Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பங்கும், இன்றைய தேவையும்.
Oct 27 2022 நாடும் நடப்பும்

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பங்கும், இன்றைய தேவையும்.

 

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பங்கும், இன்றைய தேவையும்.

 

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பங்கு:

"தன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம், வரலாறு படைக்கவே முடியாது" என்ற மால்கம் எக்ஸின் கூற்று போலவே, தன் நிலை மறந்து வீழ்ந்த இடம் அறியாமல், சிலந்திவலையில் சிக்கிய புழுவாய்த் துடிக்கிறது இஸ்லாமிய சமூகம்.

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் தடங்கள் வெகு அதிகமாகக்   காணக்கிடைக்கின்றன. அவற்றைத் தடமறியாமல் அழிக்கபாசிச சக்திகள்  பல்வேறு முயற்சிகள் செய்து கொண்டே இருக்கின்றது.      இதையெல்லாம், அமிலம்  வீசி  அழிக்க   வேண்டிய இஸ்லாமிய சமூகம், தங்களுக்கிடையே பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டுஎதிரிகளுக்கு நம்மை அழிக்கும் பாதையை அமைத்துக் கொடுக்கின்றது.  

வலிகளில் பெரிதானது ஒன்றை  இழப்பது. அதனினும் பெரிது அடையாளங்களை இழப்பது. இந்திய அரசியலில் தன் அடையாளங்களை வீதிகளில் தொலைத்து அந்த வலியைக்கூட  உணராமல், பல வருடங்களாகத் தன் காலங்களைக் கடக்கின்றது  நம் சமூகம்.

வரலாற்றிலும்,   வாழ்விலும் மறைக்கப்பட்ட உண்மைகளைத் தூசு தட்டி,   நம் சமூகத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவது நம் கடமை. அந்த வகையில் இந்திய அரசியலில் நம்முன்னோர்கள் பதித்துச்சென்ற அடையாளங்களை வரிசையாக பார்ப்போம்

மௌலானா அபுல் கலாம் ஆசாத் :

1888 -ம் ஆண்டுப் பிறந்த மௌலானாஅபுல் கலாம்ஆசாத்,1947-ம் ஆண்டு இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்று, 11 ஆண்டுகள் இத்துறை செம்மைபட பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை விரும்பாத இவர், இந்தியா எப்போதும் பன்முகக் கலாச்சாரச் சக்கரத்தில் சுழல ஆசை கொண்டார். தமது 35ஆம் வயதில்காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். சாகித்திய அகாடமி(1954), லலித்கலாஅகாடமி(1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல அமைப்புகளை மௌலானா அபுல்கலாம் ஆசாத் உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட   கல்வித்திட்டத்தில்இந்திய கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாகக் காணப்பட்டது. அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத், பல்கலைகழங்கள் உள்ளிட்ட மத்திய, மாநில கல்வி முறைகளில் பல மாற்றங்களைக் கொண்டுவந்தார்.

பதினான்கு வயது வரைஅனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டுமென்பதில் உறுதியாக நின்றார். பெண்கல்விதொழிற்கல்விப் பயிற்சி, வேளாண் கல்விதொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட பல துறைகள் மேம்படப் பல முனைகளில் முயற்சி மேற்கொண்டார்.

இந்தியா தன் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட  வேண்டிய தலைவைர்களில் மௌலானா அபுல்கலாம்  ஆசாத்தும் ஒருவர். அவர் தனது இறுதிக்காலம் வரை இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப்    பாடுபட்டார். இவரது பணிகளைக் கௌரவிக்கும் வண்ணமாக,  இவரின் பிறந்த தினத்தை "நாட்டின் கல்விநாள்” இந்தியா கொண்டாடுகிறது.

