சிரிக்கத் தெரிந்த உயிரினம் என்று மனிதனுக்கு வரைவிலக்கணம் கூறுவார்கள். ஒவ்வொரு
மனிதனுக்குள்ளும் நகைச்சுவையுணர்வு உறைந்துள்ளது. அதை வெளிப்படுத்தத் தெரியாமல் மனிதர்கள் தவிக்கின்றார்கள். நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்த
முதலில் இளகிய மனம் இருக்க வேண்டும். தம் மனதை
இளகிய நிலையில் வைத்திருப்பவரால் மட்டுமே அவ்வப்போது நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்த
முடியும். மனம் விட்டுச் சிரிக்க முடியும். “அல்லாஹ்வின் அருளால் நீர் அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டீர்” (3: 159) என்று அல்லாஹ் தன் இறுதித்தூதர் குறித்துக் கூறுகின்றான். அல்லாஹ்வின் அருளால்தான்
அவனுடைய இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிடம் மென்மையாகவும்
நகைச்சுவையுணர்வோடும் நடந்துகொண்டார்கள். அத்தகைய நற்பண்பின்மூலமே நபியவர்களால் மக்களைக்
கவர முடிந்தது.
அல்லாஹ்வின் அருளால் இளகிய மனம்கொண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
குறித்து, “அல்லாஹ்வின் தூதரைவிட மிக அதிகமாகப் புன்னகை செய்வோரை நான் கண்டதில்லை” என்று அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள். (திர்மிதீ: 3641)
கண்ணியமானோரின் சிரிப்பு
புன்னகையாகவே இருக்கும். சத்தமிட்டுச் சிரிக்க மாட்டார்கள். நம் சிரிப்பு அடுத்தவர்களுக்கு
எரிச்சலை உண்டாக்கிவிடக்கூடாது; பொறாமையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். “நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவிற்குச் சிரிப்பவர்களாகக் கண்டதில்லை;
அவர்கள் புன்னகைப்பவர்களாகவே
இருந்தார்கள்” (புகாரீ: 4828) என்று நபியவர்களுடைய துணைவியாரான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
நபியவர்கள் குறித்துக் கூறுவது அதற்குச் சான்றாக உள்ளது.
நகைச்சுவையாகப் பேசுவதற்கு ஆழ்ந்த சிந்தனைத்திறன் வேண்டும். சிலர் மேலோட்டமாக,
சாதாரணமாகப் பேசுவதே
நகைச்சுவையாக இருக்கும். ஆனால் அதில் எந்த நற்கருத்தும் இருக்காது. சிலரின் பேச்சு ஆழ்ந்து சிந்தித்தால் சிரிப்பு வரும்.
சிலர் சிலேடையாகப் பேசுவார்கள். வேறு சிலர் இரட்டைப் பொருளில் பேசுவார்கள். அதை விளக்கிச்
சொல்லும்போது சிரிப்பு வரும். அந்த வகையில்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிந்தனைத்திறன்மிக்க பேச்சு,
விளக்கிச் சொல்லும்போது
சிரிப்பு வரும் வகையில் அமைந்திருந்தது. அதற்கான சான்றுகள் நிறைய உள்ளன.
ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் சபையில் (ஆண்களும் பெண்களும் அமர்ந்திருந்த நிலையில்) “கிழவிகள் சொர்க்கத்தில் நுழைய முடியாது” என்று கூறினார்கள். அதைக் கேட்ட மூதாட்டி ஒருவர் (வருத்தப்பட்டு) அழத் தொடங்கினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அன்றைய நாளில் அவர் கிழவியாக இருக்கமாட்டார்; அவர் இளம்பெண்ணாக இருப்பார் என்று கூறிவிடுங்கள். ‘நிச்சயமாக அவர்களை நாம் புதியதொரு படைப்பாகப் படைப்போம்; நாம் அவர்களைக் கன்னிப் பெண்களாக ஆக்குவோம்’ (56: 35-36) என்று அல்லாஹ் கூறுகின்றான்” என்றார்கள். (பைஹகீ: 346)
சொர்க்கத்தில் நுழையும் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் இளமைத் தோற்றத்தில்தான் இருப்பார்கள். அதனடிப்படையில் கிழவியாக அல்லது கிழவனாக இறந்துபோன
ஒருவர் கிழவியாகவோ கிழவனாகவோ உள்ள நிலையில் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். மாறாக
இளமைப்பருவம் மீண்டும் வழங்கப்பட்டோராகவே சொர்க்கத்தில் நுழைவார்கள். அந்த இளமையோடுதான்
அவர்கள் என்றென்றும் அதில் தங்கியிருப்பார்கள். அங்கு அவர்களுக்கு ஒருபோதும் மூப்பு
வராது.
