சமூக அநீதித் தீர்ப்பு சரி செய்யப்பட வேண்டும்! பேராசிரியர் ஜவாஹிருல்லா அறிக்கை
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சமூக நீதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை நீதிக்கும் இது எதிரானது.
இந்த வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சல்மான் குர்ஷித் இந்த வழக்கில் வாதிட்டார்.
இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்தின் மீது நிகழ்த்தப்பட்ட ஒரு தெளிவான தாக்குதலாகும். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பிதாமகர்கள் உருவாக்கி அளித்த முறைமைகளை முற்றிலும் புறம் தள்ளி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு முற்பட்ட சமூகத்தினருக்கு அவர்கள் மக்கள் தொகை அளவை விட அதிகமாக இடஒதுக்கீடு பெற்று தரும் அதே நேரத்தில் கிரீமி லேயர் அடிப்படையில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ள பெரும்பாலும் இந்து சமூகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்ட்ட மற்றும் பட்டியலின மக்களை வஞ்சித்து அவர்களது வாய்ப்புகளை தட்டி பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசமைப்பு அமர்வு இந்திரா சஹானி வழக்கில் இடஒதுக்கீடு வழக்கில் அளித்த தீர்ப்பில் உருவாக்கப்பட்ட முறைகளையும் ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு புறந்தள்ளியுள்ளது. எனவே மனிதநேய மக்கள் கட்சி இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யும்.
இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும் என்பதே தேச மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூடியுள்ளார்.