ரஃபி அஹமத் கித்வாய் :

உ.பி மாநிலம் பாராபங்கி    மாவட்டத்திலுள்ள மசாலி என்னும் கிராமத்தில்ஜமீன் குடும்பத்தில் 1894ஆம், ஆண்டு பிறந்த ரஃபி அஹமத் கித்வாய். நேரு தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களில் ஒருவர்ரஃபி அஹமத் கித்வாயின் நுட்பமான போக்கு,  அறிவார்ந்த    சிந்தனைநேருஜியை நல்ல முடிவுகள் எடுக்கத் துணையாக நின்றது. 1926ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நேருவின் தலைமையில் போட்டியிட்டு 38 இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ். இந்தத் தேர்தலில் அவுத் தொகுதியில் வெற்றியைத் தக்கவைத்த ரஃபி அஹமத் கித்வாய் மத்திய சட்டமன்றப் பேரவைக்குத் தேர்வு செய்யபட்டார். அரசியல் முதிர்ச்சி காரணமாக, 1926 முதல் 1929 வரை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற பேரவையின் கொறடாவாக நியமிக்கப்பட்டார்.. பண்டித ஜி.பி பந்த் தலைமயில், உ.பியில் நிறுவப்பட்ட அமைச்சரவையில்,   ரபி அஹமத் கித்வாய் சிறை மற்றும் நிலவருவாய்த் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்தத் துறையில் நிலக் குத்தகை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார்.   ஜமீன்தார் முறையை ஒழிக்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

1947 ஆம் ஆண்டு ரஃபி அஹமத் கித்வாயிக்கு நேருவின் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தனது பதவிக் காலத்தில் Night – Air- Mail      திட்டம்Own –Your –Telephone திட்டம் மற்றும்தபால்கரர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை எனப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துஅந்தத் துறை வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல புதிய பாதை ஏற்படுத்திக் கொடுத்தார்.

சந்தை விலைக்கும், அரசு நிர்ணயிக்கும் விலைக்குமிடையே மிகப்பெரிய  வேறுபாடு காணப்பட்டது. இதனால்மக்கள்குறைந்த விலையில் தானியங்களைக் கொள்முதல் செய்து அதனைப் பதுக்கிவைத்து வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதைக் கண்டார்.  அதனைத் தடுக்க, ரேசன் முறையில் உணவு தானியங்கள் விநியோகம் செய்வதைத் தடுத்து, பதுக்கி வைத்திருந்த தானியங்களை வெளிவரச் செய்தார்.

இவரின் நினைவாக டெல்லியில் ஒரு வீதி ரஃபி மார்க் என்று பெயர் சூட்டப்பட்டது. உ.பியில் இவரின்பெயரில் கல்லூரி ஒன்றும்பாராபங்கியில் இவரின் பெயரில் மருத்துவமனை ஒன்றும்செயல்பட்டு வருகிறது. லக்னோ மற்றும் டெல்லியில் இவருக்கு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

டாக்டர் ஜாகிர் ஹுசைன் :

1897 ஆம் ஆண்டு ஹைதரபாத்தில், பிறந்த டாக்டர் ஜாகிர் ஹுசைன். இந்தியாவின் மூன்றாம் ஜனாதிபதியாகப் பதவி ஏற்று  அந்தப் பதவிக்கு மணிமகுடம் சூட்டினார்..

நாட்டின் பிரிவினைக்குப் பிறகு அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவர்களுக்கு மத்தியில் நாட்டின் பிரிவினையை ஆதரித்தும், எதிர்த்தும் உருவான இரு அணிகளால் ஒருவித பதட்டமான சூழ்நிலை  உருவானது. அதனை முளையிலேயே கிள்ளியெறியச் செய்ய மௌலானா அபுல் கலாம் ஆசாத், டாக்டர்  ஜாகிர் ஹுசைனை  அலிகர் முஸ்லிம் பல்கலைகழத்தின் துணைவேந்தராக நியமித்தார்.

நாட்டுப்பற்று, நுட்பமான அறிவு  என்று பன்முகத்திறன்களைக் கொண்ட டாக்டர் ஜாகிர் ஹுசைன்,  1956 ஆம் ஆண்டு  நேரு ஆட்சி காலத்தில் ராஜ்யசபா உறுப்பினராக உருவெடுத்து தனது அரசியல் வாழ்விற்கு முன்னுரை எழுதினார்.  அரசியல் நுண்ணறிவு கொண்ட டாக்டர் ஜாகிர் ஹுசைனை, 1957 ஆம் ஆண்டு பீகார் மாநில ஆளுநர் பொறுப்பளித்து அழகு பார்த்தார் அன்றைய பிரதமர் நேருஜி.

