Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

ஆன்மாவின் கண்ணீர்
Nov 11 2022 ஆன்மீகம்

ஆன்மாவின் கண்ணீர்

ஆன்மாவின் கண்ணீர்

சில மாதங்களுக்கு முன் ஒரு ஜும்மா (வெள்ளிக் கிழமை சிறப்பு தொழுகை). தொழுகைக்கு பின் வீட்டுக்கு வந்து தனிமையில் இருந்த நான், சற்று அமைதியாய் இருக்கையில் அமர்ந்தேன். 'குர்ஆன் ஒதுவோம்' மனம் சொன்னதால், 'சரி' என்ற மனநிலையில் எடுத்து புரட்டினேன். "அல்மூஃமீனூன்"(நம்பிக்கையாளர்) என்ற அத்தியாயம் கண்ணில்பட்டது. அது முழுக்க அரபியில் இருந்தது. முதல் பக்கம், இரண்டு மூன்றுவென வாசிக்க வாசிக்க,

தன்னையறியாமல் கண்களில் சாரை சாரையாக நீர்த்துளிகள் எட்டிப் பார்க்க துவங்கியது. அன்று என்ன மனநிலையில் இருந்தேன். எதற்கு கண்களில் நீர் தேவையில்லாமல் இப்படி வழிகிறது என்ற குழப்பம்.

நீண்ட நேரம் சிந்தித்து பார்த்து பிடி கிடைக்காத பட்சத்தில் ஒன்றும் விளங்காத நிலையிலயே, உணவை முடித்து உறங்கி விட்டேன். அன்றைய நாளை விடையின்றியே கடந்து, அச்சம்பவத்தை மறேந்தேன்.

அவ்வபோது அதன் ஆச்சர்ய நினைவு வந்து போகும். அதன் அடிப்படையில் மற்றொரு சந்தர்ப்பத்தில் அதே அத்தியாயத்தை தமிழ் அர்த்தத்தை கொண்டு வாசித்தேன். என்ன ஆச்சர்யம். "அல்லாஹு அக்பர்" (இறைவன் மிகப் பெரியவன்). திரும்பவும் கண்கள் ஈரமாயின.

இறைவன் பேசுகிறான், "உறுதியாக நம்பிக்கையாளர்கள் வெற்றியடைந்து விட்டனர். அவர்கள் தம் தொழுகையில் பணிபவர்கள். வீணான செயல்களிலிருந்து விலகியிருப்பவர்கள். கடமையாக்கப்பட்ட கொடையையும் வழங்குபவர்கள்.

தங்கள் கற்புகளைப் பாதுகாப்பவர்கள். இப்படி ஆரம்பித்து, கிட்டத்தட்ட 118 வசனங்களை நோக்கி இறைச் சொல் நீள்கிறது. இதனிடையே ஓரிடத்தில் 12-முதல் 16 வரையுள்ள வசனம் மனிதனை, தான் உண்டாக்கிய விதத்தைப் பற்றி இறைவன் விளக்குகிறான். பாருங்களேன்!

"நாம் மனிதனைக் களிமண் சத்திலிருந்து படைத்தோம். பின்னர் அவனை விந்துத் துளியாக்கி ஒரு பாதுகாப்பான இடத்தில் (கருவறையில்) வைத்தோம். பின்னர் விந்துத்துளியை(க்) கருவறைச்சுவரில் ஒட்டிக்கொள்ளக் கூடியதாக்கினோம். பின்னர் அதை சதைப்பிண்டமாக்கினோம். சதைப்பிண்டத்தில் எலும்புகளை உருவாக்கினோம். எலும்புகளைத் தசையால் போர்த்தினோம். அதைனைப் புதிய படைப்பாக ஆக்கினோம். பேறுகள் எல்லாமுடைய அல்லாஹ் மிக சிறந்த படைப்பாளன். (மனிதர்களே!) அதற்குப்பின் உறுதியாக நீங்கள் இறக்கக் கூடியவர்களே. பின்னர் மறுமை நாளில் நீங்கள் எழுப்பப்படுவீர்கள்." இது குர்ஆன் வசனம்.

இதில் என்ன விளங்கியது?