மேற்கண்ட அதே விதத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நகைச்சுவையான பேச்சுக்கு மற்றொரு சான்றைப் பார்க்கலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் பயணம் செய்ய ஓர் ஒட்டகத்தை எனக்குத் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நான் உமக்கு ஓர் ஒட்டகக் குட்டியைத்தான் தருவேன்” என்று கூற, “நான் அந்த ஒட்டகக் குட்டியை வைத்துக்கொண்டு என்ன செய்வேன் (எவ்வாறு பயணம் செய்வேன்)?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “ஒவ்வோர் ஒட்டகமும் அதனுடைய தாய்க்குக் குட்டிதானே? என்று (நகைச்சுவையாகக்) கூறினார்கள். (அபூதாவூத்: 4998)
இவ்வாறு நகைச்சுவையான பேச்சை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் தோழர்களும் பேசியிருக்கின்றார்கள். அதற்கான சான்றாகப் பின்வரும் நிகழ்வு உள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஸுஹைப் ரளியல்லாஹு அன்ஹு வந்தார். அப்போது நபியவர்களுக்குமுன் பேரீச்சம் பழங்களும் ரொட்டியும் இருந்தன. “நெருங்கி வந்து சாப்பிடுவீர்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற, அவர் நெருங்கி வந்து சாப்பிடத் தொடங்கினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரைப் பார்த்து, உமக்குக் கண்வலி இருக்கிறது (பார்த்துச் சாப்பிடுவீர்) என்று கூறினார்கள். அதற்கு அவர், (கண்வலி இல்லாத) மற்றொரு பகுதியில்தான் நான் சாப்பிடுகிறேன்” என்று (விகடமாகப்) பதிலளித்தார். அதைக் கேட்ட நபியவர்கள், புன்னகை செய்தார்கள். (முஸ்னது அஹ்மத்: 16591)
பொதுவாக ஒவ்வொருவருக்கும் வலப்பக்கத் தாடை இடப்பக்கத் தாடை என இரண்டு தாடைகள்
உள்ளன. அதுபோலவே வலக்கண், இடக்கண் என இரண்டு கண்கள் உள்ளன.
ஆகவே கண்வலி இல்லாத தாடைப் பகுதியிலுள்ள பற்களால் மென்று உண்கிறேன் என்று அவர் சாதுர்யமாக, விகடமாகப் பேசி நபியவர்களைச் சிரிக்க வைத்தார்.
இப்படியான பல்வேறு தருணங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நகைச்சுவையாகப் பேசியிருப்பதோடு
தம் தோழர்களையும் அவ்வாறு பேச அனுமதித்திருக்கின்றார்கள். அத்தோடு தம் தோழர்களோடும்
குடும்பத்தாரோடும் நகைச்சுவையுணர்வோடு பேசியும் பழகியும் இருக்கின்றார்கள். ஒரு தடவை நபித்தோழர் ஒருவரோடு நபியவர்கள் நடந்துகொண்ட
நகைச்சுவையான நிகழ்வைப் பார்க்கலாம்.
கிராமத்து அரபியரும் விவசாயியுமான ஸாஹிர் பின் ஹராம் என்பவர் தம் கிராமத்திலிருந்து வரும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அங்கு விளைகின்ற காய்கறிகளைக் கொண்டுவந்து கொடுப்பார். அவர் திரும்பிச் செல்லும்போது நபியவர்களும் அதற்குப் பகரமாகத் தம்மால் இயன்றதைக் கொடுத்தனுப்புவார்கள். அவர் அழகற்றவராக இருந்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை நேசிப்பவர்களாக இருந்தார்கள். ஒருமுறை அவர் வழக்கம்போல் கடைவீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் அவருக்குப் பின்புறமாக வந்து அவரை நபியவர்கள் கட்டிப் பிடித்தார்கள். அவர், “யாரது? என்னை விடுங்கள்” என்று கூறியவராகத் திரும்பிப் பார்த்தபோது அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தாம் என்பதை அறிந்த அவர் தமது முதுகுடன் நபியவர்களின் நெஞ்சை அப்படியே நெருக்கமாக வைத்துக்கொண்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நகைச்சுவையாக, “இந்த அடிமையை யாரேனும் விலைக்கு வாங்குகிறீர்களா?” என்று கேட்க, அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே என்னை விற்றால் விலை மதிப்பற்ற செல்லாக் காசையே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்” என்று அவரும் (விளையாட்டாகக்) கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “அல்லாஹ்விடம் நீர் விலை மதிப்புள்ளவர்தாம்” என்று கூறினார்கள். (ஷரஹுஸ்ஸுன்னா: 3604)
மிகச் சாதாரண மனிதர்களையும் மதித்து அவர்களோடு அளவளாவி விகடமாகப் பேசி,
தாம் அனைவருக்கும் சொந்தம்
என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நிரூபித்துக் காட்டியுள்ளார்கள். அனைத்து வகையான
மனிதர்களையும் நேசித்திருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தத்தம் உள்ளத்திலுள்ள இறையச்சத்தின்
மூலமே அல்லாஹ்விடம் மதிப்பளிக்கப்படுகின்றார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்து,
அதன்மூலம் சமுதாயத்திற்கு
நல்லதொரு பாடத்தையும் கற்பித்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர்களுடன் விகடமாகப் பேசுவதைக் கண்ட தோழர்கள், இறைத்தூதராக இருந்துகொண்டு இந்த அளவிற்கு விகடமாக, நகைச்சுவையாகப் பேசுகின்றீர்களே என்று கேட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “நான் (விகடமாகப் பேசினாலும்) உண்மையைத் தவிர (வேறெதையும்) பேசமாட்டேன்” என்றார்கள். (திர்மிதீ: 1990)
நம்முள் சிலர் பிறரைச் சிரிக்க வைப்பதற்காக என்னென்னவெல்லாமோ செய்கின்றார்கள். பொய்யான கதைகளைப் பேசிச் சிரிக்க வைக்கின்றார்கள். கற்பனைக் கதைகளைச் சொல்லிச் சிரிக்க வைக்கின்றார்கள். கேலியாகப் பேசிச் சிரிக்க வைக்கின்றார்கள். திரைப்பட நடிகர்களைப் போலப் பேசி (மிமிக்ரி) இரசிக்கவும் சிரிக்கவும் வைக்கின்றார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நபியவர்கள் தம் நகைச்சுவையான பேச்சால் மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கின்றார்கள். அதில் உண்மை மட்டுமே இருந்தது.