இப்படி  துணை வேந்தர்மாநில ஆளுநர் போன்ற பதவிகளில் ஒளிர்ந்த டாக்டர் ஜாஹிர் ஹுசைனை, 1957ஆம் ஆண்டில்,   குடியரசு துணைத் தலைவர் பதவி கொடுத்து அவரின் சேவைக்கு மதிப்பளித்தார்  நேருஜி.  1967ஆம் ஆண்டில் இந்திராகாந்தி பிரதமராக இருந்த நேரம், இரண்டாம் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பதவிக் காலம் முழுமைப்பெற்றது.  அப்போது, ஆளும் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் ஜாகிர் ஹுசைன்   அத்தேர்தலில் பெருபான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கனியைப் பறித்து, இந்தியாவின் மூன்றாம் முதல்  குடிமகனாகப்  பதவியேற்று நம்பிக்கை   நட்சத்திரமாய் மின்னினார்.   தான் வகித்த அத்துணை பதவிகளிலும் வைரமாய் ஜொலித்து இந்தியாவிற்குப் பல முறியடிக்க  முடியாத சாதனைகளைச் செய்துள்ளார் என்பதை வரலாறு மறுத்துக் கூறாது.

கலீபுல்லா சாகிப்:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் என்ற ஊரில் 1888 ஆம் ஆண்டுப் பிறந்த கலீபுல்லா சாஹிப்  தமிழகத்தில்  தமிழின்றி வேறு மொழியை  அனுமதிக்க முடியாதென்று, ஹிந்தித் திணிப்பை கடுமையாகச் சாடினார். இராஜாஜி ஹிந்தியைக் கட்டாயமாக்கிய போது,  நான் இராவுத்தர் ,   என்  தாய்மொழி தமிழ் தவிர, உருது அல்ல என்று   முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவரான கலீபுல்லா அன்றே வீறுகொண்டு, முஸ்லிம்கள் தமிழர்கள் என்று மூர்க்கமாகப் பதிவு செய்தார்.

இவர் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையில் எப்போதும் சமரசம் செய்ததில்லை. 1937ஆம் ஆண்டு இராஜாஜி சென்னை மாகாணப் பிரதமராகப் பொறுப்பேற்றபின் முதல் சட்டசபை கூட்டத்தின் தொடக்கத்தில் வந்தே மாதரம்” பாடல் பாடவேண்டுமென்ற உத்தரவை எதிர்த்து, “இறைவனுக்கு இணையான இந்தப் பாடலை” ஒருகாலமும் இஸ்லாமிய உறுப்பினர்கள் பாடமாட்டார்கள் என்று சட்டசபையில் காட்டமாகக் கூறினார்.

காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப்:

காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் முஸ்லிம் லீகின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். இந்தியாவின் சமூக ஒற்றுமைக்கு மைல்கல்லாக இருந்தவர். இந்தியாவிற்கு எதிராக, சீனா   போர்   துவங்கிய நேரம். ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக இந்திய இளைஞர்கள்  ராணுவத்திற்குத்  தேவை  என்று  அழைப்பு  விடுத்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் கிருஷ்ணமேனன்.  அழைப்பைக் கேட்ட மறுகணம் தனது பாசமான   இளம் மகனை  நாட்டுக்காகத் தியாகம் செய்யப்  பரங்கிமலை  ராணுவமுகாமிற்கு அனுப்புகிறார்  காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப். இப்படி ஒருவரலாற்றை எந்த ஒரு தலைவரிடமும் காணமுடியாது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பற்றி   காயிதேமில்லத்  இஸ்மாயில் சாஹிப்  வெளியிட்ட அறிக்கைக்குப் பத்திரிக்கையாளர்கள் வினா  எழுப்பிய  சமயம்என்னிடம் இஸ்ரேல் முக்கியமா?  இஸ்மாயில் முக்கியமா? எனக்கேட்டால் இஸ்மாயில்தான் முக்கியம் என்பேன்" என்று தான் காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் மீது  வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தினார் பேரறிஞர் அண்ணா.

