எப்படி அவனிடம் சொல்வதென்று எப்படி எப்படியோ யோசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்...!
அறியா பருவத்தில் பார்த்த திரைப்படங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் வந்து இருக்கிறதாவென யோசித்து குறிப்பும் எடுத்தாள்...!
எதுவும் அவள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் எடுத்த குறிப்பையெல்லாம் குப்பையில் தூக்கி போட்டாள்...!
குறுஞ்செய்தியாக அனுப்பிவிடலாம் என்றெண்ணி கைபேசியை பார்த்தவளை "கூறுகெட்டவளே குறுஞ்செய்தியில் கூற வேண்டிய விஷயமா இதுவென்று" கைபேசி திட்டுவதாய் உணர்ந்தாள்...!
நேரில்தான் சொல்ல வேண்டுமென்று முடிவெடுத்து நேரத்தை வேகமாக கடத்த முடியாமல் வேண்டுமென்றே வேண்டாத வேலைகள் எல்லாம் செய்து கொண்டிருந்தவளை வேடிக்கையாக பார்த்து சிரித்தது கடிகாரம்...!
வைகறை மறைய மக்ரிப் தொழுது தன்னை அறியாமல் கண்ணயர்ந்தவளை அழைப்பு மணி காதில் அறைய அறக்க பறக்க கதவைத் திறந்தவளிடம் அசதியாக இருக்கிறது உணவு வேண்டாம் உறங்க போகிறேன் என்று உள்சென்றான்...!
அசதியில் அசந்து உறங்கிக் கொண்டிருந்தவனை அருகில் அமர்ந்தபடி எழுந்திருக்கமாட்டானா என்று ஏக்கத்துடன் கண்கொட்டாமல் பார்த்திருந்தவளுக்கு மின்வெட்டு உதவ முன் வந்தது...!
மீண்டும் மின் இணைப்பு வருவதற்குள் புழுக்கமாக இருக்கிறதென்று புழுகி மொட்டைமாடிக்கு அவனை இழுத்துச் சென்றாள்...!
அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்டிருந்தவனிடம் எப்படி சொல்வதென்று தெரியாமல் எதையோ சொல்ல தொடங்கி கடைசி வரை எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்லாமல் நீ எதாவது சொல்லென முடித்தாள்...!
முடியை கோதி கொண்டிருந்தவளிடம் "நஸ்ரின் நம்மை தவிர மூன்றாவதாக யாரோ ஒருவர் இங்கு இருப்பது போல் இருக்கிறது" என்றான்...!
உணர்ச்சிவசப்பட்டவள் உடனே எதுவும் சொல்லாமல் மெதுவாய் அவன் கையை எடுத்து வயிற்றில் வைத்து "எல்லா புகழும் இறைவனுக்கே" என்றாள்...!