*தர்வேஷ் ரஷாதி ஹழ்ரத் (ரஹ்)*
தொடர்ந்து 4,5 நாட்களில் 4 ஆலிம்களின் மரணம்.
டி.நகர் மர்ஹூம் இல்யாஸ் காஷிஃபியின் வஃபாத் செய்தி. அதன் ஈரம் காயும் முன்பே தர்வேஷ் ரஷாதி ஹழ்ரத்தின் மறைவுச் செய்தி. மனமெல்லாம் ரணமாய் இருக்கிறது. இறைவிதியை பொருந்திக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர மனதை வேறெதுவும் அமைதிப்படுத்தாது.
நேற்றிரவே மர்ஹூம் அவர்கள் அலைகடலென திரண்ட ஆலிம்கள், சமுதாயப் பிரமுகர்களுக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டார்கள். அல்லாஹ் அவர்களின் மறு உலகப் பயணத்தை இலேசாக்குவானாக! ஆமீன்.
ஹழ்ரத் அவர்களைப் பற்றி பேச, எழுத ஒவ்வொருவருக்கும் நிறைய செய்திகள் உண்டு. எனக்கும் கொஞ்சம் உண்டு. மன ஆறுதலுக்காக சிறிது எழுதிக் கொள்கிறேன்.
எப்போதும் புன்னகை, எல்லோரையும் அரவணைத்தல், நகைச்சுவை ததும்பும் உரையாடல், ஓதும் மாணவனையும் மதித்துப் பேசுதல்.
இப்படி எவ்வளவோ நற்குணங்கள் ஹழ்ரத் அவர்களிடம். கொஞ்சம் எட்டி இருந்தே நான் ஆச்சரியமாய் பார்க்கும் ஒரு பெரும் ஆளுமை அவர்கள். சிறு வயதில் ஹிஃப்ழு மாணவர்களாய் அவ்வப்போது கூட்டங்களில் கித்மத் செய்யும்போது பார்க்கும் பாக்கியம் கிடைக்கும். பேசியது எல்லாம் பிற்காலத்தில் தான் .
தூரமாய் இருந்தே பெரியார்களை ரசிக்கும் பழக்கம் எனக்கு. அருகில் செல்ல எப்போதுமே தயக்கம், இப்போதும் கூட. மாற்ற நினைக்கிறேன் முடியவில்லை. இதுதான் என் இயல்பு போல.
ஆனால் என் நீண்ட நாள் நண்பனொருவன் இருக்கிறான், அவனைப் பார்த்து நான் எப்போதுமே ஆச்சரியப்படுவேன். எங்கப்பா இருக்க இப்ப? என்றால் காலை நாஷ்டா கலீல் ஹழ்ரத்துடன் கல்தோசை சாப்பிடுகிறேன் என்பான். மதியம் கேட்டால் மண்ணடியில் மட்டன் பிரியாணி மர்ஹூம் அப்துர் ரஹ்மான் ஹழ்ரத்துடன் என்பான். இரவு உணவு இப்ராஹீம் பாகவி ஹழரத்துடன் இடியாப்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் என்பான்.
சில நேரம் திடீரென்று எங்கே இருக்கிறாய் என்று கேட்டால் ஹைதர் அலி ஹழ்ரத்துடன் ஹைதராபாத்தில் உள்ளேன் என்பான். சில நேரம் காஜா ஹழ்ரத்துடன் காயல்பட்டிணத்தில் என்பான். திடீரென்று ரூஹுல் ஹக் ஹழரத்துடன் ரூஹானியத்தான பேச்சில் இருக்கிறேன் என்பான். அதிகாலை சில நேரம் கேட்டால் அலி ஹழரத்துடன் அளவளாவிக் கொண்டிருக்கிறேன் என்பான். பெரும் பாக்கியசாலி. இப்படி எல்லா பெரியார்களிடமும் தொடர்பு வைத்திருப்பான். பொறாமையாய் இருக்கும். சரி நல்ல செயல்களில் பொறாமை கூடும் தானே. இதை அவன் படித்துவிட்டு என்னை திட்டாமல் இருக்க வேண்டும்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் ஜும்ஆ பள்ளியில் வைத்து சுட சுட டீ ,வடை பிஸ்கட்டுடன் சூடான பயான் குறிப்புகளும் கிடைக்கும். என்னைப் போன்ற சிறிய ஆலிம்கள் தவறாமல் செல்வோம். பயான் குறிப்புகளை விட மூத்த ஆலிம்களுடன் சில மணி நேரங்கள் அமர்ந்து அவர்கள் பேச்சை கேட்பது அவ்வளவு ஆனந்தமாய் இருக்கும்.