இந்திய அரசியலில்  யாரும் தொடமுடியாத  எல்லைகளைத்  தொட்டவர்   காயிதேமில்லத் இஸ்மாயில்  சாஹிப். 1946 முதல் 1952 வரை   சென்னை மாகாண  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர்,   1962 முதல் 1972 வரை   நாடாளுமன்ற மக்களவை  உறுப்பினர்   போன்ற பல பதவிகளை வகித்தார். கேரள மஞ்சேரி தொகுதியில் நடந்த தேர்தலில் நேரடி பிரச்சாரத்திற்குச் செல்லாமல் 3 முறை நாடாளுமன்றத்தின் படிகளைத் தொட்டவர் அவர்.

முஸ்லிம் லீக்கின் சென்னை மாகாணத் தலைவராகப் பணியாற்றி, தமிழகச் சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித்  தலைவராக   இருந்தபோதிலும் அரசு சரியாகச் செயல்பட ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அரசின் செயல்பாடுகளில் குறைபாடுகளைக் காணும்போது கடுமையாக எதிர்த்துமுள்ளார்.

முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிராகவும்முஸ்லீம்களின்  உயிரினும்  மேலான ஷரீஅத்துச் சட்டத்தை எதிர்த்து, சில நாடாளுமன்ற  உறுப்பினர்கள் உரையாற்றினால்எங்களின் உயிரினும் மேலான ஷரீஅத் சட்டத்தில் தலையிடாதீர்களென்று  நாடாளுமன்றத்தில்  தன் எதிர்ப்பைப் பதிவு செய்தவர் காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப் .

இப்படி,  இந்திய அரசியல்  வரலாற்றில் இஸ்லாமிய ஆளுமைகள் பல துறைகளில் பங்கு கொண்டு இந்தியாவை, உலக அரசியலுக்கே முன்னோடியாக மாற்றியமைத்துள்ளார்கள்.

இந்தியா முன்னேற்ற காற்றைச் சுவாசிக்க, முஸ்லிம்களின் பங்கு சீனச்சுவராய் நீளுகிறது. இந்தியா தன் அரசியல் வரலாற்றில் இஸ்லாமியர்களை, புறந்தள்ளி தன் வரலாற்றைப் பதிவு செய்தால், அந்த வரலாறு உயிரற்ற உடலாய் காட்சியளிக்கும்.

இன்றைய தேவைகள்:

வரலாற்றை மீட்டெடுக்க, புதிய வரலாறுகளைப் படைக்க, புரட்சிக்கரமான செயல் திட்டங்கள் தீட்டுதல்  வேண்டும். வீழ்வது  இயல்பு, அதிலிருந்து எழ  முயற்சிக்காமல் இருப்பது அறியாமைக்கு  அடகு  போனதிற்குச் சமம். சிக்கலுக்குள் வாழ்ந்தாலும், வேண்டாதவர்களிடத்தில் சிக்கிக்  கொள்ளாமல் வாழ, நமக்கு  சிலந்திவலை பாடம் கற்றுக் கொடுகிறது.  எழுச்சிக்கான பாதையைச் நாம்தான் சீர்செய்ய வேண்டும்.

அதற்காக   நாம்   தயாராகுவது,     அவ்வளவு   எளிதான  காரியமும்  அல்ல. சிரமத்தை சிறைப்பிடித்துச்    சிகரத்தைத் தொட, நாம் பயணிக்க வேண்டிய கால அளவு மிக அதிகம். அதற்கான  ஆயத்தப் பணிகளை    தொலைநோக்குப் பார்வையில்  பார்ப்போம்.

வலிமையான தலைமை:

வலிமையான தலைமை இல்லையென்றால் நண்டும், நத்தையும் காவடி எடுத்து ஆடும் என்று கிராமங்களில் ஒரு சொலவடையுண்டு. அது நிஜமாகி வருகிறது. நம் சமூகத்தில்.  இந்திய அரசியல் வரலாற்றில்  பல தூரங்கள் நாம் பயணித்தாலும்,   ஒரு வலிமையான தலைமை இல்லாமல், அரசியல் ரீதியாக, சமூக ரீதியாகச் சரியான முறையில் நம் சமூகத்தைக் கட்டமைக்க இயலாதவர்களாக இருக்கின்றோம்.

