நான் மனமகிழ்ந்து, இரசித்து, மனமார இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்த பெண் இவள்தான். மணக்கோலம் பூண்ட இந்த மணப்பெண், என்னை மிகவும் சிந்தனைக்குள்
ஆழ்த்தியவள். எளிமையான தோற்றம். நகை அணிந்திருந்தாள்; ஆனால், நகை வெளிப்படவில்லை; தலைவாரிப்
பூச்சூடி இருந்தாள். ஆனால் பூ வெளிப்படவில்லை. காரணம் தலையை மறைத்து ஹிஜாப் அணிந்திருந்தாள்.
மார்க்கம் தெரிந்திருக்கிறாள் என்று புரிந்துகொண்டேன். மணக்கோலத்தில் மார்க்கத்தைப்
பேணியிருக்கிறாள்.
மணக்கோலத்தில் பிறர் கண்ணுக்கு ஜொலிக்க வேண்டும் என்று ஒரு மாதம் முன்பே அழகு நிலையத்திற்குச்
சென்று, கூந்தல் அலங்காரம், முக அலங்காரம் செய்து கொண்டு, திருமண நாளன்று அலங்காரம் செய்யக்கூடிய
பெண்ணைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அலங்காரம் கலையாமல் இருக்க டச் அப் என்ற பெயரில்
அலங்காரம் செய்கின்ற பெண்களுக்கு மத்தியில், எந்த மேக் அப்பும் இல்லாமல்
அளவோடு தன்னை அழகுபடுத்திக் கொண்டு, ஹிஜாபைப் பேணி இருக்கிறாள்.
திருமணம் முடிந்த கையோடு மணமகன் தோழர்கள் கேக் வெட்டிக் கொண்டாடுகின்ற தருணத்தில், மணமகனின் தோழர்கள் வந்தபோது மணவறையில் இருந்து இறங்கி, ஒதுங்கி நின்றாள். மஹர் எனும் மணக்கொடை தராமல் மணமகனுக்கு மணமகள் சொந்தமில்லை என்று இஸ்லாத்தின் வரையறையை ஏற்றுக்கொண்டு மணமகனுடன் பேச்சைத் தொடங்காமல் கட்டுப்பாட்டோடு இருக்க அந்தப் பெண்ணுக்கு யார் கற்றுக் கொடுத்தார்? இத்தனைக்கும் மணமகன் வேறு யாருமில்லை, மணமகளுக்குச் சொந்த ‘அத்தை பையன்’ என்று கேள்விப்பட்டு மெய் சிலிர்த்துப் போனேன். அச்சகோதரியின் செயல் பார்த்து. வயதான பாட்டியம்மா கைகொடுக்க வந்தபோது அந்தப் பாட்டியம்மாவிடம், குனிந்து மரியாதையோடு பேசிய விதம்கண்டு அவள் மரியாதையான பெண் என்பதைத் தெரிந்து கொண்டேன். மணமகனும் மணமகளுக்குச் சளைத்தவன் அல்லன், அவ்வளவு பணிவு!
இவற்றையெல்லாம் இஸ்லாத்தைத் தெரிந்தவர்கள் அல்ல, இஸ்லாம் கூறக்கூடிய சட்டங்களை இரசித்து அனுபவித்தவர்களால் மட்டுமே செயல்படுத்த முடியும். இதைத்தான் ஈமானின் சுவையைச் சுவைத்தவர் என்பார்களோ?
மணப்பெண்ணே அடக்கமாக இருப்பது உனக்குப் பிடிக்குமோ? உன்னுடைய அடக்கத்தில் தெரிந்து கொண்டேன். உனக்கு விருந்து பிடிக்குமோ, விருந்து உபசரிப்பு பிடிக்குமோ, விருந்தாளியை நீ கண்ணியப்படுத்தியதில் தெரிந்து கொண்டேன். உன்னுடைய குணங்களை நான் பார்த்துத் தெரிந்து கொள்ளவில்லை. கேள்விப்பட்டுத் தெரிந்துகொண்டேன். உன்னுள் பக்குவங்கள் ஒளிந்து கிடக்கின்றன. அதை, உன் தந்தையிடம் கற்றுக் கொண்டாயா? தாயிடம் கற்றுக் கொண்டாயா? கட்டாயம் உன் தந்தைக்கு நீ ஒரு தாயாக இருந்திருப்பாய் போலும். உன் தந்தை உன்னைப் பிரியும் தருணத்தில் எதையெல்லாம் நினைத்துக் கண்ணீர் வடித்தாரோ தெரியவில்லை. அறிமுகமில்லாத உன்னை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன் நான்.
என் கண் உனக்குப் பட்டுவிடுமோ என்று கவலை கொள்ளாதே! நான் உனக்காக இறைவனிடத்தில்
பிரார்த்தனை செய்து விட்டேன். இஸ்லாம் எனும் கோட்பாட்டில் இல்லற வாழ்க்கையை வாழ்ந்து,
பிள்ளைகள் பல பெற்று மார்க்கச் சட்டங்களை நிலை நிறுத்தி குடும்ப உறுப்பினர்களோடு
குதூகலத்தோடு வாழப் பிரார்த்தனை செய்கிறேன்.