1) இணையதளத்தை நிர்வகித்தல் (MANAGING A WEBSITE):
இணையதளம் என்பது 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தின் முதற்படியாகும்.
இ-காமர்ஸ் (e-commerce) தளமாக இருந்தாலும் அல்லது சிறு வணிக இணையதளமாக இருந்தாலும், அதை தொழில் ரீதியாக அனுகுவதற்கும், புதுப்பிப்பதற்கும், உத்தேசத்தின் படி செயல்படுவதை உறுதி செய்வதற்கும், வணிக இணையதளத்தை நிர்வகிக்கக்கூடிய நிபுணர்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறார்கள்.
பெரிய பிராண்டுகள் முதல் சிறு வணிகங்கள் வரை இணைய மேம்பாட்டில் (Web development) மற்றும் இணையதள மேலாண்மையில் (Website management) நிபுணத்துவம் பெற்ற நபர்களுக்கு அதிக தேவை இருக்கிறது. எனவே பல நிறுவனங்கள் இளைஞர்களின் வலைதள மேலாண்மையை மேம்படுத்த உதவும் கருவிகளையும், திறன்களையும் வழங்குகின்றன.
2) உள்ளடக்க சந்தைப்படுத்துதல் (Content Marketing):
இன்றைய காலகட்டத்தில் உள்ளடக்கத்தை (Content) உருவாக்குவது ஒரு அடிப்படை மற்றும் முக்கியமான திறமையாகும். இந்த திறன், முன்னணி பிராண்டுகளுக்கு தேவைப்படுகிறது. ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை எழுதக்கூடிய இளம் தொழில் வல்லுனர்களை பிராண்டுகள் வலை வீசுகின்றன. இதன்மூலம் அவர்களின் இலக்கு, பார்வையாளர்களை தங்கள் வலைதளங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்களின் பால் ஈர்ப்பது.
நிறுவனத்தின் முக்கிய செய்திகளை, புரிந்து கொள்ளக் கூடிய வகையில் வாசகர்களிடம் தெரிவித்தது, மேலும் அவர்களின் ஆர்வத்தை தூண்டக்கூடிய இளம் தொழில் வல்லுனர்களுக்கு அதிக தேவை உள்ளது.
3) சமூக ஊடக மேலாண்மை (Social Media Management):
சமூக ஊடக (social Media) நிபுணத்துவம் என்பது இளம் தொழில் வல்லுனர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெறுகிறது. இன்று ஒவ்வொரு பிராண்டிற்கும் டிஜிட்டல் இருப்பு (digital presence) என்று ஒன்று உள்ளது. இது அவர்களின் வலைதளத்தையும் தாண்டி சமூக ஊடகங்களின் மூலம் பார்வையாளர்களுடன் தனிப்பட்ட முறையில் இணையும் வாய்ப்பை வழங்குகிறது.
சமூக ஊடகங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்த இளம் தொழில் வல்லுநர்கள் எப்போதும் தேவைப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் பிராண்டுக்கும் நுகர்வோருக்கும் இடையேயான உறவை மேம்படுத்த நிறுவனங்களுக்கு உதவுகிறார்கள். எனவே சமூக ஊடகத்தின் A முதல் Z வரை தெரிந்து கொள்வது, இன்றைய இளைஞர்கள் வளர்க்க வேண்டிய முக்கியமான டிஜிட்டல் திறமையாகும்.
4) தரவு பகுப்பாய்வு (Data Analytics):
இன்றைய காலகட்டத்தில் வணிகங்கள், சந்தைப்படுத்துதல் (Marketing) மூலம் பணத்தை வீணடிக்க விரும்புவதில்லை. விளம்பரத்தின் செயல் திறனை அதிகப்படுத்துவதும், முதலீட்டின் மீதான வருமானத்தை அதிகப்படுத்துவதும் இன்றைய வணிகத்தின் இறுதி இலக்காகும்.
தரவு பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவு சேகரிப்பில் (insight gathering) திறமையான இளைஞர்கள், வணிகங்கள் பணத்தை சேமிக்கவும், சிறந்த சந்தைப்படுத்துதல் (Marketing) உத்திகளை உருவாக்கவும், கொள்முதல் (Procurement) செயல் திறனை அதிகப்படுத்தவும், பெரு நிறுவன வளர்ச்சியை அதிகரிக்கவும், சந்தையில் போட்டியாளர்களிடமிருந்து தங்களை தனிப்படுத்தி காண்பிக்கவும் உதவுகிறார்கள்.
5) இணைப்பு சந்தைப்படுத்துதல் (Affiliate marketing):
இணைப்பு சந்தைப்படுத்துதல் (Affiliate Marketing) என்பது ஒரு டிஜிட்டல் செயல்முறையாகும். இதில் ஒரு நபர், மற்றொரு வணிகம் அல்லது தனி நபருக்கு சொந்தமான பொருட்களை விளம்பரப்படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இது ஒரு தயாரிப்பை, விளம்பரப்படுத்துவதற்கும், உங்கள் இணைப்பை கிளிக் செய்து வாங்குவதற்கு, வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் ஒரு முறையாகும்.
சமூக ஊடகத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய மற்றும் சிறந்த நெட்வொர்க்கிங் திறன்களை கொண்ட இளம் தொழில் வல்லுநர்கள், இந்தத் டிஜிட்டல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புதிதாக தங்கள் தொழில் முறை வாழ்க்கையை தொடங்கிய அல்லது கல்லூரி படிப்பை முடித்து வெளியேறும் இளம் தொழில் வல்லுனர்கள் இங்கு கண்ட இந்த டிஜிட்டல் திறன்களை மெருகூட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இது அவர்களின் தொழில்முறை வாழ்க்கைக்கு நிச்சயமாக உதவும்.
நன்றி!
குடந்தை சா. முகம்மது ஷாஹித்