சென்னை ஆக 06
வங்கதேசச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கொண்டு வர ஹசீனா தலைமையிலான அரசு முடிவு செய்தது. பாகிஸ்தானுக்கு எதிராகக் கடந்த 1971ல் நடந்த போரில் வெற்றி பெற்று வங்கதேசம் என்கிற தனி நாடு உருவானது. இப்போரில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு வங்கதேச அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கக் கடந்த 2018ல் முடிவு செய்யப்பட்டது.
இந்த இடஒதுக்கீட்டால் அவாமி லீக் கட்சியினரே ஆதாயம் அடைவார்கள் எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இட ஒதுக்கீட்டை 5% குறைத்த நீதிமன்றம் தீர்ப்பைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் ஓய்ந்திருந்த நிலையில் கடந்த வாரம் பேட்டி அளித்த பிரதமர் ஷேக் ஹசீனா, சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என்றால், பாகிஸ்தான் ஆதரவாளர்களுக்கு ஒதுக்கீடு வேண்டுமா? என்பதே எனது கேள்வி’’ என்றார். இந்தப் பேட்டி வெளியான சில மணி நேரத்தில் மீண்டும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். வங்கதேசத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஹசீனா. பல அரசியல் பிரச்சினைகளைச் சமாளித்த அவர் மாணவர் சக்திக்கு முன்பாக இப்போது தோற்றுள்ளார்.
மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். அதைத் தொடர்ந்து பிரதமர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பல பொருட்களையும் திருடிச் சூறையாடினர். அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், ராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.
நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சமடைந்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தின் வலுவான பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா.
இதேபோன்ற நிலை இலங்கையில் கடந்த 2022ல் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது. அப்போது அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினார். உடனே போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் நுழைந்து அங்கிருந்து சோபாக்களில் அமர்ந்தும், அதிபரின் படுக்கையில் படுத்தும், நீச்சல் குளத்தில் குளித்தும் அமர்க்களப்படுத்தினர்கள். அதிபர் மாளிகையிலிருந்து கலை நயமிக்க பொருட்களைச் சிலர் எடுத்துச் சென்றனர். அதிபர் மாளிகை சூறையாடப்பட்டது.
சொந்த நாட்டு மக்களுக்கு விரோதமானதை ஒரு அரசு தொடர்ச்சியாகச் செய்திடும்போது அது மக்கள் கிளர்ச்சிக்கு வித்திடுகிறது.
பாகிஸ்தான்,இலங்கை,வங்கதேசம் என இந்த நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி இந்த நாடுகளில் நிலைத்தன்மையற்ற அரசியல் சூழல் நிலவுகிறது.இதற்கு அங்கு ஆட்சி செய்த ஆட்சியாளர்களே காரணமானவர்கள்.
பெட்ரோல்,அத்தியாவசியப் பொருள்கள் விலைவாசி உயர்வு,பொருளாதார வீழ்ச்சி,வேலையின்மை, அரசியல் அதிகாரம் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கே கிடைக்கப்பெறுவது, ஏழை எளிய மக்களுக்கு கடுமையான வரி விதிப்பு, கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள்,
ஊழல்,லஞ்சம், நலிவடைந்து வரும் சிறு,குறு தொழில்கள்,மாநில அரசுகளுக்கு இடையே ஒன்றிய அரசு காட்டும் பாரபட்டசம், எனக் கடந்த பத்தாண்டுகளாக நீண்ட பட்டியல் மோடி ஆட்சியில் இங்கும் இருந்து வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால் வங்கதேச நிலை இந்தியாவிற்கும் வரும் என PTR தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.