அன்று நான் அரபியில் வாசித்தேன்.அர்த்தம் விளங்கவில்லை. ஆனால் கண்ணீர் வந்தது. இன்று, அர்த்தம் விளங்கியதால் கண்ணீர்.

'இறைவன் தன்னுடைய பணியை எப்படி செம்மையாக செய்துள்ளான் 'என்ற ஆச்சர்யத்தில், அவனுடைய வல்லமையை எண்ணி, அவன் கூறும் வரலாற்று பின்னணியை விளக்கும் முறையை கண்டு, இந்த மனித சமூகம் இப்படி நன்றி கெட்டத்தனத்தில் வாழ்கிறார்களே!' என்ற ஆதங்கத்தில், அல்லது கவலையில் கண்கள் குளமாயின .

"எதற்கு ஆதங்கம், கவலை?" நீங்கள் கேட்பது புரிகிறது. இப்போ உலகம் சார்ந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு விஞ்ஞானி, தான் கண்டுப்பிடித்த ஒரு பொருளை "நான்தான் இதை கண்டுபிடித்தேன். ஆனா யாரும் இதை நம்ப மாட்டேன் என்கிறார்கள் "என்றும், அதேப் போல் ஒரு திரைப்பட இயக்குனர் மீது இன்னொருவர் "இது என்னுடைய கதை நான் உருவாக்கிய திரைக்கதை என்னிடமிருந்து இதை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டார்" என்று புலம்பும் நிலை உணருங்கள்.

ஒன்று விஞ்ஞானி: 'என்னுடைய பொருள் நான்தான் இக்கண்டுபிடிப்புக்குரியவன் '

மற்றொன்று, 'என்னுடைய கதை, நான்தான் இக்கதைக்கு சொந்தக்காரன். இப்போது, இந்த மனநிலையில் ஒவ்வொரு மனிதரும் தன்னை அவ்விடத்தில் பொருத்தி பார்க்க வேண்டும். அப்போதுதான், அவனுடைய (இறைவன்) உணர்வை, படைப்பின் நோக்கத்தை, மட்டுமின்றி, வரிசையாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் தியாகங்களையும் புரிந்துகொள்ள முடியும்.

மனிதன் தன் இயலாமையை புலம்பி வெளிப்படுத்துவதுபோல், இறைவன் தன் இருப்பிடத்தை (ஏகன் ) நீங்கள் உணர்ந்து, உங்கள் ஆன்மாக்களை தூய்மைப்படுத்த, 'இந்த உலகத்தை நான்தான் படைத்தேன்.நான்தான் அரசன், அதிபதி, எஜமான் இரட்சகன், பாதுகாவலன் என வேதம் முழுக்க பல தளங்களில், பல நிலைகளில், பல முறையில் புலம்பி, எச்சரித்தும் கூறுகிறான்.

ஆனால், இந்த மனித சமுதாயம் செவிடன் காதில் சங்கூதிய நிலையில், இறைவன் கூறுவதுப்போல் செவியிருந்தும், செவிடர்களாய், கண்ணிருந்தும் குருடர்களாய், அறிவிருந்தும் அறிவில்லா நிலையில் திரிகிறார்கள். இன்னுமொருயிடத்தில், "இக்குர்ஆனை கொண்டு இவர்கள் சிந்திக்க வேண்டாமா?" என்கிறான். மனிதர்களே உங்களுக்கு கொடுத்த அறிவை கொண்டு சிந்தித்து,வாசித்து வாருங்கள். மனித உணர்வை மதிக்கும் நீங்கள் உங்களை செம்மையாக படைத்து பரிபாலிக்கும் இறைவனின் ஆற்றலையும், அவன் வழங்கிய எண்ணற்ற அருட்கொடைகளையும் எண்ணி நன்றியுனர்ச்சியின் வாசலில் நின்று அவனை தரிசித்து கீழ்படிந்து பாருங்கள்.