அந்த மூத்த ஆலிம்களில் முக்கியமானவர் மர்ஹூம் தர்வேஷ் ரஷாதி ஹழ்ரத் அவர்கள். மூன்று நாட்களுக்கு முன் நம்மை விட்டு பிரிந்துவிட்ட மர்ஹூம் முஹம்மது இல்யாஸ் காஷிஃபி அவர்களும் வருகை தருவார்கள். அமைதியாய், அடக்கமாய் அழகாய் ஒரு வாரம் குறிப்பு தருவார்கள். மறு வாரம் கான் பாக்கவி ஹழரத், அடுத்த வாரம் இப்ராஹீம் பாகவி ஹழ்ரத், அதற்கடுத்து யூசுப் சித்தீக் மிஸ்பாஹி ஹழ்ரத், அடிக்கடி மன்சூர் காஷிஃபி ஹழ்ரத். இப்படியாய் பயான் குறிப்புகள் நடைபெறும். மஜ்லிஸை கலகலப்பாக்குவதில் தர்வேஷ் ரஷாதி ஹழரத் அவர்களுக்கு நிகர் அவர்களே.
இப்ராஹீம் ஹழரத்தின் நாஷ்டா ஏற்பாடு இறுதியில் இருக்கும். மஜ்லிஸை விட்டு கிளம்பும் போது மனமும் வயிறும் நிறைந்திருக்கும்.
ஹழ்ரத் அவர்களை சந்திக்கும் சமயம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊரில் இருக்கும் சூழல் எனக்கு.
ஒரு முறை மதுரையில் சந்தித்தேன், என்னப்பா இங்க இருக்க..? என்றார்கள்; கித்மத் இங்குதான் ஹழ்ரத் என்றேன். "சென்னையில் இல்லாத இடமாப்பா.. எவ்வளவோ பணிகள் அங்க கொட்டி கிடக்கு, நீ பேசாம சென்னைக்கு வந்துரு" என்றார்கள் உரிமையுடன். பயந்து பயந்து நாம் முஸாஃபஹா செய்யும்போது கண்டுகொள்ளாது யாரோ,எவரோ என ஒப்புக்காக கை கொடுப்பவர்களுக்கு மத்தியில் ...பெரிய இமாம், மூத்த ஆலிம் என்று நாம் தயங்கி நிற்கும்போது அதை உடைத்து அவர்களே சகஜமாய் பேச ஆரம்பிப்பார்கள். எல்லாம் விசாரிப்பார்கள். அபூர்வ குணம் அது. அல்லாஹ் அவர்களின் மண்ணறையை வெளிச்சமாக்கட்டும்.
கூட்டங்களை வழிநடத்துவதில் கெட்டிக்காரர். கம்பீரக் குரலில் கட்டுக்கோப்பாய் வழி நடத்தி, எப்படி இவங்களால மட்டும் முடியுது என்று நம்மை எண்ண வைத்து விடுவார்கள். கடைசி சில வருடங்களாய் தப்லீக் ஜமாஅத்தில் கூடுதல் ஈடுபாடு காட்டினார்கள்.
சில மாதங்களுக்கு முன் பத்தமடையில் தப்லீக் இஜ்திமா. ஆலிம்களுக்கான தனி அமர்வு. தர்வேஷ் ஹழ்ரத் தான் பேசினார்கள்.
நகைச்சுவையாய் ஒரு நண்பனைப் போன்று பேசிக் கொண்டே வந்தார்கள்..,
தப்லீக் என்றவுடன் ஞாபகம் வருகிறது., என் பதின்ம வயதில் மர்கஸில் ஆலிம்களுக்கான ஒரு கூட்டம். அல்லாமா கலீல் அஹமது கீரனூரி (ரஹ்)நவ்வரல்லாஹு மர்கதஹூ அவர்கள் பேசுகிறார்கள் என்றவுடன் தப்லீகில் பெரிய ஈடுபாடு இல்லாதவர்களும் பெருமளவில் கூடியிருக்கிறார்கள். கலீல் ஹழ்ரத்தும் தர்வேஷ் ஹழ்ரத்தும் நகைச்சுவையாக பேசிக்கொள்கிறார்கள். கேட்டுக் கொண்டே இருக்கலாம் அதை. அப்போது கலீல் ஹழ்ரத் அவர்கள், "தர்வேஷ் ஹழ்ரத், உள்ள வந்து வேலை செஞ்சி பாருங்க, நாமும் செய்ய வேண்டிய வேலை தான் இது" என்றார்கள் உரிமையுடன்.
