பொன்னியின் செல்வன் படம் வெளிவந்த பிறகு குந்தவை குறித்து விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக காண முடிகிறது. குந்தவை இசுலாமிய சமயந்தளுவி நாச்சியார் ஆனார் என்றும் சோழர் காலத்தில் இசுலாமிய மதமா வாய்ப்பில்லை என்றும் பதிவுகள் காண முடிகிரது.ஆனால் வரலாறு கூறும் உண்மை சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலத்தில் இசுலாம் தழைத்தோங்கியதாக சொல்கிறது.
முசுலீம் மன்னர்களின் படை எடுப்புகளுக்குப் பின்னரே இஸ்லாம் தமிழ்நாட்டுக்கு வந்தது என்ற பொதுவான கருத்து உலவுகிறது. காரணம் வட இந்திய வரலாற்றைப் போலத்தான் தென்னிந்திய வரலாறும் என்ற பொதுக் கருத்தின் விளைவு இது.
ஆனால் அரேபிய நாட்டில் நபிகள் நாயகம் தோன்றி இஸ்லாம் வருவதற்கு முன்பே அரேபியாவிற்கும் தென்னிந்தியாவிற்குமான வணிக உறவு இருந்தது. வணிகர்கள் மூலம்தான் இஸ்லாம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்றும் மன்னர்களின் வாளால் அது எடுத்து வரப்படவில்லை.
அமைதியான வழியிலேயே இஸ்லாம் பரவியதை ஜவகர்லால் நேரு தன் டிஸ்கவரி ஆஃப் இந்தியா புத்தகத்தில், ”ஒரு அரசியல் சக்தியாக இஸ்லாம் பாரதத்துக்குள் வருவதற்கு சில நூற்றாண்டுகள் முன்பே, இஸ்லாம் ஒரு மார்க்கமாக தென்னிந்தியாவை அடைந்துவிட்டது" என்கிறார்.
தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு இராசேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
அப்துல் ரகுமான் என்ற அரபியர் பாண்டிய மன்னனின் அரண்மனையில் பெரியதோர் அதிகாரம் வகித்திருந்ததாகவும், காயல் துறைமுகத்தில் சுங்கம் வசூலித்தாகவும், ஞா. துறைசாமிப்பிள்ளை அவர்கள் பாண்டியர் காலம் என்ற சொற்பொழிவுல் குறிப்பிட்டுள்ளார்கள்.
கி.பி 1276-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன்அரபு நாட்டின் கைஸ் மன்னரான மலிகுல் இஸ்லாம் ஜலாலுத்தீன் அவர்களோடு நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.
மன்னர் அதிவீரராம பாண்டியன் மகன் குலசேகரப் பாண்டியன் ஈக்கி அப்பா கலீபாவை திருநெல்வேலிக்குப் படைத் தளபதியாகவும், கலீபாவை நீதிபதியாகவும் நியமித்து,ஏர்வாடி இப்ராஹிமை தம்முடன் மதுரைக்கு அழைத்துச் சென்றான்.
மன்னர் அரபி முஸ்லிம்கள் பால் மிகவும் அன்புடையவராக இருந்தார். வியாபாரத்தில் பல சௌகரியங்கள் செய்து கொடுத்ததுடன் நாட்டின் நிர்வாகத்திலும் பங்களித்தான்.
கி.பி. 1286ஆம் ஆண்டில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். தளபதியாகவும் 'கறுப்பாறு காவலன்' எனும் கடலாதிக்க அதிபராகவும் இருந்து, ஈழ நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்று வந்ததனை ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் தமது 'புராதன தக்காணம்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இவருக்குப்பின் இவரது மகன் ஸிராஜுத்தீனுக்கும், பின் அவரது பேரன் நிஜாமுத்தீனும் பதவியில் இருந்ததை கிருனசாமி அய்யங்கார் தெரிவிக்கிறார்..இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறதுசெய்யிது ஜமாலுத்தீன் அவர்களின் சகோதரர் தகியுத்தீன் பாண்டிய மன்னரின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இஸ்லாம், தமிழகத்தில் முதன் முதலாகப் பரவிய காலத்தில் (கி.பி. 650-750) சமண மதம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்தது; தமிழகத்தில் இஸ்லாம் பரவுவதற்கு எவ்வித முட்டுக்கட்டைகளும் இருக்கவில்லை என்றும் இஸ்லாம் மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிக்காததால் சமணர்களும் பௌத்தர்களும் அந்த மார்க்கம் பரவுவதை எதிர்க்கவில்லை என்றும் கேரளாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர் பேராசிரியர் முனைவர் ஜெயப்பிரகாஷ் குறிப்பிடுகிறார்.
இஸ்லாத்துக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பை வலிமையாகச் சொல்ல கிடைத்த ஆதாரமும் திருச்சியில்தான் உள்ளது. அதுதான் கல்லுப்பள்ளி. அதாவது கல்லால் கட்டப்பட்ட பள்ளிவாசல் என்பது பொருள். இந்தஜ் கல்லுப்பள்ளிதான் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல். இதற்கு சான்றாக கல்வெட்டு ஒன்று அரேபிய லிபியில் அந்த பள்ளிவாசல் முகப்பில் பெருங்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
இதன் காலம் கி.பி 7-ம் நூற்றாண்டாகும். 1300 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் தமிழ்நாட்டுக்கும் குறிப்பாக திருச்சிக்கும் வந்துவிட்டதன் அடையாளமாக இந்தக் கல்வெட்டு பார்க்கப்படுகிறது. இது இன்றும் கோட்டை ரயில் நிலையம் எதிரில் உள்ளது.
சமண புத்த விகாரங்களைப்போல அவற்றின் தாக்கத்தோடு கல்லால், சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. 30 பேர் நின்று தொழுகை நடத்த முடிந்த அளவே உள்ளது. அக்கல்வெட்டின்படி, ஹிஜ்ரி 116-ம் ஆண்டு, அதாவது கி.பி 738-ல் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் மறைந்து 106 ஆண்டுகளில் இது கட்டப்பட்டுள்ளது என்றால் அதற்கு முன்பே இஸ்லாம் திருச்சியில் நிலைத்துவிட்டதை இப்பள்ளிவாசல் சொல்லாமல் சொல்கிறது.