ரேஷன் கடைகளில் சிறுதானியம் விநியோகம்!
பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை மலிவு விலையில் பெற ரேஷன் கடைகள் தமிழக அரசால் நடத்தப்படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றும் பல குடும்பங்கள் ரேஷன் பொருட்களை மட்டுமே நம்பி வாழும் சூழல் உண்டு. இந்நிலையில் தமிழக உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்ரபாணி அதிரடியாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் மக்களுக்கு நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவாக இருந்த சிறுதானியங்களை ரேஷன் கடைகளின் மூலமாக விநியோகம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதன் முதற்கட்டமாக மக்கள்தொகை குறைவாக உள்ள நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விநியோகிக்கப்படும் எனக் கூறினார்.
இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபின் மக்களின் வரவேற்பை பொறுத்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் திட்டங்கள் மக்களை விரைவில் சென்றடையும் என நம்புவோம். அரசின் சிறுதானிய விநியோக திட்டத்தின் மூலம் நோயற்ற தலைமுறையை உருவாக்குவோம். அரசின் இத்திட்டத்தை வரவேற்போம்.