இப்போது பத்தமடையில்
தர்வேஷ் ஹழரத்தின் பயான் நடக்கிறது..
"என்ன ஹழ்ரத் நீங்களும் கெட்டுப் போய்ட்டீங்களா' அப்டின்னு நீங்களெல்லாம் நெனக்கிறது எனக்கு புரியுது... ஆனால் நான் ரொம்ப லேட் டா வந்துட்டேன். ரொம்ப அற்புதமான வேலை. நாமும் கண்டிப்பா செய்யணும்" என்று அவர்கள் சொல்லியபோது .. இதைப் பார்க்க கீரனூரி ஹழ்ரத் இல்லையே என்று என் மனம்எண்ணியது. இடையில் ஒரு விஷயம், ஹழ்ரத் பேசிக் கொண்டிருக்கும்போதே வேறொரு வட நாட்டு சிறு வயது ஆலிம் வந்து பேச ஆரம்பித்துவிட்டார். அதை உலமாக்கள் கூட்டம் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பதை உலமாக்கள் தங்களுக்குள் மெதுவாக பேசிக் கொண்டதன் மூலமே தெரிய முடிந்தது. வெறும் தப்லீக் காரர்கள் மட்டும் இருக்கும் கூட்டத்திற்கு ஓகே தான். ஆனால் அழைப்பின் பேரில் எல்லா ஆலிம்களும் அமர்ந்திருக்கும் ஒரு கூட்டத்தில் சிறு வயது ஆலிமை பேச வைக்காமல், அனைவராலும் விரும்பப்படுபவரும் மூத்த ஆலிமுமான தர்வேஷ் ரஷாதி ஹழ்ரத் அவர்களையே தொடர வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அப்போதும் ஹழ்ரத்திடம் முஸாபஹா. என்னப்பா இங்க இருக்க? அதே கேள்வி ..இப்ப இங்கதான் ஹழ்ரத் பணி... என்றேன். சிரித்துக் கொண்டார்கள்.
சென்ற மாதம் ஹஜ்ஜுக்கு ஹாஜிகளை வழியனுப்பும் நிகழ்வில் ஹழ்ரத் அவர்களை சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது. அதே கம்பீரக் குரலிலே ஹாஜிகளை வழி அனுப்பி கொண்டிருந்தார்கள். லெப்பைக்..அல்லாஹும்ம லெப்பைக்..லெப்பைக் லா ஷரீக்க லக லெப்பைக். இன்னல் ஹம்த .....என்று தல்பியாவை கம்பீரமாய் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த சப்தம் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
கடைசியாய் ஹாஜிகளை வரவேற்க சென்றபோது ஹழரத் அவர்களை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அதே கர்ஜனைக் குரல், அதே கம்பீரம், ஹாஜிகளை வரவேற்க வந்திருக்கும் உறவுகளே! ரோட்டுக்கு நடுவுல நிக்காதீங்க., வண்டி போறதுக்கு வர்றதுக்கு சிரமம் உண்டாக்காதீங்க.. முன்னாடி வாங்க ஆர்வம் இருக்கலாம் ஆர்வக்கோளாறு இருக்கக் கூடாது என்று அவர்களுக்கே உரிய நகைச்சுவையோடு சொல்லிக் கொண்டிருந்தார்கள். "ஹாஜிகளை வரவேற்பது நம் மரபு மட்டுமல்ல மார்க்கமும் கூட, தல்பியாவைக் கொண்டு அனுப்பி வைத்தோம், தக்பீரைக் கொண்டு வரவேற்போம். அல்லாஹ் நமக்கும் ஹஜ்ஜின் பாக்கியத்தை தருவானாக!" இதுதான் நேரடியாக நான் கேட்டதில் அவர்களின் இறுதியான வார்த்தை.
அல்லாஹ் அவர்களின் அனைத்து பணிகளுக்கும் உயர்வான கூலி கொடுப்பானாக! ரப்பின் மஃக்ஃபிரத்தையும் ,பொருத்தத்தையும் பெற்றவர்களாக ஆக்கி, உயர்ந்த சுவனத்தையும் நஸீபாக்குவானாக. ஆமீன்.
நினைவுகளுடன்
அபூ ஹலீமா