திருவாரூர் நவ 12
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகத் திருவாரூரில் மத்திய அரசின் வக்ப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மாவட்டத் தலைவர் பீர்முகம்மது அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலச் செயலாளர் செங்கோட்டை பைசல் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்,
வக்ப் வாரிய திருத்தச்சட்டம் எனும் பெயரில் இஸ்லாமியர்களுக்குத் தர்மமாக வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது,
வக்ப் வாரியத்திற்கான அதிகாரங்களை முற்றிலும் அபகரித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்குவதென்பது சங்க பரிவாரங்களின் முஸ்லிம் வெறுப்பு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தியும்,இஸ்லாமியர்களின் நலனுக்காக முன்னோர்கள் வழங்கிய லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசிச பாஜக அரசின் கண்களை உறுத்துகின்றன, அவற்றை அபகரித்து அதானி, அம்பானி ,உள்ளிட்டவர்களுக்கு வழங்குவதற்கும் ஊழல் செய்வதற்கும் பாஜக அரசு சதி செய்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும் கூறியதாவது வக்ப் வாரிய உறுப்பினராக இரண்டு முஸ்லிம் அல்லாதவரை நியமிக்கக் கூடிய நடைமுறையை பாஜக ஆளும் மாநிலங்களில் வக்ப்வாரியத்தை பலவீனப்படுத்தி நிலங்களை அபகரிக்கப் பயன்படுத்தப்படும் என்றார்.
இதே நடைமுறை கோயில் மற்றும் தேவாலயம் நிர்வாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுமா? என்றும் கேள்வி எழுப்பினார். இந்த மசோதாவானது வக்ப்வாரியத்தின் வருமானத்தைக் குறைத்து அதை மேலும் பலவீனப்படுத்தும் ,ஆக்கிரமிப்பாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதற்கான வழிவகைகளைச் செய்யும் நடைமுறை என்றும், சர்ச்சைக்குரிய நிலங்களுக்கு தீர்வுகாணும் அதிகாரம் ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் வக்ப்வாரிய தீர்ப்பாயத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாகும்.
இத்தனை குளறுபடிகளோடு வந்துள்ள இந்தச் சட்டத்திருத்த மசோதாவை ஆளும் ஒன்றிய அரசு கட்டாயம் திரும்பப்பெற வேண்டும், அதுவரை முஸ்லிம்களின் போராட்டங்கள் கடும் வீரியத்துடன் தொடரும் என்று இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் இஸ்மத் பாட்ஷா, துணைத் தலைவர் முகமது பாசித், துணைச் செயலாளர்கள் மாலிக், தாரிக் சக்கரைகனி, அனஸ் நபில் ,ரிபாக் உள்ளிட்ட நிர்வாகிகள், மற்றும் ஏராளமான ஆண்கள்,பெண்கள் கலந்துகொண்டனர். இறுதியாகத் துணைச் செயலாளர் தாரிக் நன்றி தெரிவித்தார்.