இன்று (13.11.2024) கேரள மாநிலத்திலுள்ள வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஏன் இந்த இடைத்தேர்தல்?
அந்தத் தொகுதி எம்.பி.
இறந்துவிட்டாரா? அல்லது தகுதிநீக்கம் செய்யப்பட்டுவிட்டாரா? இல்லை. மாறாக ஒரே ஆள் இரண்டு தொகுதிகளில் வேட்பாளராகப்
போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றிபெற்றபின் ஒரு தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, மற்றொன்றை ராஜினாமா செய்துவிட்டார்.
இவ்வாறு செய்தவர் யார்? தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ள இராகுல் காந்திதான். அவர் உ.பி. மாநிலத்திலுள்ள ரேபரேலி தொகுதியிலும்
கேரள மாநிலத்திலுள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றிபெற்றபின்,
வயநாடு தொகுதியின் வெற்றியை
ராஜினாமா செய்துவிட்டார். அந்தத் தொகுதிக்குத்தான் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அந்தத் தொகுதியில் தற்போது அவருடைய சகோதரி பிரியங்கா போட்டியிடுகிறார்.
இதனால் நாட்டுக்கு என்ன நட்டம்? ஒருவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றுவிட்டால்,
அதற்கு இடைத்தேர்தல்
நடத்த வேண்டும். அதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? ஒரு வாக்காளருக்கு மத்திய அரசின்
தேர்தல் ஆணையம் 72 ரூபாய் செலவு செய்கிறது. (2019ஆம் ஆண்டுக் கணக்கின்படி) வயநாடு தொகுதியில் வாக்காளர்கள் மட்டும் ஏறத்தாழ 14 இலட்சம் பேர் உள்ளனர். அதன்
அடிப்படையில் (14.00.000 x 72) பத்துக் கோடிக்கு மேல் செலவாகிறது.
ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் ஒரு தொகுதியில்தான் போட்டியிட முடியும் என்று தேர்தல் ஆணையம் சட்டமியற்ற வேண்டும். அத்தகைய துணிவு தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறதா?
1951-இல் அமலுக்கு வந்த மக்கள் பிரதிநிதித்துவச்
சட்டத்தின்படி, ஒரு வேட்பாளர் அதிகபட்சம் மூன்று தொகுதிகளில் போட்டியிடலாம். பின்னர், 1996-இல் அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில்
மட்டுமே போட்டியிட முடியும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டமே
இவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடக் காரணமாக உள்ளது.
1957இல் மக்களவைக்கு நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில், அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட
அடல் பிகாரி வாஜ்பாய் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர், மதுரா, லக்னௌ ஆகிய மூன்று தொகுதிகளில்
போட்டியிட்டு, பல்ராம்பூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். 1991 தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம்
லக்னௌ, மத்தியப் பிரதேசத்தின் விதிஷா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும்
வெற்றி பெற்றார்.
1999ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும்
கர்நாடக மாநிலம் பெல்லாரி என இரண்டு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு,
இரண்டிலும் வென்றார்.
நரேந்திர மோடி 2014ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசம் வாரணாசி, குஜராத் மாநிலம் வதோதரா ஆகிய
இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வென்றார்.
இவ்வாறு கட்சி வேறுபாடின்றிப் பலரும் இரட்டைத் தொகுதிகளில் போட்டியிட்டு,
இரண்டிலும் வென்றபின்
ஒன்றை ராஜினாமா செய்வது வாடிக்கையாகவே உள்ளது. இதனால் அரசுக்குப் பல மடங்கு செலவாகிறது.
ஆகவே இதற்கு முடிவு கட்டும் வகையில், ‘ஒருவருக்கு ஒரு தொகுதி’ என்று தேர்தல் ஆணையம் புதிய சட்டம்
கொண்டுவருமா என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.