ராமநாதபுரம் மாவட்டம் கமுதியருகே கீழவலசை என்ற கிராமம் உள்ளது. அங்கு 500க்கும் மேற்பட்ட விவசாயக் கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில் பேருந்து வசதியில்லாததால், கிராம மக்கள் பேருந்துக்காக தினந்தோறும் கீழவலசையிலிருந்து நான்கு கிமீ தொலைவிலுள்ள செங்கப்படை என்ற கிராமத்திற்கும், அதேபோல் ஐந்து கிமீ தொலைவிலுள்ள பேரையூர் என்ற கிராமத்திற்கும் நடந்தே சென்று பின்னர் அங்கிருந்து பேருந்து பிடித்து, அருகிலுள்ள கமுதி போன்ற நகரங்களுக்குச் சென்று வந்துள்ளனர். இவர்களில் பள்ளி - கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் வேலைக்குச் செல்வோரும் அடக்கம். இதனால் கடந்த பல்லாண்டுகளாகத் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வந்த கிராமங்களின் கோரிக்கையை ஏற்று, விடுதலையடைந்த காலத்திலிருந்து இன்று கீழவலசை கிராமத்திற்கு பேருந்து வந்தது. இதனையடுத்து நெகிழ்ச்சியடைந்த அக்கிராம பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்தைக் கட்டியணைத்து வரவேற்பு அளித்ததோடு, பொதுமக்கள் அரசுப் பேருந்துக்கு மாலை அணிவித்து தேங்காய், பழம், ஊதுபத்தி வைத்து வழிபட்டு, பின்னர் பெண்கள் குலவையிட்டு ஆரவாரத்துடன் பேருந்தை வரவேற்றனர்.