வாட்சப்,இன்ஸ்டாகிராம் என நீண்ட பட்டியலை நோக்கி தற்போது விரிவடைந்து செல்கிறது.
இதில் சினிமா என்பது ஒரு மனிதனின் உள்ளுணர்வைக் கவரும் வகையில் ஆளுமைத்தனமான தாக்கத்தை தரும் வகையிலுள்ள வலிமையான மீடியாவாகும்.
ஆரம்ப காலக்கட்டத்தில் சரியான வகையில் பயன்படுத்தினாலும்.தற்போதைய காலகட்டத்தில் சமூக அங்கத்தில் உள்ளவர்களின் மீதும் கூட தவறான கருத்துகளை இவைகள் மூலம் ஏற்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் முஸ்லீம்களைப் பல சினிமாக்களின் மூலம் தீவிரவாதிகளாகத் தொடர்ந்து சித்தரிக்கப்படுவதை அறிந்துள்ளோம். இவற்றை எதிர் கொள்ளும் வகையில் சினிமா போன்ற மீடியா துறைகளுக்கான முஸ்லீம்களின் பங்களிப்பு மிகவும் சொர்ப்பமானதும் ஒரு காரணமாகும். எதிரிகள் தாக்கும் இடத்தில் நமக்கான பாதுகாப்பை கவனிக்க தவறினால் நாம் வீழ்ந்து விடுவோம்.இவைகளை இஸ்லாமிய பல வரலாறுகள் நமக்கு கற்று தந்துள்ளது.
இதனால் முஸ்லீம்கள் மீது அவதூறு பரப்பக்கூடிய வகையில் பொய்ச் செய்திகளும், சித்தரிப்புகளும் சினிமாவில் காட்சி படுத்துவதுடன், இந்திய முஸ்லீம்களின் தியாகத்தின் உண்மையான வரலாறுகளும் தற்போது மறைக்கப்பட்டு வருகின்றனர்.
உண்மைகளையும்,நேர்மையான செய்திகளையும் கொண்டு சேர்க்கும் வகையில் எதிர்காலத்தில் முஸ்லீம் இளைஞர்கள் இந்தத் துறையில் ஆர்வமுடையவர்களை ஊக்கப்படுத்தி ஊடகவியலாளர்களாக இந்தியாவில் நாடு முழுவதும் உருவாக்கப்பட வேண்டும்.
இன்றைய கல்வித் துறையில் மீடியா தொடர்புடைய கல்விக்கான பாடப்பிரிவுகள் ஏராளமாக வந்துவிட்டன.
இதில் சிறந்த வேலை வாய்ப்புகள்,சமூக அந்தஸ்து,வருமானம்,என இவைகளை உயர்த்தித் தருகிறது.பிற கல்விகளைப் போல் மீடியா கல்விகளும் இன்றைய காலத்தில் சிறந்துள்ளது என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்
உலகில் உள்ள பல நாடுகளில் மீடியாதுறை இளைஞர்களின் கவனத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.