காலமும் அதன் கோலமும்
மனித சமுதாயம் தோன்றி பல்லாயிரம் ஆண்டு காலம் ஆனபோதிலும் ஒரு முழுமையான காலம் என்றால் தற்பொழுது நாம் வாழும் காலத்தை குறிப்பிடலாம். சற்று சிந்தித்துப் பாருங்கள் ஆதிகாலத்தில் மனிதன் நிலை என்னவென்று நாம் அனைவரும் வரலாற்று ரீதியாக கேட்டும் வாசித்தும் அறிந்திருக்கிறோம். இன்றைய காலத்தில் நாம் அனுபவிக்கும் பலவிதமான சௌகரிய நிலையும் இல்லாமல் பல ஆண்டு பின் சென்று நாம் மூதாதையர் வாழ்ந்த நிலையை ஒரு நாள் அல்லது சில நாட்கள் அனுபவிக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்.ஆரம்ப காலத்தில் அவர்கள் உண்ட உணவு வகைகள்,உடுத்திய உடைகள், பேசிய வார்த்தை முறைகள், உறைவிடக்கூடங்கள் அப்பப்பா எண்ணிப் பார்த்தாலே விழி பிதுங்கும்.
கிட்டத்தட்ட இரு அல்லது மூன்று நூற்றாண்டுக்கு முன்பு வரை நிலை இதுதான்.உதாரணம்; மின்சாரம் 300 ஆண்டுகளுக்குள் உண்டான ஒரு சாதனம். இன்று, ஒரு நிமிடம் நகரமோ, வீடோ இருளில் மூழ்கி விட்டால் போதும் உலகமே இருண்டது போல் துவண்டு விடுகிறோம்.ஆனால், பல தலைமுறைகள் காணாத இந்த மின்சாரம் மட்டுமின்றி, பல அதிசய அற்புதங்கள்,இந்த கால மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.அதிகம் வேண்டாம் ஒரு 35 ஆண்டுகள் பின்னோக்கி சென்றாலே போதும் நாம் எப்படி வாழ்ந்தோம், என்ன மாதிரியான உடை உடுத்தினோம் உணவு, பள்ளி பாட நிலை புத்தகங்கள் (சுமையற்ற நிலை )கொண்டுச் சென்றதெல்லாம் அறியலாம்.
இந்த அனுபவம், பெரும்பாலும் பள்ளியில் மாணவர்கள் (ஏழை) அனுபவித்த சம்பவம் அரைக்கால் டவுசர் கிழிசலோடு சென்றதும்,அதைக் கண்டு சகமானவர்கள் தபால் பெட்டி( "போஸ்ட் பாக்ஸ் ")என கிண்டல் நக்கல் நையாண்டி செய்தது.பள்ளியில் சத்துணவு,சாலையோர தெருவோரம்,வீட்டில் தொங்கும் மரங்களில் இருந்து,காய்கனி, மாங்காய்,புளி,கொய்யா,நெல்லி ஆகியவை பறித்து அல்லது பொறுக்கி ருசித்தது. இது போன்ற காட்சிகளும், (கோலங்கள்) இப்போது பார்க்க முடிவதும் இல்லை.இனி வரும் தலைமுறை (next ஜெனரேஷன் )நம் பிள்ளைகளுக்கு இது போன்ற விடிவும் இல்லை. அன்று நாம் பிரதான சாலைகளில் நடக்கையில், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறைதான் பேருந்துகள் கண்ணில் சிக்கும்.இப்போது அரை நொடி கண்ணிமைப்பதற்குள் எத்தனை வாகனங்கள்? அன்று சாலையில் உறங்கிப் படுத்து கிடந்து உருளுவோம். இன்று, இது? அன்றெல்லாம் சினிமா தியேட்டர்கள் தான் திருவிழா கோலம் இன்று,அது (வீட்டுக்குள்) மாயவி(சாட்டிலைட்) உலகின் ஜாலம்.பெரியோர்களை பார்த்தாலே, அன்றெல்லாம் பார்வைகளில் பணிவு, பவ்யம். திருட்டுத்தனமாய் ஒரு பீடி பற்றவைப்பதாக இருந்தால் கூட, தந்தையின் நண்பர்கள் உறவினர்கள் யாரும் கண்காணித்து விட்டால் என்ற அச்சம் மேலோங்கியது.இன்று அது எல்லாமே துச்சம்.
அன்று வழிப்பறி திருட்டு கொள்ளை கற்பழிப்பு கொலை அனைத்துமே ஆச்சரியத்தின் விளிம்பில்.இன்று அது சர்வசாதாரணமாய் அச்சமற்ற நிலையில். குளத்தில் கிணற்றில் ஓடையில் என்று அவரவர் ஊரில் உள்ள வசதியை பொறுத்து அனைவரும் நீந்தி, குளித்து இணைந்து மகிழ்ந்து அனுபவித்த துண்டுநாம்.இவை அனைத்தும் இன்றைய சமுதாயத்தினருக்கு கேள்வியே. பெரியார்களைக் கண்டால் உள்ளிருந்து பிறக்கும் மரியாதை. வயதானவர்களை பார்த்தாலே,பேருந்தில், இருக்கை விட்டு தரும் மனம் இருந்தது. இதெல்லாம் இன்று நேர்மாறாக இருக்கிறது.
இதையெல்லாம் அனுபவித்த நாம், இன்றைய ஜெனரேஷன் அனுபவிக்கும் அனைத்து விதமான வசதிகளையும் (ஏடிஎம், போன் பே, ஜி பே, கிரெடிட் கார்டு பலவிதமான இருசக்கர வாகனங்கள், அக்காலத்தில் கற்பனை க்கு எட்டாத உயர்தரமான கார்கள்,கைப்பேசிகள் இன்னும் பல பல கற்பனைக்கு அற்ற நிகழ்வுகளை இருந்த இடத்திலயே இவை அனைத்தும் கண்டு ரசித்து அனுபவிக்கிறோம், அன்றைய தலைமுறையான நாம். ஆனால், இன்றைய தலைமுறையான நம் பிள்ளைகள் காணாத ஒரு மாபெரும் காலமும் அதன் கோலமும் நூலிலோ ஆவணப்படங்களிலோ பழைய திரைப்படங்களில் வாயிலாக காண நேரும் என்பது துரதிர்ஷ்டமே.