2024 ஜூலை 15
இந்திய காலனியாதிக்க ஆட்சியிலும் பிராமணர்களது அதிகாரம் உயர்ந்திருந்தது. சுமார் 3.2 சதவிகிதம் மட்டுமே இருந்த பிராமணர்கள் சகல துறைகளிலும் பெரும்பான்மையான வாய்ப்புகளை அவர்கள் மட்டுமே பெற்றுவந்தனர். அன்றைய இந்திய மன்னர்கள் காலங்களில் இருந்த ஆங்கில வழிக் கல்வியும்,அதிகாரமும் அவர்களுக்கு இந்த நிலையை உயர்த்தி கொடுத்தன. சுதந்திரப் போராட்ட காலங்களிலும்,அதன் பின்பும் நாட்டின் தலைமையும் அவர்களிடமே இருந்தன. அடுத்த நிலைகளில் சத்திரியர்கள், வைசியர்கள் பதவிகளில், கல்வியில் இடம்பெற்றனர்.
இதன் பின்பு இந்தியாவியல் சுதாரிக்க துவங்கிய முஸ்லிம்கள் தங்களுக்கென உரிமைகளை பெற முஸ்லீம் லீக் கட்சி துவங்கப்பட்டது. தொடங்கப்பட்ட உடனேயே இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையையே முதலில் முன்னிறுத்தினார்கள். 1906 அக்டோபர் 1ஆம் நாள் ஆகாகான் தலைமையில் அன்றைய தலைமை ஆளுநர் மிண்டோவைச் சந்தித்து முஸ்லிம்கள் இடஒதுக்கீடு கோரினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு 1909 ஆம் ஆண்டு, மின்மோலிமார்லி சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, இஸ்லாமியர்களுக்குத் தேர்தல்களில் தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன.
இந்த இடஒதுக்கீடு அரசியல் தளத்தில் மட்டுமே அமைந்தது, வரலாற்றில் பிரிட்டிஷ் ஆங்கிலேய அரசு வழங்கிய முதல் இடஒதுக்கீடு முஸ்லிம்களிலிருந்து துவங்கியது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இஸ்லாமியர் இட ஒதுக்கீடு என்பது பல வகையான பரிமாணங்களை கடந்து வந்துள்ளது எனலாம். 1927 முதல் 1947 வரை சென்னை மாகாணத்தில் 16 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை கல்வியிலும்,பதவிகளிலும் பெற்று வந்துள்ளனர் முஸ்லிம்கள்.
1947ம் வருடத்தில் ஓமந்தூர் ராமசாமியால் இந்த சதவிகிதம் 7 ஆக குறைக்கப்பட்டது. இந்த 7 சதவிகித இட ஒதுக்கீடு 1954ம் ஆண்டுவரை முஸ்லிம்களால் பெறப்பட்டுள்ளது.
நேருவுக்குப் பிறகு இந்தியாவில் இரண்டு பிரதமர்களை தேர்வு செய்யக்கூடிய நிலையில் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்தவராக காங்கிரஸ் கட்சியின் காமராஜர் இந்திய அரசியலில் அறியப்பட்டவர் ஆவார்.
1954ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது முஸ்லிம்களுக்கான இந்த 7 சதவிகித இட ஒதுக்கீட்டையும் தேவை இல்லை என நீக்கம் செய்தார்.
மத ரீதியான இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று காமராஜர் முடிவு செய்து, முஸ்லிம் இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்த பிறகு, தமிழகத்தில் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக காங்கிரஸ் கட்சியை வெறுக்கத் தொடங்கினார்கள். அரசியலில் துவக்க நிலையிலிருந்த திமுக கட்சிக்கு இது சாதகத்தை ஏற்ப்படுத்தியது.
காமராஜரின் ஆட்சி பற்றி மட்டும் சிலாகித்துப் பேசுவோர் காமராஜரின் தோல்வி குறித்து நடுநிலையுடன் பேசுவதில்லை. அந்த நேரத்தில் தான் காமராஜர் தள்ளுபடி செய்த இட ஒதுக்கீட்டை நாங்கள் பெற்றுத் தருகிறோம் என்று கூறியது திமுக. இதனால் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக ஆதரித்து வெற்றி அடையவைத்தனர்.
இட ஒதுக்கீடு விவகாரமே மாநிலக் கட்சியாக திமுக முதன் முதலில் உருவெடுத்தது. திமுகவால் முஸ்லிம் இட ஒதுக்கீட்டை உட னடியாக செயல்படுத்த முடியாமல் போனது. பின்னர் 1973ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, இஸ்லாமியர்களை அப்போது இருந்த 31 சதவிகித பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீட்டில் இடம்பெற வைத்தார். அதன் பிறகும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து தனி இட ஒதுக்கீட்டிற்காக போராடி வந்தனர்.
2008ஆம் ஆண்டில் தான் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இஸ்லாமியர்களுக்கு தனியாக 3.5 சதவிகித இட ஒதுக் கீட்டை அளித்தது!
ஆனாலும், ஒதுக்கப்படும் பணி யிடங்களை நிரப்புவதில் ஏற்படும் குறைகள் பற்றியும்,3.5 சதவிகித இட ஒதுக்கீடு மிகவும் குறைவாக உள்ளது என்பதைப் பற்றியும் முஸ்லிம்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து இட ஒதுக்கீட்டை அதிகரிக்க ஆட்சியில் இருக்கும் தமிழக அரசிடம் கோரிக்கைகளைத் தொடர்ந்து எழுப்பியவண்ணம் உள்ளனர்.
அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டில் திமுகவின் மீதே கூட்டணி சவாரி செய்து வருகிறது,அரசியல் களத்தில் தன் தவறை உணராத காங்கிரஸ் கட்சி.