இந்தியப் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி!
அச்சிறுவன் தன்னுடைய சகோதர, சகோதரிகளில் இறுதியாக ஒன்பதாவதாக மும்பையில் பிறந்தான். அவனுடைய மூன்றாம் வயதில் தந்தையை இழந்ததால் முழுக் குடும்பமும் தாய்மாமன் அரவணைப்பில் வளர்ந்தனர். வீட்டின் கடைக் குட்டியான அச்சிறுவனுக்கு வீட்டில் எதுவும் வேலை செய்யச் சொல்லமாட்டார்கள். மும்பையின் கேத்வாடி பகுதியில் தன் வீட்டைச் சுற்றியுள்ள காடுகளில் சுற்றுவது ஒரு பொழுதுபோக்கு.
ஆண்டு: 1908. அவனுடைய 12 வயதில் வீட்டுக்கு அருகேயுள்ள காடுகளை சுற்றச் சென்றபோது கையில் ஒரு உண்டிக்கோலும் இருந்தது. அதைக் கொண்டு ஒரு பறவையைக் குறிபார்த்து அடித்ததில், அது காயம்பட்டு, கீழே விழுந்து, வலியுடன் துடித்து, இறந்தும் போனது. அவன் கண் முன்னே துடித்து இறந்தது, அவனை வெகுவாகப் பாதித்தது. அதைக் கையிலெடுத்தான் அச்சிறுவன். அதன் கழுத்துப் பகுதியில் மஞ்சள் நிறம் இருந்தது. இப்போது அவன் கண்முன்னே இருந்த உலகம் மாறியது. இதற்கு முன் கழுத்துப் பகுதியில் மஞ்சள் நிறமுள்ள பறவையை அவன் பார்த்ததில்லை. வியப்போடு பார்த்தான். அவனுள் ஆயிரம் கேள்விகள். 'இது என்னப் பறவையாக இருக்கும்?' என நினைத்தான். அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமே என்ற ஆவல் எழுந்தது. 'மாமாவுக்குத் தெரிந்திருக்கும்; வீட்டுக்குச் சென்று மாமாவிடம் கேட்கலாம்' என முடிவு செய்தான் அச்சிறுவன். கையில் அப்பறவையை எடுத்துக் கொண்டான். வீட்டுக்குச் சென்று மாமாவிடம் காட்டி, "இது என்னப் பறவை?" எனக் கேட்டான். அவருக்கும் தெரியவில்லை. ஆனால், அவர் ஒரு விடயம் கூறினார். "என்னுடன் வா! அருகே பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகம் - Bombay Natural History Society என்ற அமைப்பு உள்ளது.. அவர்களிடம் கேட்கலாம்" என்றார். ஒத்துக்கொண்ட அச்சிறுவன், அவனுடைய மாமாவுடன் அந்த நிறுவனத்தை நோக்கி நடந்தான். அந்தச் சிறுவன் அதை நோக்கி நடந்த அன்றிலிருந்து இந்தியப் பறவையியல் ஆய்வில் ஒரு முக்கிய அத்தியாயம் தொடங்கியது. அதை நோக்கி நடந்த அச்சிறுவன் வேறு யாருமல்ல.. 'இந்தியாவின் பறவை மனிதன்' எனப் போற்றப்படுகிற டாக்டர் சலீம் அலி.
பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகத்தில் மில்லர்ட் என்பவர் மூலம் அப்பறவையின் பெயர் மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி என அறிந்துகொண்டார். அவரிடமிருந்துதான் பறவைகள் பற்றிய பல தகவல்களை அறிந்துகொண்டார்.
பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகம் என்ற அந்த அமைப்பால் அவர் வளர்ந்தாரா.. அவரால் பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகம் மேலும் வளர்ந்ததா எனத் தெரியாத அளவுக்கு தன்னுடைய அர்ப்பணிப்பு மிக்க பறவையியல் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளால் அந்நிறுவனத்தை மேலும் வளர்த்தெடுத்தார். அது மட்டுமின்றி பறவைகள் வாழ்வு, இயற்கைப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகத் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டார்.
