சுற்றுச்சூழல்
இந்தியாவில் முதன்முறையாக தேவாங்குகளுக்கு ஒரு சரணாலயம்
தமிழக அரசு நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, அரியவகை உயிரினமான தேவாங்குகளுக்கு திண்டுக்கல் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு சரணாலயம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
தேவாங்கு
Slender Loris என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த உயிரினம், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளில் மட்டும் காணப்படும் உயிரினமாகும். உலகில் வேறெங்கும் காணப்படாமல், குறிப்பிட்ட பகுதியில் மட்டும் காணப்படும் உயிரினத்துக்கு endemic - அங்கு மட்டுமே காணப்படும் உயிரினம் என அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் காணப்படும் தேவாங்கு சிவப்பு நிறத்தில் உள்ளதால், Red Slender Loris எனவும், இலங்கையில் காணப்படும் தேவாங்கு வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் உள்ளதால் Gray Slender Loris எனவும் அழைக்கப்படுகிறது. இது மிக அமைதியான உயிரினம். மரங்களின் மிக உயரமான கிளைகளில் மட்டுமே வசிக்கும். நூறாண்டுகளுக்கு முன் தமிழகம் முழுவதும் காணப்பட்ட இவ்வுயிரினம் தற்போது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, கரூர் மாவட்டம் கடவூர் ஆகிய இரு வட்டங்களில் மட்டும் என்ற அளவில் அதன் வாழிடம் - habitat சுருங்கிவிட்டது.
இப்போது அமைய உள்ள தேவாங்கு சரணாலயமானது திண்டுக்கல் மாவட்டத்தில் பண்ணமலை, தண்ணீர்கரடு, தொப்பசாமிமலை, முடிமலை ஆகிய காப்புக்காடுகளையும், கரூர் மாவட்டத்தில் எடையபட்டி, முள்ளிப்பாடி, பாலவிடுதி, செம்பியநத்தம் ஆகிய காப்புக்காடுகளை உள்ளடக்கியது.
இதன் வாழிடத்தை ஆராய்ந்து - சர்வே செய்து, கண்டுபிடித்து வெளியுலகுக்குச் சொன்ன பெருமை கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON - Salim Ali Centre for Ornithology and Natural History) என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களைச் சாரும்.
தமிழக அரசு சமீப காலமாக பல சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
1. விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் தாலுகா கழுவெளி கிராமத்தில் உள்ள சதுப்புநிலத்தை தமிழகத்தின் புதிய பறவைகள் சரணாலயமாக அறிவித்தது.
2. திருப்பூர் மாவட்டம் திருப்பூர் நகர எல்லையில் கூலிப்பாளையம் சுற்றுச்சாலை - ரிங்ரோடு அருகே நஞ்சராயன் குளம் என்ற நீர்நிலையை புதிய பறவைகள் சரணாலயமாக அறிவித்தது.
3. தமிழ்நாட்டில் பத்தாக இருந்த ரம்ஸார் வாழிட எண்ணிக்கையை பதினான்காக உயர்த்தியது. புதிதாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் வடுவூர் பறவைகள் சரணாலயம், கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் சித்திரங்குடி, காஞ்சிரங்குளம் ஆகிய இரு பறவைகள் சரணாலயங்கள் என மொத்தம் நான்கு பறவைகள் சரணாலயங்களை ரம்ஸார் வாழிடங்கள் பட்டியலில் இணைத்தது. இதன்மூலம் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான (14 இடங்கள்) ரம்ஸார் வாழிடங்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழகம் மாறியது. (இரான் நாட்டின் ரம்ஸார் என்னுமிடத்தில் ஒருமுறை பன்னாட்டு சுற்றுச்சூழல் மாநாடு நடைபெற்றது. அதில் இன்னின்ன சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட பறவைகள் சரணாலயங்களை, ஈரநிலங்களை, சதுப்புநிலங்களை, நீர்நிலைகளை பன்னாட்டு அளவில் ஒருங்கிணைத்து அவற்றுக்கு ரம்ஸார் வாழிடம் - Ramsar site என அடையாளமிடலாம் என உலகநாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன).
4. நீலக்கொடி - Blue Flag என்ற பன்னாட்டு அங்கீகாரத்தை தமிழகத்தின் சென்னை அருகே கோவளம் கடற்கரைக்குப் பெற்றது. நீலக்கொடி பெற்ற கடற்கரை என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த மீன்பிடி நடவடிக்கைகள், மீன்வளப் பாதுகாப்பு ஆகிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுவது. இந்தியாவில் தற்போது கோவளம் உட்பட மொத்தம் பத்து கடற்கரைகள் மட்டுமே நீலக்கொடி பெற்றுள்ளன.
இந்த அனைத்து முயற்சிகளுக்காக தமிழக அரசைப் பாராட்டலாம்.