சிலர் யாரேனும் ஒருவரின் ஏதேனும் பொருளை ஒளித்து வைத்துவிட்டு, அவரைத் தேடவிடுவார்கள். அவர் தமது பொருள் காணாமல் போய்விட்டதே என்று பதற்றப்படுவார்;
கவலைப்படுவார். அவர்
தேடுவதைப் பார்த்து, ஒளித்து வைத்தவர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அவ்வாறு ஒருவரைப் பதற்றமடையச்
செய்யக்கூடாது என்று நபியவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
நபித்தோழர்கள் ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் பயணம் சென்றார்கள். பயணத்தின் இடையே (ஓரிடத்தில் ஓய்வெடுக்கும்போது) அவர்களுள் ஒருவர் தூங்கிவிட்டார். அச்சமயம் அவர் வைத்திருந்த கயிற்றை எடுத்து அவருக்குத் தெரியாமல் மறைத்து வைத்துக்கொண்டனர். அவர் விழித்தவுடன் (தம் கயிறு காணாமல் போனது குறித்து) அவருக்கு ஒருவிதமான திடுக்கம் ஏற்பட்டது. அதைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “ ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைப் பதற்றமடையச் செய்வது ஆகாது” என்று கூறினார்கள். (அபூதாவூத்: 5004)
சிமாக் பின் ஹர்ப் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது: நான் ஜாபிர் பின் சமுரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹு தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (அதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள். (முஸ்லிம்: 286/ 1188)
பள்ளிவாசலில் அதிகாலை வேளையில் கூட்டுத் தொழுகை முடித்த கையோடு அதே இடத்தில்
அமர்ந்தவாறு தம் தோழர்களோடு கலந்துரையாடுவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கம். சிலர் தாம் கண்ட கனவைக் கூறி,
அதற்கான விளக்கம் கேட்பார்கள்.
சிலர் தாம் சார்ந்த ஏதேனும் சிக்கலைக் கூறி,
அதற்கான தீர்வைக் கேட்பார்கள்.
எதுவும் இல்லையெனில், தம் தோழர்கள் பேசிக்கொண்டிருக்க, அதைக் கேட்டு இரசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் அறியாமைக்
காலத்தில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அவற்றையெல்லாம்
கேட்டு நபியவர்கள் புன்னகை தவழச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். ஓர் இறைத்தூதர் தம்
தோழர்களோடும் சக மனிதர்களோடும் இன்முகத்தோடு பேசிப் பழகியிருக்கின்றார்கள் என்பதை
மேற்கண்ட நிகழ்வு மூலம் நாம் அறியலாம்.
மக்களோடு பேசிச் சிரித்தால் கண்ணியம் போய்விடும் என்ற எண்ணத்தில் சிலர் சிரிக்காமலேயே இருப்பார்கள். அத்தகையோருக்குப் பின்வரும் இந்தச் செய்தி மிகுந்த பயனுள்ளதாக அமையும். “உன் சகோதரனிடம் நீ புன்னகை செய்வது உனக்குத் தர்மம் ஆகும்...” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (திர்மிதீ: 1956)
எனவே நபியவர்கள் எவ்வாறு சிரித்து மகிழ்ந்து வாழ்ந்தார்களோ அவ்வாறே நாமும் பிறரைச் சிரிக்க வைத்து, மனமகிழ்ச்சியோடு இவ்வுலகில் வாழ்ந்து இறைவனின் திருப்தியைப் பெற்று ஈருலகிலும் வெற்றிபெறுவோம்.
=============