2024 நவ 17
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பெரும் நிறுவனங்களுக்கு வாராக்கடன்கள் வரை தள்ளுபடி செய்தல்,வரிச் சலுகைகளை வாரி வழங்கி அவர்களை வாழவைப்பதும், சிறு வணிகர்களை அழிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
விலைவாசி, மின்கட்டணம் உயர்வு என அதிகப்படியான செலவினங்கள் உள்ள நெருக்கடியான காலத்தில் சிறு வணிகர்களுக்குச் சொந்தமான இடம் இல்லாத சூழ்நிலையில் முக்கிய வீதிகளில் உள்ள வாடகை இடத்தில் கடை நடத்தியும், இதன் மூலம் அரசிடம் துளியும் எந்த விதமான உதவிகள் எதிர்பார்ப்புகளுமின்றி குறைந்த முதலீட்டில் தங்கள் குடும்பத்துக்கான வாழ்வாதாரப் பொருளாதாரத்தை சொற்பமாக்கப் பெற்றுச் சமாளித்து வருகின்றனர்.
இதையும் மோப்பம் பிடித்த ஒன்றிய அரசு வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்களையும் விட்டுவைக்காமல் கொடுக்கப்படும் கடை வாடகை தொகையில் 18 சதவீதம் GST வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் எனக் கடந்த செப்டம்பர் 23-ல் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிகவும் கொடூரமானதும். சிறு வணிகர்களை நசுக்கும் மகாபாதகச் செயலாகும். சொந்த இடமின்றி வாடகை இடத்தில் தொழில் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது அவர்களின் முன்னேற்றத்தில் துளியும் அக்கரையின்றி நலிவடையச் செய்திடும் கொடூரத் தாக்குதலாகும்.
ஏற்கெனவே அமேசான், பிளிப்கார்ட் இன்னும் பிற ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் கடுமையாகப் பொருளாதார நெருக்கடியில் போட்டிபோட முடியாமல் சிக்கித் தவிக்கும் சிறு வணிகர்களை மேலும் மோசமான நிலைக்கு கொண்டு செல்கின்ற வேளையை ஒன்றிய அரசு செய்துவருகிறது.
விவசாயிகள், சிறுவணிகர்கள்,சிறு தொழில் முனைவோர் இந்த நாட்டின் முதுகெலும்பானவர்கள்.இவர்களுக்கு ஒன்றிய பாஜக அரசு சாதகமான நிலைகளை விட இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு வணிகர்களுக்கு கூடுதல் செலவினங்களை ஏற்படுத்தி மோசமான நிலைக்கு தள்ளுகிறது.
வீடு,கடைகளுக்கு இடத்தின் உரிமையாளர்கள் வாடகை தொகைகளை அதிகரித்து வரும் இந்தக் காலச் சூழ்நிலையில் இதற்கே சாமானிய சிறு வணிகர்கள் கொடுப்பதற்கு தள்ளாடி வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரியை 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு, சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் GST வரி விதித்துள்ளது.வெந்தபுண்ணில் வேல் பாச்சும் செயலாகும்.
கடை வாடகைக்கு 18% GST முடிவை வன்மையாகக் கண்டிப்பதோடு, ஒன்றிய மத்திய மோடி அரசு உடனடியாக இவற்றைத் திரும்பப் பெறக் நாடு முழுவதும் உள்ள சிறுவணிகர்கள் கோரிக்கையாக எழுப்பிவருகின்றனர்.