கல்லூரியில் படிக்கும்போது, தொழிலில் அண்ணனுக்கு உதவ பர்மா சென்றவரின் மனம் பறவைகளைச் சுற்றியே சிறகடித்தது. புதுப்புது பறவை மாதிரிகள், இறகுகளை சேகரித்தார். மீண்டும் மும்பை திரும்பி விலங்கியல் படித்தார். பின்னர், பாம்பே இயற்கை வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில் ‘கைடு’ - வழிகாட்டி வேலை கிடைத்தது.
சிறிது காலத்துக்குப் பிறகு, அந்த வேலையை விட்டுவிட்டார். பறவையியலில் அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஜெர்மனி சென்று டாக்டர் இர்வின் ஸ்ட்ராஸ்மனிடம் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.
தூக்கணாங்குருவியின் வாழ்க்கை முறை பற்றி 1930-ல் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு புகழ் பெற்றார். 1932-ல் ‘கேரளப் பறவைகள்’ என்ற நூலை எழுதி வெளியிட்டார். பறவையியல் தொடர்பான பத்திரிகை ஒன்றை நடத்தினார்.
தேசிய அளவில் பறவைகள் சரணாலயம் அமைப்பதில் இவரது தொண்டு மகத்தானது. பறவைகளின் நண்பனாக, பாதுகாவலராக விளங்கியதோடு, இயற்கை பாதுகாப்பிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்தார்.
பறவைகளின் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், இனப்பெருக்கம், வலசைபோதல் குறித்து ஏராளமான கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். ‘இந்திய, பாகிஸ்தான் பறவைகளின் கையேடு’ என்ற நூலை எழுதினார். ஒரு சிட்டுக்குருவியை வீழ்த்தியதிலிருந்து தன் வாழ்வில் ஏற்பட்ட பறவையியல் அனுபவங்களைத் தன்வரலாற்று நூலான ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ - Fall of a Sparrow என்ற நூலில் எழுதினார். மேற்கூறிய இருநூல்களும் உலகப் புகழ் பெற்றவை.
நாடு முழுவதும் சுற்றி, பறவைகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார். இவரது ‘இந்தியப் பறவைகள் பற்றிய கையேடு’ என்ற புத்தகம் மொத்தம் 13 முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.
தன்னை முதன்முதலில் ஈர்த்த சிட்டுக் குருவிகளைப் பற்றி ஒரு நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்: "பெண் சிட்டுக்குருவி முட்டையிடும். அதிலிருந்து குஞ்சு பொரிக்கும் வரை ஆண் சிட்டுக்குருவி கூட்டைப் பாதுகாக்கும். ஆண் குருவி இல்லையென்றால் என்ன ஆகும்? பெண் குருவியே கூட்டைப் பாதுகாக்குமா என அறிந்துகொள்ள ஒரு ஆண் சிட்டுக்குருவியை சுட்டு வீழ்த்தினேன். என்ன ஒரு வியப்பு? அந்தப் பெண் சிட்டுக்குருவியுடன் இணைசேரத் தயாராக இருந்த இன்னொரு ஆண் சிட்டுக்குருவி அந்த இடத்தைப் பிடித்து, கூட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தது. இவ்வாறான பல சுவாரஸ்யமான தகவல்களைத் தன் நூல்களில் பகிர்ந்துள்ளார்.
நாட்டில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தகவல்களை திரட்டத் தொடங்கியது இவர்தான். பத்மபூஷண், பத்மவிபூஷண் மட்டுமின்றி, பல நாடுகளில் இருந்தும் பல்வேறு விருதுகள், சிறப்பு பட்டங்கள், பரிசுகள் பெற்றுள்ளார்.
பறவைகளைப் பற்றி அறிந்துகொள்வதை பொழுதுபோக்காக இல்லாமல், வாழ்க்கைப் பணியாகவே மேற்கொண்டிருந்தார். மக்கள் இவரை ‘பறவைகளைப் பற்றிய நடமாடும் கலைக் களஞ்சியம்’ என்றே அழைத்தனர்.
பறவை ஆராய்ச்சி, இயற்கைப் பாதுகாப்பு ஆகிய பணிகளில் சுமார் 65 ஆண்டுகாலம் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட சலீம் அலி 92-வது வயதில் காலமானார்.