1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தி கொலைக்குப் பிறகு, ஏற்பட்ட கலவரத்தில் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அப்போது   கொல்லப்பட்ட  அனைவருக்கும்,  சீக்கியர்களின்   அரசியல் பிரிவான அகாலிதளம், நீதிமன்றத்தில் போராடி,   அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்றுக்கொடுத்தது. கோவை முதல் குஜராத் வரை இஸ்லாமியர்களுக்கெதிரான பல அடக்கு முறைகள் அவிழ்த்து  விடப்பட்டுப் பல்லாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் கிடைக்கவில்லை, கலவரங்கள் செய்தவர்களுக்கும் தண்டனையும் கிடைக்கவிலை. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் நாம் வலிமையான தலைமை பெறாமல் இருப்பதுதான்.

இந்த நிலை மாறவேண்டுமானால், இறையச்சமும்அரசியலறிவுப்பெற்ற  ஒரு வலிமையான தலைமைக்கான தேடுதல் வேட்டையை இச்சமூகம் முடுக்கிவிட வேண்டும்.

நாம் ஒன்று, இரண்டு தொகுதிகளைக் கேட்டு பெரும் முறையை ஒழித்து, ஒரு வலிமையான தலைமை அமைத்தல் வேண்டும்.  அந்தத் தலைவனிடம்  தொகுதி  ஒதுக்கீடு  பேச, மற்ற தலைவர்கள் வரும் காலம் பிறக்க வேண்டும். அப்போதுதான், அரசியல் அனாதைகளாக வாழும் நமக்கு வசந்த காற்று வீசும்.

ஈமான் என்ற ஒற்றைப் புள்ளியில்,  தன்னலம்  பாராமல் பொதுநலப்பார்வை கொண்ட ஓர் வலிமையான தலைமையின் கீழ் நாம் இணைந்தால், இந்தியாவை  வழிநடத்தலாம். இன்ஷா அல்லாஹ்.

அரசுப்பணிக்கான கல்வியறிவு:

ஒழுக்கம், பண்புநேர்மை, நீதி இவைகளை ஒருங்கிணைத்துக் கொண்டுவருவது கல்வி மட்டுமே. இந்த  உலகின் வாழ்வாதாரத்தின்  காரணியாகக்  கல்வி விளங்குகிறது. கல்விகற்பதை,   இறைவன்  தனது திருமறையில் கற்றுக்கொள் (اقرا) என்ற வசனம் மூலம் நமக்குக் கல்வியின் முக்கியத்துவத்தைப் பாடம் நடத்துகிறான்.

கல்வியைத்  தேடி செல்வது  கடமை என்று நபி (ஸல் ) அவர்கள் கல்வியின் தேடலை நமக்கு உணர்த்த, கடமை   என்ற பதம்  பயன்படுத்தி  நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.

வள்ளுவனும் தன் பங்கிற்குக்  கல்லாமை  என்பது  கண்  குருடுக்குச் சமம் என்கிறார்

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதவர்”

கல்விக்கான முக்கியத்துவத்தின் சுவடுகள் நம்முன் வந்து சென்றாலும், நமக்கும் கல்விக்குமான தூரம் வானம்,  பூமியாய்    நீண்டுக்கொண்டே செல்கிறது. கல்விக்கான விழிப்புணர்வு மிக மிகக்  குறைவாக இருக்கும் நம் சமூகத்திற்குகல்வி விழிப்புணர்வு மட்டுமே  நம்மின் அடிப்படைத் தேவை. ஆட்சி,  அமைப்பைப் பிடிப்பதை விடஆட்சியில் உள்ளவர்களை இயக்கும்  கல்வியாளர்களை உருவாக்குவது நாட்டை ஆளுவதற்குச் சமமான செயலாகும்.