'ஆன்மாவின் கண்ணீர் ' தலைப்பை வைத்துவிட்டு அதைப்பற்றி பேசாமல் சென்றால் எப்படி?நான் கூற வந்த விசயம் இதுதான்.. தமிழில் அர்த்தத்தை உணர்ந்ததால், இன்று கண்ணீர் சிந்தினேன். அரபியில் அப்படி வாசிக்கும் பொழுது எப்படியென்ற கேள்விக்கு என்னுள் பிறந்த ஞான பதில், இதுதான். இன்று உணர்வின் மூலம் வந்தது. அன்று ஆன்மாவின் (அரபியில் ரூஹ்) உண்மையின் நிலையில் வந்தது என்று நான் நம்புகிறேன். ஆன்மாவிற்குண்டான தீனியை (இறையியல் சார்ந்தசெயல்கள்) முறையாக கொடுத்தால், தன் பணியை அதற்குண்டான தகுதிக்குட்ப்பட்டு நாம் உணராத நிலையில், தன்னை படைத்தவனுக்கு முன் அது சிரம் தாழ்த்தும். அப்படி ஒரு அனுபவம் தான் அக்கண்ணீர் நிகழ்வு.

இது ஞான மொழி. இது வார்த்தையில் உணர்த்துவது அல்ல ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையில் நிகழ்த்திப் பார்க்க வேண்டிய பெரும் முயற்சி. சாதாரணமாய் இது அமையுமா என்றால் பதில் இல்லை.

இன்னும் விவரமாய் கூறுவதாகவிருந்தால், இறைவனை கண்டுகொள்வதில் மனிதருக்குதான் பெரும் சிக்கலாகயிருக்கிறது. ஆன்மாக்களுக்கு அல்ல.தன்னை படைத்தவன் யார் என்று அது முழுமையாய் அறிந்திருக்கிறது. இறைவன், "நான் யார்" என்ற கேட்ட கேள்விக்கு உலகில் படைக்கப்பட்ட அத்தனை உயிர்களும் (மனித உருவற்ற ஆன்மாக்கள்) இன்னும் வரவிருக்கும் உயிர்கள் ஒரே குரலில் பதிவு செய்த வாக்கியம் 'அல்லாஹ்' (இறைவன்) என்பது குர்ஆன் வசனம் ஓரிடத்தில் உண்மைப்படுத்துகிறது. பாருங்கள் 7:172,

(நபியே!), உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுத்தண்டிலிருந்து அவர்களின் வழித்தோன்றல்களை வெளியாக்கி அவர்களுக்கு அவர்களே சாட்சியாக்கி "நான் உங்கள் இறைவன் அல்லவா?"என்று கேட்டான். அதற்கு அவர்கள், "ஆம்! இதற்கு நாங்களே சாட்சியாக இருக்கிறோம்", என்றனர்.

மறுமை நாளன்று "இதைப் பற்றி நாங்கள் எதுவும் அறிந்திருக்கவில்லையே" என நீங்கள் கூறக்கூடாது என்பதற்காகவே (உங்கள்) முன்னோர் அளித்த சாட்சியத்தை நாம் நினைவு படுத்துகிறோம்.

ஆனால், மனிதர்கள் அதை (ஆன்மாவை) தவறான வழிகாட்டி மூலம் கெடுத்து வைத்துள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. கண்ட விதமான உணவைவுண்டு தன் வயிற்றையும் உடலையும் கெடுத்து வைத்தது போல், தன் ஆன்மாவையும் மனிதர்கள் சீரழித்துள்ளனர். வீணான அனாச்சாரங்கள், கேடு கெட்ட கலாச்சாரம், குற்றங்கள், பாவங்கள் தவறான புரிதல்கள் மூலமென பல விதமான தப்பபிப்ராயங்கள்.

இப்படி, இன்னும் ஒவ்வொருவரும் தனக்கு அறிவைப்பெற்றும் பெறாத நிலையில் வாழ்வின் நோக்கமும் புரியாமல் இறை சார்ந்த சிந்தனையுமின்றி மறுமை பற்றிய அச்சமுமின்றி தீர்ப்பு நாளை மறந்தவர்களாக பெரும் சீரழிவை நோக்கி தயாராகி வருகின்றனர் ஒரு பிரிவினர் என்பது சோகத்துக்குரிய நிகழ்வே!

Related News