கடந்த காலங்களில் பெரும்பாலானோரிடம் சிறுசேமிப்புப் பழக்கம் இருந்தது. தற்போது அது குறைந்துள்ளது. அதனால் கடந்த காலங்களில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இன்று சேமிப்புப் பழக்கம் குறைந்ததால் கடன் வாங்குவோர் எண்ணிக்கை மிகுந்துள்ளது. ‘கடன் பட்டார் நெஞ்சம்போல்...’ எனும் முதுமொழிக்கேற்ப, வட்டிக்குக் கடன் பெற்றோர், அதை வசூலிக்க வருபவரைக் கண்டுவிட்டால் அவர்களை அச்சம் கவ்விக்கொள்கிறது; பதற்றம் பற்றிக்கொள்கிறது. ஏனெனில் உரிய தவணைக் காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், வசூலிக்க வந்தவன் கண்டபடி திட்டுவதையும் இகழ்ந்து பேசுவதையும் கேட்டுத்தான் ஆக வேண்டும். அது மட்டுமின்றி, அக்கம் பக்கத்தார் பார்த்துக்கொண்டிருக்க, அவன் திட்டுவதைக் கேட்கும்போது மானம் போகும்; உயிரையே மாய்த்துக்கொள்ளலாமா எனத் தோன்றும்.
கடந்த காலங்களில் கடன் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது. தற்காலத்தில் கடன்பெறுவது மிகவும் எளிது. ஏன், நாமே கேட்காவிட்டாலும் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடன் வாங்கிக் கொள்ளுமாறு நம்மைத் தூண்டுகின்றார்கள்; தொடர்படியாகக் குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். கடனை வாங்கும் வரை நம்மை அந்தத் தனியார் வங்கிகள் விடுவதில்லை. ஏனெனில் கடந்த காலங்களில் கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது வாங்கிய பணத்தை மட்டும் கொடுத்தால் போதுமானது. அதை ஓர் உதவியாகச் செய்துவந்தனர். அதனால்தான் அதனைக் ‘கைமாற்று’ என்று அழைத்துவந்தனர்.
ஒருவர் தம்மிடம் உள்ள பணத்தை வேறொருவருக்குக் குறிப்பிட்ட காலத்திற்குக் கொடுத்துவிட்டு, அதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதுதான் கைமாற்று ஆகும். ஆனால் தற்காலத்தில் வட்டிக்குத்தான் கடன் கொடுக்கப்படுகிறது. எனவே அது ஒரு வியாபாரமாகக் கருதப்படுகிறது. அதனால்தான் நாமே கேட்காவிட்டாலும் ஒவ்வொரு வங்கியும் நம்மீது வலிந்து கடனைத் திணிக்கப்பார்க்கிறது. அதன்மூலம் நம்மிடமிருந்து வட்டி வாங்கிச் சம்பாதிக்க முனைகிறது. அவர்களிடமிருந்து கடனை வாங்குகிற வரைதான் நம்மிடம் அவர்கள் கெஞ்சுவார்கள். கடன் வாங்கிவிட்டால் அவ்வளவுதான். அதன்பின் அவர்களின் பேச்சை நாம் கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதுதான் சட்டம்; அவர்கள் போடுவதுதான் வட்டி.
வங்கிகளின் வலியுறுத்தல்களால் கடனை வாங்கிய பலர் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அல்லாடுகின்றனர். அதைத் திருப்பிச் செலுத்தும் வகையில் வருவாய் இல்லை அல்லது அந்தந்த மாதத்திற்கான செலவுகளைச் சமாளிக்கவே பணமெல்லாம் தீர்ந்துபோய்விடுகிறது. பிறகு வாங்கிய கடனை எப்படிச் செலுத்த முடியும்? இத்தகையோர் படும்பாடு சொல்லி மாளாது. எனவே அன்பர்களே, திருப்பிச் செலுத்த இயலாது எனும் நிலையில் உள்ளோர் கடன் வாங்குவதை முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
அண்மையில் ஈரோட்டில் ஒரு குடும்பத்தினர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாததால் அக்குடும்பத்திலுள்ள பெண்மணி தம் இரண்டு மகள்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்துகொண்டார். (தந்தி: 20.07.2024) பெற்ற கடனை மாதந்தோறும் திருப்பிச் செலுத்த இயலாததால் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பது எவ்வளவு பெரிய சோகம்; அத்தோடு இஸ்லாமியப் பார்வையில் இது எவ்வளவு பெரிய பாவம்!
முஹம்மது பின் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் தம் தலையை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள். பின்னர் தம் உள்ளங்கையைத் தம் நெற்றியில் வைத்தார்கள். பிறகு, சுப்ஹானல்லாஹ், எவ்வளவு கடுமையானது இறக்கப்பட்டுள்ளது? என்று கூறினார்கள். நாங்கள் அமைதியானோம்; திடுக்குற்றோம். மறுநாள் ஆனபோது, “அல்லாஹ்வின் தூதரே! இறக்கப்பட்டுள்ள கடுமையானது என்னவோ?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எவன் கையில் என் ஆன்மா உள்ளதோ அவன்மீது ஆணையாக! ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டு, பின்னர் உயிர்கொடுத்துக் கொல்லப்பட்டு, பின்னர் உயிர்கொடுத்துக் கொல்லப்பட்டாலும் அவர்மீது கடன் இருந்தால் அதை அவர் நிறைவேற்றுகின்ற வரை சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார்கள். (நஸாயீ: 4684/ 4605)
கடன் வாங்காதீர்,don't borrow,