இந்தக் குறைப்பாட்டைச் சமன் செய்யும் ஒரே வழிஒவ்வொரு  ஊர்களிலும் அந்த ஊர் ஜமாஅத்  சார்பாக,  IAS, IPS, GROUP1, GROUP2 போன்ற அரசுத் தேர்வுகளுக்கு  இலவசப் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்து,   நம் சமூக மக்கள் அரசு துறைக்குள் ஆளுமை செலுத்த வழிவகைச் செய்தல் வேண்டும். இவ்வாறு  செயல்பட்டால் வருங்காலத்தில் முக்கியத் துறைகளில் நம் மக்கள் திறன்மிக்கவர்களாக உருவாக வழிகள் கிடைக்கும். நம் வருங்காலத் தலைமுறைகள் அச்சமின்றிவாழஅவர்களை நீதித்துறை, காவல்துறை போன்ற முக்கியத் துறை சார்ந்தவர்களாகஉருவாக்குவதுகாலத்தின் கட்டாயம்.

ஊடகம்:

ஒரே சமயத்தில் உலகில் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம், பல தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் ஊடகத்தின் பணி மகத்தானதாகும்.    இதனை நன்கு உணர்ந்த பாஜக, ஒருசில ஊடகங்களைத்  தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, இஸ்லாமியர் மீது விஷக்கற்களை வீசி, இஸ்லாத்திற்கு  எதிராக மக்களை மூளைச் சலவை செய்து வருகிறது.

இஸ்லாத்தின் உண்மைத்தன்மை, நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி பல தரப்பு மக்களிடம் கொண்டு செல்ல,   நமக்கான  ஓர்  ஊடகத்தின்  அவசியம்  எற்பட்டுள்ளது. இந்த முயற்சியை மேற்கொள்ளாவிட்டால் ஊமையன் கண்ட கனவு போன்று மாறிவிடும் நம் வாழ்க்கை.

தலித் - இஸ்லாமிய கூட்டணி : கடந்த பிப்ரவரி 10 அன்று வெளிவந்த    ரோஸ்னாமா இன்குலாப்  என்ற தினசரி பத்திரிக்கை  “உத்திரப்பிரதேச தேர்தல்  முஸ்லிம்களுக்கான  பரிட்சை  என்ற  தலைப்பில் செய்தி ஒன்று வெளியிட்டது. இந்தத்  தலைப்பே  இந்தியாவில் முஸ்லிம்கள் சுதந்திரமாக வாழவில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது.

இனம், நிறம் மற்றும்  மதத்தின் அடிப்படையில், தேர்தல் நடைபெறக் கூடாது   என்பதே இந்திய ஜனநாயகத்தின் தேர்தல் விதி. இந்த  விதியெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு, இன்றைய  தேர்தல்  களத்தை மாற்றியமைத்துக் காவிகள் வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள். இந்த நிலையை மாற்றி அமைக்கும்  வலிமையான திறன், தலித்- முஸ்லிம்  கூட்டணிக்கு உள்ளது.

தலித் முஸ்லிம்  கூட்டணியைப் பலரும் தற்போது  முன்மொழியத்  தொடங்கிவிட்டார்கள். கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியான ரோஸ்னா சஹாபத்”    என்ற பத்திரிக்கையில் சூஃபி மதத்தலைவர் சையது ஆலம்கீர் அரபாஃத்  தலித் முஸ்லிம் கூட்டணி என்பது உண்மைநீதி, மனிதநேயத்தின் வெற்றியாக வர்ணிக்கின்றார்.

ஆக,   தலித்- முஸ்லிம்கள் இணைந்து மகா கூட்டணி அமைத்து,தேர்தலைச் சந்தித்தால் எதிர்க்கூட்டணி மரணப்படுக்கையில் இருக்கும்,  மதச்சார்பின்மை எழுந்து நடக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால்மதச்சார்ப்பின்மை என்பது வெறும் ஏட்டளவில் மட்டுமே உயிர்வாழும்.

இவைமட்டுமல்லாமல்இந்துத்துவா என்ற கொள்கையால், காவி நிறமாக இந்தியாவை வண்ணம் தீட்ட எத்தனிக்கும் பிஜேபியை எதிர்கொள்ள, ஈமான்,இறையச்சம் இவைகளைக் கொண்டு நம்மை நாமே புனரமைப்பதே இன்றைய நமது முக்கிய தேவை!

 

A.H. யாசிர் அரபாத் ஹசனி (லால்பேட்டை)

தொலைபேசி0556258851

Related News