19 செப் 2024
முஸ்லீம்களின் பாபர் மசூதி இடித்து ஆதாயம் பெற்ற ஒன்றிய பாஜக அரசு அடுத்த அரசியல் ஆதாயம் பெறுவதற்கு முஸ்லீம்களின் வக்ஃப் வாரியத்தில் ஆபத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம்களின் மூலம் முஸ்லிம்களுக்குப் பயன்படக் கிடைத்துள்ள சொத்துக்கள் தான் வக்ஃப் வாரிய சொத்துகளாக உள்ளன.
அன்றைய மத்திய,மாநில அரசுகளும் முஸ்லீம்களின் முன்னேற்றத்துக்காகவும், மேலாண்மை செய்திடவும் வக்ஃப் வாரியம் அமைத்து நாடு முழுவதும் முஸ்லிம்களைப் பிரதிநிதிகளாகக் கொண்டு இந்த தானம் சொத்துக்கள் இன்றும் நிர்வகிக்கப்படுகின்றன. இந்திய இரயில்வே மற்றும் இராணுவ துறைக்குச் சொந்தமான சொத்துகளுக்கு அடுத்தபடியாக முஸ்லீம்களின் வக்ஃப் சொத்துகள் உள்ளன.
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கிருத்துவ மதத்தினர்களுக்கும் ஏராளமாக தானச் சொத்துக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில் அடிப்படை கல்வி நிலையங்கள், உயர்கல்வி கூடங்கள், மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள் என ஊரின் மைய்யபகுதிகளாக காணப்படும் இடங்களில் உருவாக்கிக்கொண்டனர்.
ஜர்ச் ,ஜெபக் கூடங்கள் என வழிப்பாட்டு தளங்களைப் பெரும்பான்மையாக இதன் உள்ளேயே இருப்பதைக் காணமுடிகிறது.
இந்து அறநிலை துறை,வக்ஃப் வாரியம் போன்ற அமைப்புகளின்றிக் கிருத்துவ மக்களைக் கொண்டே இந்தச் சொத்துக்கள் நிர்வாகிக்கபடுகிறது. அடித்தட்டு கிருத்துவ மக்களிடத்திலும் இந்தச் சொத்துக்களின் பயன்களை முழுமையாகப் பெறச் செய்துள்ளனர். கிருத்துவ மக்களின் கல்வி மற்றும் மருத்துவச் சேவைகளில் இந்துக்களும், முஸ்லீம்களும் அதிகளவில் பயனடைகிறோம்.
இந்திய அளவிலும், தமிழகத்தில் அதிகம் முஸ்லிம்கள் வாழும் அனைத்து ஊர்களிலும் சென்னை, திருச்சி,வேலூர்,திருப்பூர் போன்ற பெரு நகரங்களிலும் தமிழக அரசும் மாவட்ட வாரியாக சர்வே எண் உட்பட Wakf bourd of Land எனத் தனிக்கை செய்து முஸ்லீம்களின் நிர்வாகத்தின் கீழ் தந்துள்ளது.
வக்ஃப் சொத்திற்குத் தற்போது எழுந்துள்ள பிரச்சனை அனைத்து முஸ்லீம்களுக்கு உரியதாகப் பார்க்கப்படும் நிலையில் முஸ்லிம்களில் அப்பகுதி பள்ளிவாசல் முத்தவல்லிகள்,நிர்வாகிகள் என இந்த வக்ஃப் சொத்துக்கள் தற்போதும் நிர்வகித்து வருகின்றனர்.
கிருத்துவர்கள் போன்று கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுக்கு வக்ஃப் சொத்துகளைப் பயன்படுத்திக் கொள்ள முஸ்லீம் சமூகம் ஆரம்பம் முதல் இன்று வரை தவறி வருகிறது. இந்தியாவில் 1964ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் ஒரே ஒரு கல்லூரி மதுரை மாநகரில் உள்ள முகையத் ஷா சிர்குரோ வக்ஃப் வாரியக் கல்லூரியாகும்.
கிருத்துவச் சமூகம் அவர்களின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு அன்றைக்குக் கிடைத்த சொத்துக்களைச் சிறப்பாகப் படுத்திக் கொண்டுவருகின்றனர். தற்போது எழுந்துள்ள வக்ஃப் சொத்துகளுக்கு உள்ள அச்சுறுத்தல் போன்று கிருத்துவர்களின் சொத்துக்களுக்கு எதிர்காலத்திலும் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லையெனலாம்.
வக்ஃப் சொத்துக்கள் அனைத்து ஊர்களில் வழிபாட்டுத் தளங்களாகவும், அவற்றைச் சுற்றிய மீதமுள்ள இடங்களில் ஆரம்பக் காலங்களில் வாடகைக்குக் கடைகளும் கட்டித்தரப்பட்டுள்ளன. இவையும் பெருவாரியான ஊர்களில் முறையான பராமரிப்புகள் இன்றியும் இருந்து வருகின்றன. இந்தியாவில் மும்பை அம்பானி வீடு, நட்சத்திர விடுதி முதல்,தமிழகத்தில் கட்சி அலுவலகங்கள், நகராட்சி,பஞ்சாயத்து மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் என வக்ஃப் சொத்துக்களில் இயங்குகின்றன.
தமிழகத்தில் திருச்சி மாவட்டம் திருச்செந்துறையில் வக்ஃப் சொத்து குறித்து எழுந்த பிரச்சனை. இவற்றைத் தினமலர் பத்திரிக்கையும்,பாஜகவினர் ஊதி பெரியதாக்கினர். சப்தமில்லாமல் திமுக அரசின் அழுத்திற்குத் தமிழக வஃக்ப் வாரியத்தின் அதிகாரங்களும் பணிந்தன. வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்களின் ராஜினாமாவின் காரணமும் தமிழக முஸ்லீம்கள் முழுமையாக அறியவில்லை.
ஒன்றிய அரசு கொண்டுவரும் வக்ஃப் திருத்த மசோதா தற்போது காங்கிரஸ்,திமுக கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் உள்ள நிலையில் முற்றிலுமாக இந்தச் சட்டத்தை தடுக்கக்கூடும் என்று முஸ்லீம்கள் முழுமையான நம்பிக்கையில் இருந்துவிட முடியாது. கடந்த காலங்களில் பாபர் மசூதியை இடிப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பயனற்ற படிப்பினையும் முஸ்லீம்களுக்கு உண்டு.
வக்ஃப் வாரியத்தின் மூலம் உலமாக்களுக்கு இரு சக்கர வாகன மானியம் எனப் பயன்களைப் பெற்றாலும், தமிழக முஸ்லீம்களின் கைவசமுள்ள வக்ஃப் சொத்துக்களின் மூலம் கல்விக்காகவும் மற்றும் சமூக முன்னேற்றத்துக்கும் இனியாவது இவற்றை வெளிப்படை தன்மையாகப் பயன்படுத்த நிர்வகிக்கும் முஸ்லிம்கள் முன் வரவேண்டும்.
இவற்றை ஒருங்கிணைப்பு செய்தால் முஸ்லிம் சமுதாயப் கல்வியாளர்கள், பேராசிரியர்களைக் கொண்ட மருத்துவம்,பொறியியல்,கல்விக்கான பல்கலைக்கழகத்தையே உருவாக்கிக் கொள்ளலாம். இல்லையெனில் பாபர் மசூதி இடத்தை அபகரித்த பாஜக கும்பல், அடுத்த இலக்காக வக்ஃப் திருத்த சட்டத்தின் மூலம் இந்தச் சொத்துகளிலும் ஊடுருவி இதன் கதையையும் முடித்துவிடும்.