சிறுகதை
சிறுவன் ஒருவன் ஒரு நாள் இரவு ஓர் அடர்ந்த காட்டில் சிக்கிக் கொண்டான். நல்ல இருட்டு. கண்ணுக்கு ஒன்றுமே தெரியவில்லை.
சிறுவனுக்குப் பயமாக இருந்தது. மயான அமைதி. வழி தெரியவில்லை தட்டு தடுமாறி நடந்து. கொண்டிருந்தான் .
அப்போது காலில் ஒரு பை தட்டுப் பட்டது .
குனிந்து அந்தப் பையைத் தடவிப் பார்த்தான் அச்சிறுவன். அப்பை முழுவதும் கற்கள்.
அந்த இரவு வேளையில் நடுக்காட்டில் தனிமைப் பயத்தில் என்ன செய்வதென்று அறியாத அச்சிறுவன் அப்படியே அமர்ந்தான். அப்பையில் இருந்த கற்களுள் ஒன்றை எடுத்து அருகில் உள்ள ஆற்றில் எறிந்தான் . அமைதியான அந்த வேளையில் கல் 'ப்ளக்’ என்ற சத்தத்துடன் ஆற்றில் விழுந்தது.
இவனுக்கு அந்தச் சத்தத்தைக் கேட்டதும் ஆறுதலாக இருந்தது. அடுத்த கல்லை எடுத்து எறிந்தான்.
இப்படியே விடியும் வரை பையில் இருந்த கற்களை எடுத்து எறிந்து கொண்டே இருந்தான்
அச்சிறுவன்.
. 'ப்ளக் 'ப்ளக் என்று சத்தம் வந்துகொண்டே இருந்தது .
சூரியன் மெல்ல உதயமானது. அப்போதும் கல் எறிந்து கொண்டிருந்த அச்சிறுவன், ஒரு கல்லை எறிந்தபோது அது சூரிய ஒளியில் பட்டு மின்னியது. அப்போதுதான் அப்பையில் இருந்த அக்கற்களைக் கவனித்தான் அச்சிறுவன். அவை .அத்தனையும் மாணிக்கக் கற்கள்.
ஆனால் பெரும்பாலான கற்கள் காலியாகியிருந்தன. அவன் இரவு முழுவதும் எறிந்த கற்கள் அனைத்தும் மாணிக்கக் கற்கள் என்பதை உணர்ந்த அச்சிறுவன் மிகுந்த கவலையடைந்தான்.
இந்தக் கதையில் வரும் காடுதான் நமது உலகம். இரவு வேளை என்பது நமது வாழ்க்கை. இருட்டு என்பது நமது கவனமின்மை, அறியாமை. மாணிக்கக் கற்கள் என்பதுதான் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள விலை மதிக்க முடியாத நேரம்.
நேரம் என்ற மாணிக்கக் கல்லை வெறும் கல் என்று எண்ணிக் கொண்டு அறியாமை என்னும் இருளில் மூழ்கி என்ன செய்வதென்று தெரியாமல் நம் வாழ்க்கை முழுவதையும் வீணாக்கித் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆக காலம் என்பது பொன் போன்றதன்று.
காலம் உயிர் போன்றது.
காலத்தின்மீது சத்தியமாக நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். அல்குர்ஆன் (103: 1-2)